திரைப்படவிழாக்கள்

புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படவியலாளர் Claire Denis எனக்கு அறிமுகமானது அவருடைய முதல் திரைப்படமான Chocolat இல். அவருடைய படங்களிலேயே எனக்கு மிகப் பிடித்த திரைப்படமும் இது தான். நான் பிறந்த  1988ல் வெளியான இத்திரைப்படம், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த கமெரூனில் நடைபெறும் கதை.

அக்காலத்தில் அங்கு காலனித்துவ மேற்பார்வையாளராக இருந்த ஒரு வெள்ளையின இராணுவத் தளபதி, அவனுடைய மனைவி மற்றும் 6 வயது மகள், அவர்கள் வீட்டில் பணிபுரியும் ஒரு கறுப்பின இளைஞன் ஆகியோரை சுற்றி கதை நகர்கிறது. இந்த திரைப்படம் எனக்கு அவ்வளவு பிடித்தமைக்கு இரு காரணங்கள். பிறந்து வளர்ந்த தேசத்திலிருந்து, சிறுவயதிலேயே பிரிந்து, நீண்ட வருடங்களுக்கு பிறகு, இளைஞனாக செல்லக் கிடைத்தால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என நேரில் அனுபவிக்க காத்திருப்பவன் நான். இந்த திரைப்படம் தொடங்குவது அப்படிச் செல்லும் ஒரு பெண்ணின் பார்வையில்.

இரண்டாவது காரணம், மேற்குலகத்தவர்களின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதனை வரலாற்று ஆதாரங்களுடனோ, நீண்ட சொற்தொடர் விவாதங்களினூடோ காண்பிக்காமல், கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்ச்சிகளில் மாத்திரம் காண்பித்தே புரியவைத்திருப்பார் Claire Denis.

யார் ஒட்டுண்ணி ? - பாரசைட் விமர்சனம்

Protee எனும் குறித்த கறுப்பின வீட்டுச் சேவகன், வெள்ளையின இராணுவத் தளபதி வீட்டில் பணிபுரிந்தாலும், தன்மானமுரியவன். படம் நெடுகிலும், அவனது எஜமானார்கள் மீது அவனுக்கு இருக்கும் அளவு கடந்த மரியாதையும், தன் சேவையில் தான் சரியாக இருக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியும் அவனிடம் மேலோங்கி இருக்கும். சேவைக்கு ஏற்றால் போல் நல்ல கட்டுடம்பு வேறு.   குறித்த வெள்ளைக்கார குடும்பத்தில் அவனை எல்லோரும் மரியாதையாகவே நடத்துவார்கள். ஆனால் அடிமை வாழ்வுக்குள் கொடுக்கப்படும் மரியாதையாகவே அது இருக்கும்.

Tunnel (சுரங்கம்)

ஒரு காட்சியில், Protee தன் வேலைகளை முடித்துவிட்டு, அந்திப் பொழுதொன்றில் தனக்குரிய வெளியிடத் தண்ணீர்த் தொட்டி ஒன்றில் தன்னை மறந்து குளித்துக் கொண்டிருப்பான். அவன் நிர்வாணமாகவே அந்த இடத்தில் குளிப்பது வழக்கம். யாரின் கண்களும் படாத தருணத்தில் அவன் அங்கு குளிப்பான். அவன் பணிபுரியும் வீட்டு இராணுவத் அதிகாரியின் மனைவி அன்று அந்த இடத்தை எதிர்பாராத விதமாக கடந்து செல்கையில், இவன் குளித்துக் கொண்டிருப்பதை பார்த்து விடுவாள். அதுவரை தன்னை மறந்து சுதந்திரமாக குளித்துக் கொண்டிருந்தவன் அப்போது ஏற்படும் அவமான உணர்வையிட்டு அழத் தொடங்குவான். அந்த உணர்ச்சியில் அடிமை வாழ்வில் சுதந்திரம் எனும் கோட்பாடு எதுவரை அடிபட்டுவிடுகிறது என்பதை காண்பித்திருப்பார் Claire Dennis.

Vision du Reel ஆவணத்திரைப்பட விழாவில் அவர் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டு அவருடனான இணைய இடைவெளியில் Masterclass நடைபெற்ற போது, Chocolat திரைப்படத்தில் எனக்கு பிடித்த இரு காட்சிகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பும் வாய்ப்பு கிடைத்தது. இவை தான் அக்காட்சிகள். Protee தான் காதலிக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பான். அதை சரிபார்த்து வாசித்துக் காட்டிக் கொண்டிருப்பார் அவனது பள்ளி ஆசிரியர். அவன் யாருக்கு அடிமையாக பணிபுரிகிறானோ அவ்வெள்ளைக்காரப் பெற்றோரின் 6 வயது மகள் கழுதையில் அமர்ந்திருந்த படி, தூரத்திலிருந்து அவனை பார்த்துக் கொண்டிருப்பாள். திடீரென, « Protee, வா நேரம் போகிறது, வீட்டுக்கு செல்லவேண்டும் » என சத்தமிடுவாள். இக்காட்சி படம்பிடிக்கப்பட்ட பள்ளியின் முற்றத்தில் இருந்த மற்ற கறுப்பினச் சிறுவர்கள், « Protee வா, நேரம் போகிறது, Prote வா நேரம் போகிறது » என Protee வின் பின்னால் அச்சிறுமியை போன்றே கேலி செய்து கொண்டு கொஞ்ச தூரம் செல்வார்கள். காலனித்துவ அதிகாரத்தினையும், அதனை எதிர்க்க முடியாத, ஆனால் எதிர்க்கத் துணியும்  இயலாமையின் உச்சகட்ட வெளிப்பாடு அதில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

அதற்கடுத்த காட்சியில் அச்சிறுமி மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். அவள் சாப்பிடுவது Protee சமைத்த உணவு. உறைக்கிறது என்பாள். அவள் சாப்பிடும் போது அவள் மேசை அருகில் நின்றுகொண்டிருக்கும் Protee தண்ணீர் எடுத்துக் கொடுப்பான். அவனை செல்லக் கோபத்துடன் முறைத்துப் பார்த்துவிட்டு, அவனை அவளருகில் குனியச்சொல்லி நீயே சாப்பிட்டு முடி எனும் தொணியில், அவனுக்கு அச்சாப்பட்டை கரண்டியில் எடுத்து ஊட்டிவிடுவாள். ஊட்டும் போது சொட்டும் துளிகளை தனது மறுகையில் ஏந்திக் கொள்வாள். எஞ்சிய முழு உணவையும், கரண்டியில் அவள் ஊட்ட சிறுபுன்னகையுடன் சாப்பிட்டு முடிக்கும் Protee, அச்சிறுமியின் கையில் மிஞ்சிய துளிகளை நக்கி எடுத்துக் கொள்வான். அவள் பார்த்து சிரிப்பாள். அவள் எந்த வயதுக்காரியாக இருந்தாலும் அவள் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தையும், அதே கணம், அச்சிறுபிள்ளைக்கு அவன் கொடுக்கும் அன்பையும் Protee யின் நடிப்பிலும் காண்பித்திருப்பார் Claire Dennis. முக்கியமாக கடைசியில் கையில் எஞ்சியிருக்கும் துளிகளை அவன் தன் நாக்கால் வலித்து எடுத்துக் கொள்ளும் காட்சி ஒரு கவிதை. கறுப்பின-வெள்ளையின அடிமை ஆதிக்கத் தனங்களின் அனைத்து வரையறைகளும் அந்நக்கலில் கரைந்து போய்விடக் கூடியவை. அவ்வளவு அழகாக இருக்கும் அக்காட்சி. அதில் எந்தவித கட்டாயமுமோ, வக்கிரமுமோ இருக்காது. தனி அன்பும், அவளை திருப்திப் படுத்தும் அழகு மாத்திரம் இருக்கும்.

நான் குறிப்பிட்டுச் சொன்ன இரு காட்சிகளும் முன்கூட்டியே எழுத்தில் யோசிப்பது என்னைப் பொருத்தவை கடினமான காரியம் என்பதால், அவை அவருடைய சிறுவயது நேரடி அனுபவங்களா? அல்லது, ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது Improvise செய்யப்பட்ட காட்சிகளா? அல்லது இந்த அனுபவங்களை Script இல் ஏற்கனவே சேர்த்திருந்தாரா என அவரிடம்  கேட்டேன். சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். « அவ்வளவு தேர்ச்சி பெற்ற நடிகர்களுடன், தொழில்நுட்பவியலாளர்களுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் போது, அதில் Improvisation செய்திருப்பேனா? அனைத்தும் முன்கூட்டியே எழுதப்பட்டவை. அவை எனது நேரடி அனுபவங்கள் அல்ல. ஆனால் அதன் வலி உணர்ந்தல். அது என் முதல் படைப்பு என்ற போதும், 6 வருட எழுத்தில் உருவான கதை அது. ஆக அதில் ஒன்று கூட Improvisation இல்லை. அனைத்தும் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டது» என்றார். Claire Dennis இன் திரைப்படங்களில் பெரும்பாலும் மனிதனின் ஐம்புலன்களும் காண்பிக்கப்படும் விதம் மிக அழகானது. குறிப்பாக மனத்தின் நுகர்வையும், தொடுகை உணர்வையும், ருசித்தல் உணவர்வையும், உடல்வாகின் அழகியலையும் அவர் பெரும்பாலான திரைப்படங்களில் காண்பித்திருப்பார். நான் தேர்ந்தெடுத்த காட்சியிலும் அவர் அதை காண்பிக்கத் தவறவில்லை.

நிதிநிலைமையில் நடுத்தரக் குடும்பமாக இருந்ததினால், எனது சிறு பருவத்தில், வீட்டு வேலைக்கு மலையக தோட்டங்களிலிருந்து பணிப் பெண்களை அமர்த்த எனது பெற்றோரால் முடிந்தது. அவர்களுடனான எனக்கிருந்த அனுபவம் இந்த படத்தை பார்த்ததும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது.

தேவரடியார் என்ற அபூர்வ ஆவணப்படம்!

திறந்த வெளியில் மலசலம் கழித்துவிட்டு, என்னை நானே சுத்தம் செய்யத் தெரியாமல், அரை நிர்வாணமாக கால்மணி நேரம், அரை மணி நேரம் நிற்பேன். வீரம்மா எனும் எங்கள் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் வந்து என்னை சுத்தம் செய்துவிடும் வரை என் பொழுது ஒன்றும் செய்ய முடியாமல் சுற்றியிருந்த மரங்களை பார்த்த படி நகரும். அவர் என் வீட்டில் வேலை செய்வது, அவரது கடமை எனும் எண்ணம் எனக்குள் வருடக் கணக்கில் இருந்தது. அவர் வீட்டுக்கு வரும்போதே தோட்டப்புற வாசம் அவருடன் ஒட்டிவரும். அவர் உடுத்தியிருக்கும் ஒற்றை கசங்கிய சேலையும், வாரி இழுத்த எண்ணெய் தோய்ந்த தலைப்பின்னலும், பெரிய குங்குமப் பொட்டும், வாயில் போட்டிருக்கும் வெற்றிலையும் இன்று வரை எனக்குள் வீரம்மா என்றதும் அவரை பளிச்சென ஞாபகப்படுத்தக் கூடிய அடையாளச் சின்னங்கள்.

கமிலே (Camille) நீ இறந்திருக்கக் கூடாது !

ஒரு சில வருடங்களின் பின்னர், ஒரு நாள் அவருடைய மலையக தோட்ட வீட்டுக்கு தற்செயலாக எனது அண்ணாவுடன் போகக் கிடைத்தது. நடுங்கும் குளிர்ச்சாரலில், எப்போதும் சூழ்ந்திருக்கும் முகில்களுக்கு இடையில் அவருடைய குடிசை வீட்டுக்கு 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை செல்லும் ஒற்றைப் பேருந்தில் 2 மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும், அதிகாலை 8 மணிக்குள் அவ்வளவு தூரத்திலிருந்து தான் அவர் எனது வீட்டுக்கு வந்து செல்கிறார் என்பதை, அப்படி பயணித்துச் சென்ற போது தான் உணர்ந்து கொண்டேன்.

Chocolat படத்தின் கடைசி காட்சியில், படத்தின் கதாநாயகன் Protee அவன் வேலை செய்த வீட்டிலிருந்து ஒரு வாகனத் திருத்தும் இடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டிருப்பான். அவனுடன் நன்கு பழகியிருந்த அவ்வெள்ளைக்காரச் சிறுமி, அவனை தேடி இரவில் அவன் பணிபுரியும் இடத்திற்கு வந்து அவன் செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருப்பாள். அங்கு எரிபொருள் அடங்கிய ஒரு இரும்புக் குழாயை பார்த்து, இது சுடுமா எனக் கேட்பாள். Protee அவளுக்கு பதில் சொல்லாமல், அந்தக் குழாயை தனது இரு கைகளாலும் இறுக்கிப் பிடிப்பான். அப்படியானால் இது சுடாது என நினைத்துக் கொண்டு அவளும் அக்குழாயை பிடிப்பாள். அவளுடைய கை வெந்து போகும். அதை பார்த்த Protee தனது இருக்கமான முகத்துடன் தனது வெந்த இரு கைகளையும் விரித்துக் காட்டுவான். அவனுடைய அடிமை வாழ்வின் மரத்துப் போன மானத்தின் வெளிப்பாடு அது.

டி.ராஜேந்தரின் சுவாரஸ்ய திரிபுகள் : ஒருதலை ராகம் நினைவுகள் !

வீரம்மாவின் வீட்டுக்கு நான் சென்ற போது, அவள் இரு பிள்ளைகளும் வீட்டைச் சுற்றி ஓடித் திரிந்து கொண்டார்கள். இருவருக்கும் 6, 7 வயது தான் இருக்கும். அப்போது வயதில் சிறியவன் வெளிமுற்றத்தில் மலசலம் கழித்துவிட, அவனை விட கொஞ்சம் பெரியவன், அவன் குதத்தை கழுவி அவன் காற்சட்டையை மாற்றிவிட்டான். அதுவரை என் மனமும் Chocolat திரைப்படத்தில், அப்பாவித் தனமாக அக்குழாயை பிடித்துப் பார்க்கும் அக்குழந்தையின் மன நிலையில் தான் இருந்ததை இப்போது உணர்கிறேன்.

Masterclass ல், Claire Denis ஒரு தருணத்தில் இப்படிச் சொன்னார். « நான் இந்தப் படத்தில் உருவாக்கிய அனைத்து காட்சிகளும், ஏதோ ஒருவகையில் நான் எனக்குள் உணர்பவை. அதாவது எனக்குள் உள்முகமாக உணர்பவை. Sensual உணர்வை நான் உருவாக்குவதில்லை. நாம் உருவாக்கவும் தேவையில்லை. சினிமா தானாக அதை உருவாக்கிக் கொள்ளும். எனக்கான நடிகர்களை நான் தேர்ந்தெடுக்கும் போது ஒரு காட்சியில் அவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது, நான் உணர்வதை அவர்களும் உணர்கிறார்கள். அவர்கள் உணர்வதை நானும் உணர்கிறேன். எனது சகதொழில் நுட்பக் கலைஞர்களும் உணர்கிறார்கள். அப்படித்தான் எமக்கு இடையிலான நம்பிக்கை ஏற்படுகிறது. அந்த உணர்வும், நம்பிக்கையும் இருபக்கமும், கடத்தப்பட வேண்டியது. நான் மாத்திரம் உணர்ந்து என் நடிகர்கள் அதை உணராவிடில் அதில் அந்த மேஜிக்கும் நிகழாது ».

அவர் சொல்ல மறந்த ஒரு பகுதி அதில் இருக்கிறது. அவருடைய படத்தை பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய உள்மன உணர்வும், ஞாபகமும் சேர்ந்த போது அந்த மேஜிக் இன்னமும் பூரணம் அடைகிறது.

 - 4தமிழ்மீடியாவுக்காக: ஸாரா

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.