கோடம்பாக்கம் Corner

‘எந்திரன்’ கதைத் திருட்டு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்ட இயக்குநர் ஷங்கருடன் கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறார் வெகுஜனத் தமிழ் எழுத்தாளரான ஆரூர் தமிழ்நாடன்.

நீதிமன்றமும் அவர் பக்கம் நின்று தோள் கொடுத்துவருகிறது. இயக்குநர் ஷங்கர் நழுவிக்கொண்டே செல்லும் சூழ்நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடனை தொலைபேசியில் பிடித்தோம் மனிதர் குமுறித் தீர்த்துவிட்டார்.

“கடந்த 1996 ஏப்ரல் மாதம் நக்கீரன் குழுமத்தில் சிறுகதை மற்றும் குறுநாவல்களைத் தாங்கி வெளிவரும் இனிய உதயம் இதழில் ‘ஜூபிகா’ என்ற சிறுகதையை எழுதினேன். ரோபாட் பற்றிய அந்தச் சிறுகதையே அது. அதை சினிமாவுக்கே உரிய பாடல், நடனம், சண்டை மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளைச் சேர்த்து, ரஜினி ஐஸ்வர்யாராயை வைத்து 2010-ல் இயக்குநர் சங்கர் எந்திரன் படத்தை இயக்கி வெளியிட்டார்.

தொடர்ந்து, இயக்குநர் சங்கர் மீதும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் 2010-ல் கதைத் திருட்டு தொடர்பான கிரிமினல் வழக்கைத் தொடர்ந்தேன்.
இந்த வழக்கில் பலமுறை நான் ஆஜராகி குறுக்கு விசாரணைகளையும் எதிர்கொண்டேன். ஆனால் எதிர்தரப்பு ஒரு தடவை கூட நேரில் ஆஜராகவில்லை. அதனால் நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளர் தரப்புக்கும் அபராதம் கூட விதித்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளருடன் சேர்ந்து வழக்கிற்கு இடைக்காலத் தடையை வாங்கினார் ஷங்கர். இந்தத் தடை விலகிய நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கில் இருந்து தயாரிப்பாளரை விடுவித்ததுடன், இயக்குநர் ஷங்கர் மீது நான் தொடுத்த கதைத் திருட்டு வழக்கிற்கு முகாந்திரம் உள்ளது என்று சொன்னதோடு, என் கதைக்கும் எந்திரன் படத்திற்கும் 16 கூறுகள் அப்படியே ஒத்துப்போவதாகவும் சுட்டிக் காட்டியது. அதனால், இயக்குநர் ஷங்கரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இது என்னைப் போல் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பாக அமைந்தது. இந்த நிலையில் கொரோனா பரபரப்புக்கு மத்தியிலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்று இயக்குநர் சங்கர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்காக சீனியர் வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர்கள் நெடுமாறன், ரிச்சர்டு வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள்.
என் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர்கள் பி.டிபெருமாள், கே.இளங்கோவன், எல்.சிவகுமார், சதீஷ்குமார், ராம்.சங்கர், அமித் அரோரா, மொஹமது ஆசிப் அலி, ஜி.சித்ரகலா, சுஜாதா பஹதி, ரிஷா பாண்டே, யூசுப் அகியோர் ஆஜராயினர். இந்த வழக்கு நீதியரசர்கள் ரொஹிண்டன் பாலி நாரிமன், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் நாடித்துடிப்பை உணர்ந்த உச்ச நீதிமன்ற அமர்வு, ’உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் அதன் விசாரணையிலும் தலையிட விரும்பவில்லை’ என்றபடி இயக்குநர் ஷங்கரின் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

இது காப்புரிமைக்காகப் போராடும் எழுத்தாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. என் போராட்டங்களுக்குத் துணை நிற்கும் ஆசிரியர் அவர்களுக்கும், இந்த வழக்கை சிறப்பாக நகர்த்திச் செல்லும் எங்கள் வழக்கறிஞர்களுக்கும், அறத்திற்கு ஆதரவாக இருந்துவரும் ஊடகத்தினருக்கும், வழக்கு வெற்றிபெற வாழ்த்திய நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. கடந்த 10 ஆண்டுகளாக இழுபடும் இந்த வழக்கு, விரைவில் உரிய நீதியைப் பெறும் என்று நம்புகிறேன். ” என்றார். ஒட்டுமொத்தமாக இயக்குநர் ஷங்கர் எந்திரன் கதைத் திருட்டு விவகாரத்தில் வசமாக மாட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்