கோடம்பாக்கம் Corner

தமிழ் ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்த எம்ஜிஆர் நடிப்பில் 1966ல் வெளியான மாபெரும் வெற்றிப் படம் ‘அன்பே வா’. இது தற்போது டிஜிட்டல் முறையில் வண்ணம் கூட்டப்பட்டு வெளியாக இருக்கிறது. எம்ஜிஆரும், எம் ஜி ஆருடன் முதன் முறையாக ஏவிஎம் நிறுவனம் இணைந்ததுதான் இப்படத்தின் சிறப்பு. படத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் படமானது மற்றொரு சிறப்பு.

சிறிது காலம் பட தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த செட்டியார், இப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் மும்முரம் காட்டினார். திருலோகச்சந்தர் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. ஏவிஎம் செட்டியாரின் மூத்த மகன் எம்.முருகன் தயாரித்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நாகேஷ், மனோரமா நடித்தனர். 21 வாரங்கள் ஓடி வசூலில் சாதித்த படம்.

மேலும் ஏவிஎம் எந்த ஹீரோவுக்காகவும் கதை பண்ணினதே இல்லை. எம்ஜிஆர் நடித்த் ‘அன்பே வா’ படம்தான், ஹீரோவுக்காக ஏவிஎம் கதை பண்ணின முதல் படம்’’ என்று ஏவிஎம்.சரவணன் தனது வாழ்க்கை வரலாற்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏவிஎம்.சரவணன் கூறும்போது, “அப்பா (மெய்யப்பச் செட்டியார்) எப்போதுமே முதல்ல கதையைத்தான் ரெடி பண்ணுவார். கதைக்கான டிஸ்கஷன் போயிக்கிட்டே இருக்கும். கதைல எந்தக் குழப்பமும் இல்ல, எல்லாருக்கும் திருப்தியா வந்திருக்குன்னு முடிவான பிறகுதான் ‘சரி, யார்யாரையெல்லாம் நடிக்கவைக்கலாம்’னு பேச்சு வரும். அப்படித்தான் ரொம்ப வருஷமாவே படம் பண்ணிட்டிருந்தோம். ஒருநாள் அப்பா கூப்பிட்டார். ‘என்னப்பா, டிஸ்டிரிபியூட்டர்கள் எல்லாரும் ஏவிஎம் இன்னும் எம்ஜிஆரை வைச்சுப் படமே பண்ணலியேனு கேக்கறாங்க’ன்னு சொன்னார்.

‘எங்களுக்கும் அந்த எண்ணம்தான். ஆனா உங்ககிட்ட சொல்றதுக்கு தயக்கமா இருந்துச்சு. டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் ஒரு கதைப் பண்ணிவைச்சிருக்கார். கேட்டுட்டுச் சொல்லுங்கப்பா’ன்னு சொன்னேன். இதுக்கு நடுவுல, நடிகர் அசோகன், எப்பப் பாத்தாலும் ‘எம்ஜிஆரை வைச்சு ஒரு படம் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அதேபோல எம்ஜிஆர்கிட்ட, ‘ஏவிஎம்முக்கு ஒரு படம் பண்ணுங்களேன்’ன்னும் சொல்லிக்கிட்டே இருந்தார் அசோகன். அப்பா கதையைக் கேட்டாரு. ‘சரி, சின்னவர்கிட்ட (எம்ஜிஆர்) கதையைச் சொல்லுங்க’ன்னாரு அப்பா.

உடனே நான், திருலோகசந்தர், ஆரூர்தாஸ் எல்லாரும் போய், கதையைச் சொன்னோம். முழுக்கதையையும் கேட்ட எம்ஜிஆர், ‘இது என் படம் இல்ல. என் ஃபார்முலா எதுவுமே இந்தக் கதையில இல்ல. அம்மா கேரக்டர் இல்ல. தங்கச்சி கேரக்டர் இல்ல. சண்டைக்காட்சிகள் கிடையாது. இது ஏ.சி.திருலோகசந்தர் படம்’னு சொன்னார். ஆனா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார்.

ஆனா, இதுவரைக்கும் எந்தவொரு நடிகருக்காகவும் ஏவிஎம் கதை பண்ணினது இல்ல. கதை பண்ணுவோம்; அதுக்கு யாரு பொருத்தமோ, அவரை ஹீரோவாப் போடுவோம். இத்தனைக்கும் ‘அன்பே வா’ படத்து கதையை எம்ஜிஆருக்காகத்தான் யோசிச்சோம். ‘ஒருவேளை எம்ஜிஆருக்கு கதை பிடிக்கலேன்னா, ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் வைச்சு எடுக்கறதா முடிவு பண்ணிருந்தோம். ஆனா, எம்ஜிஆர் நடிக்க சம்மதிச்சாரு. ஏவிஎம் தயாரிப்புலயும் சரி, எம்ஜிஆரோட கேரியர்லயும் சரி... ‘அன்பே வா’ திரைப்படம், வித்தியாசமான வெற்றிப்படம்” என்று சொல்லியிருக்கிறார் சரவணன்.