கோடம்பாக்கம் Corner

கே.எல்.விஜய் இயக்கிவரும் ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துவருவது அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஐந்து எழுத்தாளர்களில் ஒருவராக பணிபுரிந்த அஜயன் பாலா என்பவருக்கு ஊதியப் பிரச்சினை உருவாகி அதுவொரு முடிவுக்கு வந்திருக்கிறது.

ஆனால் ஊதியப் பிரச்சினையைக் கிளப்பிய எழுத்தாளரோ, ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் சுமார் 8 ஆண்டுகள் ஆய்வு செய்து திரைக்கதை எழுதி வைத்திருந்த ஒரு எழுத்தாளரிடமிருந்து வாங்கிப்படித்து டீமில் இணைப்பதாகக் கூறிவிட்டு, அந்தத் திரைக்கதையிலிருந்தே நிறைய ஆட்டையப் போட்டு கொடுத்துவிட்டாராம். அந்த எழுத்தாளரும் விரைவில் பிரச்சினையைக் கிளப்புவார் என்கிறார்கள்.

எழுத்தாளர்களுக்குள் முதுகில் குத்திக்கொள்ளும் இந்தக் கூத்துக்கள் ஒருபக்கம் இருக்க, ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கேரக்டரில் நடிக்க மதுபாலா ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘ரோஜா’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அரவிந்த் சுவாமியும் மதுபாலாவும் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இதைவிடச் சுவரஸ்யம் சசிகலா கேரக்டரில் யார் நடிக்கிறார்கள் என்பதுதான்! முதலில் சசிக்கலாவாக நடிக்க ஒப்புக்கொண்டாராம் பிரியாமணி. ஆனால் அவரது உறவினர்கள் தரப்பில் ‘இந்தக் கேரக்டரில் நடித்தால் பாவத்தை எங்கே கழுவுவாய்’ என்று கிளப்பிவிட, பயந்துபோன பிரியாமணி கால்ஷீட் பிரச்சனையைக் காரணம் காட்டி விலகிக்கொண்டாராம். தற்போது சசிகலா கேரக்டரில் நடிக்க, சசிகலா யரென்றே தெரியாத பூர்ணா ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறது படக்குழு.