‘அசுரன்’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துவரும் படம் கர்ணன். அதற்கு பெரும் குடைச்சல் கொடுத்திருக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ. ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக கருணாஸின் மகன் கென்னை நடிக்க வைக்க வெற்றிமாறன் பரிந்துரைத்தார். ஆனால் தயாரிப்பாளர் தாணு, கருணாஸுடன் ஏற்பட்ட கசப்பான அனுபங்கள் காரணமாக மறுத்துவிட்டார். இந்த சமயத்தில் தலையிட்ட தனுஷ், ‘கருணஸிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம், அதற்காக அவரது மகனை மறுத்தளிப்பது சரியல்ல’ என்று தாணுவிடம் எடுத்துக்கூறி, கென் நடிப்பதை உறுதி செய்தார் தனுஷ்.
இதற்கிடையில் ‘அசுரன்’ படத்தின் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி விநியோக உரிமையை தனது பினாமி மூலம் கைப்பற்றி வெளியிட்டாராம் கருணாஸ். மினிமம் கேரண்டி முறையில் படத்தை வாங்கி, முறையான டி.சி.ஆர்(டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்) கொடுக்காமல் ஏமாற்றியதுடன் அசுரன் மூலம் அந்த ஒரு விநியோகப்பகுதியில் மட்டும் 3.5 கோடி ரூபாய் வசூல் பணத்துக்கு கணக்குக் கொடுக்காமல் கேளிக்கை வரி செலுத்தாமலும் ஆளும் கட்சியுடன் சேர்ந்துகொண்டு கருணாஸ் தாணுவை ஏமாற்றினார் என்கிறார்கள்.
இந்த விவகாரம் விநியோகஸ்தர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடத்தியும் தீராமல் உள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பஞ்சாயத்தில் தனுஷ், வெற்றிமாறன் இருவரும் கலந்துகொண்டு முறையான டி.சி.ஆர் கேட்டிருக்கிறார்கள். இதில், கடுப்பான கருணாஸ் ‘நீங்கள் இருவரும் அமைதியாக இல்லாவிட்டால், உங்களின் அடுத்த படத்துக்கு முதல் சிக்கல் என்னாலும் எனது கட்சியாலும்தான் வரும். தாணு எனக்கு பணம் தர வேண்டியுள்ளது. இது அவருக்கும் எனக்குமான டீல்’ என்று மிரட்டிச் சென்றாராம்.
இதற்கிடையில் தனுஷ் தற்போது நடித்துவரும் கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் கசிந்து வைரல் ஆகி வருகிறது.
அந்த காட்சியில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல் நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதான் சமயமென்று கருணாஸ் நினைத்தாரோ என்னவோ, தனது முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பாக காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், “1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த தனுஷோ கருணாஸுக்கு போன்செய்து ‘கர்ணன் படத்துக்கு விளம்பரம் செய்து தருவதற்கு நன்றி. ஆனால் அசுரம் டி.சி.ஆர். வாங்காமல் விடமாட்டோம்’ என்றாராம்.