கோடம்பாக்கம் Corner

அரசியல் கட்சிகளில்தான் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் அவர்கள் படுகொலை செய்யப்படுவது வழக்கம். ஆனால், சினிமா ரசிகர் மன்றத்திலும் இந்த அசம்பாவிதங்கள் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவர் மணிகண்டன். அவருக்கு வயது 36. இவர் நேற்று இரவு 11 மணியவில் தனது இருசக்கர வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட் எதிரே பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிகண்டனை வழிமறித்து நிறுத்திய கையோடு அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை போலீஸார் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த மணிகண்டனை மீட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மணிகண்டன் உயிரழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த உருளையன்பேட்டை போலீஸார், கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடத் தொடங்கினர். நெல்லித்தோப்பு சுப்பையா சாலையில் இருந்து மீன் மார்க்கெட் வரை தெருவிளக்கு எரியவில்லை. இந்த இருளைச் சாதகமாக்கி மணிகண்டனை மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் மணிகண்டன் மீது ஏற்கெனவே மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட வெவ்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா ? அல்லது கொலைக்குக் கொலை பழி வாங்க கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொலையான மணிகண்டனின் மனைவி விஜயகுமாரி உருளையன்பேட்டை போலீஸாரிடம் இன்று தந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவரான மணிகண்டனின் உறவினர் ராஜசேகர். இருவருக்கும் இடையில் மன்றத்தில் பதவிப் போட்டியால் மோதல் நிலவியது. அதனால் ராஜசேகரை மன்றத்திலிருந்து மணிகண்டன் நீக்கியுள்ளார். அதையடுத்து ராஜசேகர் போட்டிக்காக ஆட்டுப்பட்டி பகுதியில் ரசிகர் மன்றத்தை நடத்திவருகிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கான சமாதானப் பேச்சுவார்த்தை அண்ணா திடலில் நேற்று நடந்துள்ளது. அப்போது இரு மன்றமும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படாத நிலையில் மணிகண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற சிலர் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டனர்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.