கோடம்பாக்கம் Corner

ரசிகர்களும் திரையுகலகமும் வழங்கிய ‘புரட்சித் தமிழன்’ என்ற பட்டத்தை ‘வேண்டாம்’ எனத் துறந்தவர் நடிகர், பகுத்தறிவுவாதி, தமிழ்தேசியர் என பல அடையாளங்களைக் கொண்ட நடிகர் சத்யராஜ்.

அவர் நடிக்க வந்து 42 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ஒரு ஹேஷ்டேக் போட்டு சமூக வலைத்தளத்தில் பதிந்திருக்கிறார் அவரது மகனும் நடிகருமான சிபிராஜ். அது உண்மைதானா?

தயாரிப்பு நிர்வாகி ரங்கராஜ்

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து வந்துள்ளார் சத்யராஜ். பிறகு கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பை நேரில் கண்டார். அப்போது, அப்படத்தின் கதாநாயகன் சிவகுமாருக்கும், படத்தின் தயாரிப்பாளர் திருப்பூர் மணியனுக்கும் ஊரும் உலகமும் கொடுத்த ராஜ மரியாதையைப் பார்த்து தாமும் திரையுலகில் நுழைய வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார். அதையொட்டி கோமல் சத்தியநாதன் நாடகக் குழுவில் சேர்ந்த அவர், ‘கோடுகள் இல்லாத கோலங்கள்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அக்கதாபாத்திரம் பற்றி யாருமே பேசாத காரணத்தால், சென்னை வந்து, ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ உள்ளிட்ட பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக வேலைசெய்துகொண்டு அவ்வப்போது ஒரு சில சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.


ஒரே நாளில் சண்டை கற்றவர்

சத்தியராஜின் தொழில் நேர்மையைக் கண்ட தயாரிப்பாளர், இயக்குநர் டி.என்.பாலு இயக்கிய ‘சட்டம் என் கையில்’ படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார் சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார். அந்த படம் வெளியாகி 42 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜிடம் கேட்டப்போது மனம்விட்டு சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ‘விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்’ என்றார். நானும் எப்படியாவது நடிகனாகப் புகழ்பெறும் நேரத்துக்காகத்தான் காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு வசனம் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள். இந்தப்படத்தில் இயக்குநர் எனக்கு கொடுத்த முதல் வசனம் ‘எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு’. வில்லனுக்குப் போய் இப்படியொரு வசனமா என்று உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கான பழி கதாநாயகன் மேல் விழுந்துவிடும். அதனால்தான் அந்த வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.

ஏற்கனவே இயக்குநர் டி.என்.பாலு என்னிடம், ‘பைட் தெரியுமா?’ என்று கேட்டபோது, எங்கே சான்ஸ் போயிடுமோன்ன்னு ‘தெரியும்’ என்று சொல்லிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த ‘ஜெய்’ கார்டன் என்ற படப்பிடிப்பு தளத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். எனக்கோ உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. எனக்குத்தான் சினிமா பைட் தெரியாதே என்று நடுங்கினேன். ஒரு கட்டத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது உதவியாளரை எனக்கு சண்டை கற்றுக்கொடுக்க மெரினா கடற்கரைக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர்தான் பீச் மணலில் எனக்கு சினிமா சண்டைக் கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடி வாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் ‘டைமிங்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் எனக்கு ஒரே நாளில் சண்டைக் கற்றுக் கொடுத்துவிட்டார்.

கமலுடன் மோதல்

மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது. பொதுவாக, சண்டைக் காட்சியின்போது கைக்கடிகாரம் கட்டிக்கொண்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் ஹெச்.எம்.டி கடிகாரம் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப்பார்த்ததும் ‘அடடா.. உங்களிடம் முதலிலேயே யாரும் சொல்லவில்லையா. கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டல்லாவா சண்டைக்காட்சியில் நடிக்கனும்.. உங்கள் வாச் என்று தெரியாதே’ என்றார்.

இப்படி 600 ரூபாய் கடிகாரத்தை உடைத்துவிட்டு, நடிப்புக்கு ஊதியமாக 500 ரூபாய்க்கு காசோலை வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக வங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் ஐந்து தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன். அந்தப் படம் நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது. இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் ‘சத்யராஜ்’ என்று வரும். நிர்வாகிகள் டைட்டில் வரும்போது அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும். இப்படி ஒரே படத்தில் எனக்கு இரண்டு டைட்டில்கள் வந்தன.

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். அந்த சத்யனில் இருந்து ‘சத்ய’வையும் ரெங்கராஜில் இருந்து ‘ராஜை’யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன். ‘சட்டம் என் கையில்’ படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து எனக்குப் பட வாய்ப்புகள் குவியும் என்று நினைத்தேன். ஆனால் வாய்ப்புகள் எதுவுமே வரவில்லை. அண்ணன் நடிகர் சிவகுமார் பரிந்துரையில் ‘முதல் இரவு’, பி.மாதவன் இயக்கிய ‘ஏணிப்படிகள்'’ போன்ற படங்கள் கிடைத்தன. ‘ஏணிப்படிகள்’ படத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. என்னை மக்களிடம் கொண்டு சேர்த்த படம் இதுதான். இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு வேலையும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் ‘பைக்’ துரத்தல் காட்சியில், அவருக்கு நான் ‘டூப்’ ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த துரத்தல் காட்சியில் பயமின்றி சிறப்பாக நடித்தேன். இப்படி எதையும் துணிந்து செய்துவிடும் போராட்ட குணத்தால் பிஸியான நடிகனானேன். பிரபமான நடிகனாகபிறகும் வில்லத்தனமான வேடங்களே அதிகமாக வந்தன. அதிலும் ‘கொஞ்ச நேரம்’ வந்துபோகும் துக்கடா வில்லன் வேடங்கள்தான் அதிகம். இதையெல்லாம் கடந்தே இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்” என்று மனம்விட்டுப் பகிர்ந்தார் சத்யராஜ்.

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.