நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.
அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற பல நேரடித் தமிழ்ப் படங்களில் நடித்து தனக்கென தனியாக தமிழ்நாட்டிலும் உலக அளவில் தமிழ் பேசும் ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் ‘லூசிஃபர் என்ற’ படத்தை இயக்கினார். 2019-ல் வெளியான இந்தப் படம் 175 கோடி வசூல் செய்தது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் மொழி கடந்து இந்தியா முழுவதும் பன்மொழி ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
மேலும் கடந்த ஆண்டு ஆடு ஜீவிதம் என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டன் நாட்டுக்கு சென்றவர், கொரோனா பரவல் காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். அதன் பின் மோகன்லால் முன்னெடுப்பில் தனி விமானம் மூலமாக படக்குழுவுடன் பத்திரமாக சொந்த ஊர் திரும்பினார். ஆடு ஜீவிதம் படத்தின் எஞ்சிய பகுதிகள் கொரோனா கலத்துக்குப் பின்னரே மீண்டும் ஜோர்டானில் எடுக்கப்படவுள்ளது.
இதனால் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் ஜனகனமன படத்தின் முன்னோட்டம் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவல் நிலையத்தில் கையில் விலங்குடன் விசாரணைக் கைதியாக இருக்கும் பிருத்திவிராஜை காவல் ஆய்வாளர் கடுமையாக விசாரிப்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் ‘காந்தி கொல்லப்பட்டது குறித்து தேசம் முழுவதும் மாறுபட்ட உணர்வுகளை மக்கள் கொண்டிருக்கிறார்கள்’ என்று வசனம் பேசுகிறார் பிருதிவிராஜ். அப்போது காவல் ஆய்வாளர் அவரை உதைத்துத் தள்ளுகிறார். சர்ச்சைக்குரிய இந்தக் காட்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சனம் செயவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காவல் ஆய்வாளராக சுராஜ் வெஞ்சரமூடுவும் பிருத்விராஜ் ஜோடியாக ஸ்ரீ திவ்யாவும் நடித்துள்ளனர். டியோ ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இதுதவிர பிருத்விராஜ் பற்றி இன்னொரு முக்கிய தகவலும் உண்டு ‘ஜனகணமன’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தான் நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பிரித்விராஜ் கைவசம் கோல்டு கேஸ் என்ற படம் உள்ளது. அதிதி பாலன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தைத் தானு பலக் இயக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து ‘அந்தாதூன்’ மலையாள ரீமேக்கிலும் பிருத்விராஜ் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் ராஷி கண்ணா. ’ஜனகனமன’ சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் முன்னோட்டத்தை இங்கே பாருங்கள்.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்