கோடம்பாக்கம் Corner

திருமணத்துக்குப் பின் சமந்தா நேரடித் தமிழ்ப் படம் எதிலும் நடிக்கவில்லை. அவர் தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன. அவர் நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக் தமிழ்நாட்டில் நேரடியாகவே வெளியானது . இந்நிலையில் தற்போது நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் சமந்தா.

‘கேம் ஓவர்’ படத்துக்குப் பிறகு, அஷ்வின் சரவணன் இயக்கும் படத்தில் சமந்தா நாயகியாகவும் பிரசன்னா முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கின்றனர். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் சமந்தா முதல்முறையாக பேயாக நடிக்கிறார் என்ற நம்பகமாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் வட இந்தியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். மார்ச் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும்.

இது தவிர 'நானும் ரவுடிதான்' இயக்குநர் விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா கூட்டணி இணைந்து மீண்டும் நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் ஒரு கௌரவக் கதாபாத்திரம் ஏற்று நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.