கோடம்பாக்கம் Corner

சமகால தமிழ் கவிஞர்களில் தவிர்க்கமுடியாதவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் திரைப் படங்களுக்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய பயணத்தில் 40 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கின்றார். அவரது கலைப்பயணத்தினைச் சிறப்பிக்கும் வகையில் அமைகிறது இந்தப் பகிர்வு.

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து 50 ஆண்டுகள் கழிந்துதான் வைரமுத்து கவிப்பேரசு வைரமுத்து, திரைப்பாடல் எழுத வருகிறார். அதில் அவருக்கிருந்த அறைகூவல்கள் என்னென்ன என்பது பற்றி , தனது ஆயிரம் பாடல்கள் நூலின் முன்னுரையில், தான் பாடல் எழுத வந்த சூழலை பின்வருமாறு விவரிக்கின்றார்.

“1931 ஆம் ஆண்டு தமிழ் சினிமா பேசத்தொடங்கியதென்றால் 1980 ஆம் ஆண்டு நான் பாட்டெழுத வந்தேன். எனக்கு முன்னால் ஐம்பது ஆண்டுகளைத் தின்றுதீர்த்திருந்தது திரைக் கலை. ஈராயிரம் ஆண்டு இலக்கியத்தை – சரித்திரத்தை – புராணத்தை – இதிகாசத்தை – உழைக்கும் மக்களின் உடைந்த முதுகெலும்புகளை – நடுத்தரவர்க்கத்தின் நிராசையை – காதலர்களின் பெருமூச்சை – கூட்டுக்குடும்பங்களின் கொண்டாட்டத்தை – அன்றாடக் கண்ணீரை – அரிதான புன்னகையை – மனித மனங்களின் அடுக்குகளை – இடுக்குகளைச் சொல்லிச் சொல்லித் தீர்த்துவிட்டு, ‘நீ என்ன செய்வாய் பார்ப்போம்’ என்று என்னைப்
பார்த்துக் கண் சிமிட்டியது காலம்.

என் கிராமத்துக் கீற்றுக் கொட்டகைகளில் கந்தர்வர்களாய் தேவர்களாய் விரிந்த கலையுலக பிரம்மாக்கள் நான் திரையுலகில் எட்டுவைத்தபோது சரித்திரம்படைத்த சலிப்பில் சற்றே சாய்ந்திருந்தார்கள்.
முதல் தலைமுறையிலும் மூன்றாம் தலைமுறையிலும் பாட்டுலகத்தைக் கட்டி ஆண்ட உடுமலை நாராயண கவியும், கண்ணதாசனும் நான் பாட்டெழுத வந்த மறு ஆண்டில்(1981) மறைந்து போனார்கள்.

தமிழின மீட்பு – கடவுள் மறுப்பு என்ற இலட்சியங்களோடு ‘பூமாலை நீயே’ – ‘வாழ்க்கை என்னும் ஓடம்’ – ‘காகித ஓடம்’ போன்ற புகழ்மிக்க பாடல்களை எழுதிய கலைஞர், பாடலாசிரியர்கள் உலகத்தைப் பங்கிட்டுக் கொள்ளவில்லை. வசனக் கோட்டையில் தனியாட்சி செலுத்திக் கொண்டே, இயக்கத்தைக் கட்டிக் காக்கும் திசையில் கலைஞர் திரும்பியிருந்தார். எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகியிருந்தார்; திரையுலகு துறந்திருந்தார். தன் நடிப்புக்குத் தீனியிட்ட பெரும்பாலான சமகாலப் படைப்பாளிகளை சிவாஜிகணேசன் இழந்திருந்தார். தங்கள் படங்களில் தமிழுக்குத் தங்க நாற்காலி இட்டுத்தந்த பீம்சிங், ஏ.பி.நாகராஜன் – பி.ஆர்.பந்துலு போன்ற இயக்குனர்கள்  மறைந்து போயிருந்தனர்.

எழுத வாய்ப்பு வந்து விட்டது; ஆனால் எழுத்துக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பட்ட வலியின் வெறியோடு எழுத வந்த எனக்கு, உழைக்கும் மக்களின் போராட்டம் சொல்லப் படங்களில் பொதுவுடைமை இல்லை. திராவிட இயக்கம் தந்த தினவுகளோடும் கனவுகளோடும் எழுத வந்த எனக்கு, படங்களுக்குள் சொல்லப் பகுத்தறிவு இல்லை. நான் கற்ற தமிழின் நீள அகலங்கள் நீட்டி முழக்கச் சரித்திரப் படங்கள் இல்லை. குடும்ப உறவுகளின் பெருமைகளாலும் சிறுமைகளாலும் வாங்கி வைத்த அனுபவத்தைக் கொட்டிமுழக்கக் கூட்டுக்குடும்பக் கதைகள் இல்லை. எனக்கு முன்னே கொடி
கட்டிப் பறந்த பெரும் பாடலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிடிமானம் இருந்தது.

மதுரகவி பாஸ்கரதாஸுக்கு சுதந்திரப்போராட்டம். பாபநாசம் சிவனுக்கு பக்தி. உடுமலை நாராயண கவிக்குப் பகுத்தறிவு. மருதகாசிக்கு வேளாண்மைக் கலாசாரம். பட்டுக்கோடை கல்யாணசுந்தத்துக்குப் பொதுவுடைமை. கண்ணதாசனுக்குத் தமிழ் அழகியல் கூடிய வாழ்வியல். வாலிக்குக் கதாநாயக அரசியல். இப்படி ஒவ்வொருவருக்கும் தத்தம் துறையில் ஆடிமுடிக்கத் தளம் தந்த தமிழ் சினிமா என்னைப் பார்த்து உள்ளடக்கமில்லாத உள்ளங்கை விரித்து ‘மகனே உன் சமர்த்து’ என்றது.

என் ஒரு கையில் தொல்காப்பியமும், நன்னூலும், யாப்பருங்கலக் காரிகையும், தண்டியலங்காரமும் தந்த இலக்கணமிருந்தது. என் மறுகையில் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், காளிதாசனும், தாகூரும், பாரதியும், பாரதிதாசனும், அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும், ஃபிர்தெளசியும், வால்ட்விட்மனும், கலீல் ஜிப்ரானும், பாப்லோ நெருடாவும், டி.எஸ்.எலியட்டும், எஸ்றாபவுண்டும்
தந்த இலக்கியமிருந்தது.

திராவிட இயக்கம் தந்த பகுத்தறிவுப் பாசமும் சோசலிசக் காதலும் நெஞ்சில் நிறைந்து நின்றன. என் வேலுக்கும் ஈட்டிக்கும் வேலை தராமல் காடுகள் வெறிச்சோடிப் போன சூழ்நிலையில் வேட்டைக்கு வந்தேன். இந்தச் சூழலில் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஏது வழி என்று யோசித்தேன். எனது பாடுபொருள் ‘மண்ணும் மக்களும்’ என்று தெளிந்து தேர்ந்தேன். அழியும் மனிதர்களின் உணர்வுகளைச் சொல்ல இயற்கை என்னும் அழியாப் பெரும்பொருளைத் துணைக்கழைத்துக் கொண்டேன்.

மரபுக் கவிதைகளின் கட்டமைதி – புதுக்கவிதைகளின் சொல்லாட்சி இரண்டையும் கூட்டி, கூறியது கூறாத ஒரு கூரியமொழி தயாரித்தேன். ஒரு பல்லவிக்கு உண்டான உழைப்பை ஒவ்வொரு வரிக்கும் கொடுத்தேன். கவிதைக்குப் பக்கத்தில் அமருமாறு பாடல்களின் பிடரிபிடித்தெழுதினேன். எழுத்துக்கு இசையமைக்கும் மரபே அற்றுப்போய் மெட்டுக்குத்தான் எழுத்து என்று ஆகிப்போன அவசரகதியில் இசையமைப்பாளர்கள் உடைத்துப் போட்ட சப்தங்களையும் அசை பிரித்து அலகுபார்த்து அழகு செய்தேன். அதுவரை ஆளப்பட்டிராத படிமங்களையும், பாட்டுக்குள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட சொற்களையும் பல நேரங்களில் இசையமைப்பாளர்களை நயந்தும் சில நேரங்களில் சினந்தும் இடம் பெறச் செய்தேன்.

வாய்ப்புகளின் சின்னச் சந்து பொந்துகளிலும் பகுத்தறிவு, சோசலிசம், பாட்டாளி வர்க்கம் என்ற என் இதயக் கனவுகளை ஈடேற்றினேன். எனது தலைமுறையில் பெரிதும் வளர்ந்திருந்த விஞ்ஞானத்தைக் காதல் பாட்டுக்குள் கவிதைப் படுத்தினேன். பாடினால் பாட்டு; படித்தால் கவிதை என்ற தகுதியை இசைத் தமிழ் பெறுவதற்காக மெட்டுக்களால் சிதைக்கப்பட்ட கடை இயைபுகளின் ஓரங்களை ஒழுங்கு செய்தேன்.

சங்க இலக்கியம் போன்ற தொங்கு சதையற்ற சொற்களையும், கம்பனைப் போன்ற வீறுணர்ச்சியின் விசாலத்தையும், பழமொழிகளைப் போல நெற்றியடித்துச் சொல்லும் நேர்த்தியையும் என் பாடல்களில் ஆண்டுபார்க்க ஆசைப்பட்டேன். என் ஆசை சில இடங்களில் நிறைவேறியது; பல இடங்களில் நிறம் மாறியது. ஆசை நிறைவேற்றும் திசையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

40 ஆண்டு காலப பொன் மாலைப் பொழுதுகள் குறித்து இன்னமும் சொல்லக் கூடும்...

 

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.