யூடியூப் கோர்னர்

பாஸ்டனில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் சென்று வந்திருந்தார். அங்கு நடைபெற்ற 50 நிமிடக் கலந்துரையாடல் ஒன்றின் ஒளிப்பதிவை யூடியூப்பில் காணக் கிடைத்தது.  முழுமையாக ஆங்கிலத்தில் இப்பேட்டி உள்ள போதும், சினிமாவையும், நவீன தொழில்நுட்பத்தையும் கமல் கையாளும் விதத்தை அலசும் போது  நீங்கள் மிகச் சுவாரஷ்யமாக ரசிப்பீர்கள்.

அபூர்வ சகோதரர்களில் அப்பு கதாபாத்திரம் உருவானது எப்படி, மும்பை எக்ஸ்பிரஸில் பயன்படுத்திய டிஜிட்டல் தொழில்நுட்பம், தசாவதாரம் முயற்சி, கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் இனி வருங்காலத்தில் எப்படி திரைக்கு வரலாம் என பல விடயங்களை பகிர்ந்து கொள்கிறார் கமல். திரையுலகுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான அகமடமி ஆஸ்காரின், சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்கு இந்தியாவில் இருந்து அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் கமல்ஹாசன் உருவாக்கியவை. சினிமாவில் எப்போதும் புதுமையை விரும்பும் கமல், அதை தானே முதலில் பரிசீலிக்க ஒரு போதும் தயங்கியதில்லை.  

நெட்ஃபிலிக்ஸ் போன்ற இணையத்திரை வெளி தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கால் பதிக்க தொடங்கியுள்ள நிலையில் எதிர்காலத்தில் சினிமா வியாபாரச் சந்தை எப்படி மாற்றமடையலாம் என்றும இப்பேட்டியில் அலசுகிறார்.

இனிமேல் சினிமாவின் வடிவத்தை தீர்மானிப்பவர்கள்  அதன் இயக்குனர் இல்லை. ரசிகர்கள் தான் என கமல் சொல்லி முடிக்கும் போது இன்றைக்கு பதினைந்து வருடங்கள்  கழித்து இப்பேட்டியை மீட்டுப் பார்க்கும் போது கமலின் சூட்சுமக் கருத்துக்கு அர்த்தம் பிடிபடும் எனத் தோன்றுகிறது.

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா