கோடம்பாக்கம் Corner

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் எனப்படும் இணைய திரைப்படங்கள் துறை, கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து இன்று அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதன் அபரிமிதமான வளர்ச்சிக்கு கொரோனா காலம் கைகொடுத்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க, ஒரு திரைப்படத்தை திரையரங்கு சென்று மிகப்பெரிய திரையில் பார்ப்பதில் கிடைக்கும் திரையரங்க அனுபவம் என்பது நிச்சயமாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் கிடைக்காது. அப்படியானால் திரையரங்குகள் எந்தக் கலத்திலும் அழிந்து போக வாய்ப்பே இல்லை என்ற கூற்றை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அடுத்து வரும் 2 வருடங்களுக்கு திரையரங்குகளுக்கு எதிர்காலம் என்பதே இல்லை என திட்டவட்டமாக சில தயாரிப்பாளர்களும் திரையரங்குகளை நடத்துபவர்களும் நம்மிடம் தெரிவித்தனர்.

அவர்கள் அப்படிக் கூறக் காரணம் இருக்கிறது. அதேநேரம், சினிமாவையும் வெகுஜன மக்களையும் பிரிக்கவே முடியாது என்பதே உலகம் முழுவதுமான வாழ்க்கையாக இருந்து வந்தது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. சினிமாவை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே வைத்திருக்கும் தமிழகத்தில், கடந்த இரண்டு மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக பூட்டிக் கிடக்கின்றன திரையரங்குகள். கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. இந்த எதிர்பாராத மூடலின் விளைவாக, ஆயிரக்கணக்கான திரையரங்கு ஊழியர்கள் வேலை இழந்து வயிற்றுப் பாட்டுக்கு சிரமம் என்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் சமீபத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, பல மாவட்டங்களில் திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களிடம் பல திரையரங்க உரிமையாளர்கள் கேட்டும் வருகிறார்கள்.

அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. நிபந்தனைகளுடன் கூடிய இந்த அனுமதியை தொடர்ந்து, தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்பையும் நடத்திக்கொள்ள டிவி தொடர் தயாரிப்பாளர்கள், டிவி நடிகர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறது. இதையொட்டியே ஊரடங்கு தளர்த்தப் பட்ட மாவட்டங்களில் திரையரங்குகளை திறக்க அனுமதி கோரி நிற்கிறார்கள். அப்படியே அனுமதி வழங்கப்பட்டாலும் முன்பைப் போல் ரசிகர்களை திரையரங்குக்கு வருவார்களா என்ற கவலை, திரையரங்கத்தை நடத்துபவர்களுக்கு மட்டுமல்ல படத்தயாரிப்பாளர்களுக்கும் படத்தை வாங்கி விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் கூட இருக்கிறது. கரோனாவால் வீடடைந்து கிடக்கும் மக்களிடம் துளி வருமானம் இன்றி இருப்பதால் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. அன்றாட செலவுக்கே சாமானிய மக்கள் கஷ்டப்படும் நிலை. இதனால், கடன் வாங்கியும் நகைகளை அடமானம் வைத்தும் செலவு செய்து வருகிறார்கள்.

கரோனா காலம் சில மாதங்களில் முடிந்து, இயல்பு வாழ்க்கை தொடங்கினாலும் பள்ளி கட்டணம் செலுத்தவும் குடும்பத்தை நடத்தவும் வாங்கிய கடனையும், வாங்கப்போகும் கடனையும் அடைக்கவே மக்கள் விரும்புவார்கள். அதனால் திரையரங்க பொழுதுபோக்கின் மீது மக்களின் கவனம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு செல்லுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் நாம் பேசிய, தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்களின் இந்தக் கவலை மிக நிதர்சனமானது. இதனால் திரையரங்குகளை திறந்தாலும் பயன் இல்லை என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது. காரணம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு 10 ஆயிரம் ஆண்டு வருமாணம் உள்ள குடும்பங்கள் மட்டுமே 4.5 கோடி பேர். இவர்கள் அனைவரும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்தே திரையரங்கு வரும் பார்வையாளர்களின் விகிதமும் அதிகம். இக் குடும்பங்கள் திரையரங்கிற்கு மாதம் ஒருமுறை படம் பார்க்கும் பழக்கம் உடையவர்கள். இவர்கள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு திரையரங்கு பக்கம் வரமாட்டார்கள் என்பதே உண்மை என்கிறார் திரையரங்கின் பாக்ஸ் ஆபீஸ் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் பணியைச் செய்துவந்து தற்போது வேலையை இழந்திருக்கும் 35 வயது இளைஞரான சுந்தர்.

உண்மை இப்படியிருக்க, இந்திய அரசின் 20 லட்சம் கோடி நிவாரணம் என்பது, ஏழைகள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் நடுத்தர மக்கள் என தேவையுள்ள யாருக்கும் அவர்களிடம் நேரடியாக நேரடியான பண உதவியாக கிடைக்காத காரணத்தால் பொருளாதாரம் இன்னும் மந்த நிலையை எட்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. மேலும் கொத்துக் கொத்தாக வேலை இல்லை வேலை இழப்பை சாமானிய மக்கள் சந்தித்து வருகிறார்கள். சென்னையின் பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் சில்க்ஸ் தனது ஊழியர்களில் 800 பேரை வேலை இல்லை என்று கூறி நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. இன்னும் வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், திரையரங்குகள் வரும் ஜூலை மாதம் திறக்கப்பட்டால் கூட பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டாலும் முதல் மூன்று நாட்களுக்கு அதிக கட்டணம் வைத்து பிளாட்டில் டிக்கெட்டுகளை விற்க முடியுமா என்ற சந்தேகமும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உருவாகிவிட்டது.

இதனால் திரையரங்குகளின் எதிர்காலம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருப்பதாக திரையரங்குகளை நடத்தி வருபவர்களும் தயாரிப்பாளர்கள் பலரும் தெரிவித்தனர். திரையரங்குகளின் எதிர்காலம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு கேள்விக்குறியாகி இருப்பதற்கு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் அசுர வேகத்தில் செயல்பட்டு மக்களை தன்பால் ஈர்க்க பிரயத்தனங்கள் செய்துவருவதும் ஒரு காரணமாக இருக்கிறது. பல்வேறு மொழிகளில் தயாரான சிறந்த படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், குறும்படங்கள், மாணவர்களின் கல்வி கற்பதற்கான காட்சி ஆவணங்கள் போன்றவை ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் மிகக் குறைந்த கட்டணத்தில் மலைபோல் குவிந்திருப்பதால், அவற்றின் மூலம் தங்கள் பொழுதுபோக்கு உணர்வை தங்களுக்கு கட்டுப்படியாகும் விதத்திலும் திரையரங்கு போய் கரோனாவை இலவச இணைப்பை வாங்கி வர வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுடனும் தங்கள் பொழுதுபொக்கு தாகத்தைத் தனித்து கொள்ளும் பழக்கத்திற்கு மிகத்தீவிரமாக தங்களை உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்குகள் திறக்கப்படும் வேளை வரும்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் மீதான மோகம் குறைந்தால் அன்றி திரையரங்குகளுக்கு மக்கள் முன்புபோல் படையெடுத்து வருவார்களா என்பது சந்தேகம்தான்.

- 4தமிழ் மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.