திரைச்செய்திகள்

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதைப் போல இருக்கிறது ‘800’ பட விவகாரம். கொஞ்சம் நினைவு படுத்திப் பார்த்தால், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு பல தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

இயக்குநர் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் மட்டுல்ல; பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து, '800' படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்து விட்டது என்று பார்த்தால் இன்று சீனு ராம்சாமி வடிவில் மீண்டும் வெடித்துள்ளது.

இன்று காலை (அக்டோபர் 28) இயக்குநர் சீனு ராமசாமி, "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்" என்று தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனே தன்னை சந்திக்க வரும்படி பத்திரிகையாளர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார், இதையடுத்து தினசரிப் பத்திரிகையாளர்கள் போரூரில் உள்ள சீனு ராமசாமி வீட்டுக்கு விரைந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் சீனு ராமசாமி பேசினார்: “எனக்கு அரசியல் சினிமா தெரிந்த அளவுக்கு, சினிமா அரசியல் தெரியவில்லை. இதுதான் உண்மை. சமீபத்தில் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வாரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் வந்த சூழலில் நான் ரொம்ப வேதனைப்பட்டேன். அப்போது விஜய் சேதுபதியிடம் தனிப்பட்ட முறையில் என் கருத்தை எடுத்துச் சொன்னேன். பொதுவெளியிலும் எடுத்துச் சொன்னேன். ஒருபகுதி தமிழர்களுடைய எதிர்ப்பைச் சம்பாதிக்கக் கூடாது மற்றும் விஜய் சேதுபதி நலன் கருதியும் எனது ட்விட்டரில் பதிவிட்டேன். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு எதிராக இருக்கிறேன் என்று தொடர்ந்து செய்திகள் சித்தரிக்கப்பட்டன.

பின்னர், 'நன்றி வணக்கம்' என்று விஜய் சேதுபதி பதிவிட்டவுடன், அவருக்குத் தொலைபேசியில் போன்செய்து 'இது என்ன பொருள் தருகிறது' என்று கேட்டேன். "சார், அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்ததால் நடிக்கச் சம்மதித்தேன். நல்ல கதாபாத்திரம், உலகம் முழுக்க ரீச் ஆவோம் என்றுதான் ஒப்புக் கொண்டேன். அதற்குப் பிறகுதான் தமிழர்களைப் புண்படுத்துவது மாதிரி இருக்கிறது எனத் தெரிந்துகொண்டேன். இந்தச் சூழலில் என்ன செய்யலாம் என நினைக்கும்போது, தயாரிப்பு நிறுவனமே புரிந்துகொண்டு விலகிப் போனார்கள். ஆகையால், அவர்களுக்கு நன்றி வணக்கம் என்று சொன்னேன்" என்றார் விஜய் சேதுபதி.

அதோடு அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. அதற்குப் பிறகும் கூட நேரடியாக சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயதசமி அன்று விஜய் சேதுபதியின் அலுவலகப் பூஜைக்குக் கூட போய்விட்டு வந்தேன். ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் விஜய் சேதுபதி மீது வைத்திருக்கும் அன்பை இங்குதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், நான் ஏதோ விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக நள்ளிரவில் வாட்ஸ்-அப்பில் கடந்த நான்கு ஐந்து நாட்களாகவே அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக மெசேஜ்கள் அனுப்புகிறார்கள், ஆபாசமாகப் பேசுகிறார்கள். எதற்கு இதைச் செய்கிறார்கள் எனத் தெரியவே இல்லை. நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்தச் சமயத்தில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆகையால், மனப் பதற்றத்தில் உள்ளேன். இதை உடனே எனது சகோதரர்களாகிய உங்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்னொன்று, விஜய் சேதுபதி ரசிகர்கள் என்னைக் கண்டிப்பாக மிரட்ட மாட்டார்கள். அவர்கள் என்னுடைய தம்பிகள். என்றாலும் இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேசினேன். அதற்கு அவர், நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். விட்டுவிடுங்கள் என்றார். ஆனால், பல அழைப்புகள் கொலை மிரட்டல்கள். எனவே அது பற்றி காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப் போகிறேன். காவல்துறையில் மிரட்டுகிறவர்கள் என்ன பேசினார்கள் என்பதை எழுதியே கொடுக்கப் போகிறேன்” என்று மனம் திறந்து கூறினார். இதற்கிடையில் சற்றுமுன் சீனு ராமசாமியின் ட்வீட் பற்றிக் கேள்விப்பட்ட தமிழக தகவல் மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு “ சீனு ராமசாமி கேட்டால் அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.