கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
விமர்சகர்களின் பாராட்டுகளையும் குவித்தன. இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்த காரணமாக மலையாளப் படங்கள் பலவும் ஓடிடியில் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன. அவற்றில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' மற்றும் ‘திரிஷ்யம் 2’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
முதலாவதாக கடந்த ஜனவரி 15-ம் தேதி வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை ஜியோ பேபி இயக்கியிருந்தார். நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த இந்தப் படம், புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றைச் சொல்லியிருந்தது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளை அள்ளியது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் இது ரீமேக்காக உள்ளது. இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளார் இயக்குநர் ஆர். கண்ணன். நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நாயகியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்தார். தற்போது அந்த முன்னணி நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று தெரியவந்துள்ளது. அவரும் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டார். நடிப்புக்கு நல்ல தீனிபோடும் கதாபாத்திரம் என்பதால், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்த அதிர்ஷ்டம் என விஷயத்தைக் குறிப்பிடாமல் அவரது நண்பர்கள் சமூக வலைதளத்தில் புகழ்ந்து வருகிறார்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்