திரைவிமர்சனம்

பக்தனைத் தேடி.. அல்லது பக்தன் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவன் முன்னால் தோன்றிவிடும் கடவுளரையும் பின்னர் பக்தன் பின்னால் பூலோகத்தில் அலைந்து திரிந்து உண்மை அறிந்து அல்லல் படுவதுபோன்ற பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டன.

கடைசியாக சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305-ல் கடவுள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதற்கும் 35 வருடங்களுக்கு முன்னாள் போனால் வி.கே.ராமசாமி தயாரித்த ருத்ர தாண்டவம். ஹாலிவுட்டிலும் இந்த வகைப் படங்கள் நிறையவே வந்துள்ளன. அவற்றில் 2007-ல் கடைசியாக வெளிவந்து தோல்வியடைந்த அட்டகாசமான சாகசத் திரைப்படம் ‘எவான் அல்மைட்டி’. இந்த தோல்வி வரிசையில் வரும் படம் தான் மூக்குத்தி அம்மன்!

சாமானிய மக்களின் கடவுள் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பயன்படுத்தி ஆன்மிகவாதிகள் என்னும் போர்வையில் உலாவரும் மதவாதிகள் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை வறட்சியான நகைச்சுவை வழியாகச் சித்தரித்துள்ள படம்தான் மூக்குத்தி அம்மன். எல்.கே.ஜி என்ற தனது கடந்த படத்தில் அரசியல் நையாண்டி செய்து கழுத்தை அறுத்த ஆர்ஜே பாலாஜி, இந்தமுறை பக்தி நையாண்டி என்ற பெயரில் என்ஜே.சரவணனுடன் இணைந்து இந்தப் படத்தைத் தந்துள்ளார். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா விதவிதமான காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளில் தனது பக்தனுக்கு தரிசனம் அளித்து அவனுடன் உரையாடுகிறார்.

தமிழ்நாட்டின் பசுமையான ஊர்களில் கொள்ளை அழகுகொண்ட நாகர்கோவிலில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் நிருபராக வேலை செய்கிறார் ஏங்கெல்ஸ் ராமசாமி (ஆர்.ஜே.பாலாஜி). இவருக்கு தெய்வாமிருதம், தேவாமிருதம், வேண்டாமிருதம் என மூன்று தங்கைகள். அப்பா குடும்பத்தைவிட்டுவிட்டு ஓடிப்போய் விட்டார். அம்மா ஊர்வசி, அப்பாவழித் தாத்தா மௌலி என கலகலப்பான குடும்பம். வீட்டில் உள்ள மூன்று பெண்களைக் கரையேற்ற வேண்டுமானால் முதலில் மகனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஏங்கெல்ஸ் ராமசாமிக்குப் பெண் பார்க்கிறார்கள். ஆனால், ராமசாமி எதற்கு மசிகிற மாதிரியில்லை.

எதுவுமே சரியாக நடக்காததால் குடும்பத்துடன் ஒருநாள் தனது குலதெய்வம் கோயிலுக்குப் போகும் ஆர்.ஜே.பாலாஜிக்கு அவர்களது குலதெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி தருகிறார். முதலில் அம்மன் வடிவில் காட்சி தரும் நயன்தாராவைக் கடவுள் என்பதை நம்ப மறுக்கிறார் ராமசாமி. பின்னர் அம்மன் நிகழ்த்திய அதிசயத்தை உணர்ந்த பின்னர் நம்புகிறார். ஆனால், அம்மனுக்கோ வருத்தம். பக்தர்கள் வராமல் பாழடைந்த நிலையி ல் இருக்கும் தன் ஆலயத்தைப் பிரபலமாக்கும்படி ஏங்கெல்ஸ் ராமசாமியிடம் சொல்கிறார். ஆனால் ராமசாமி எடுக்கும் எந்த முயற்சிகளுக்கு பலன் இல்லை. இதனால் அம்மன் தனது கோயில் புற்றிலிருந்து பாலை ஊற்றெடுக்கவைக்கிறார் . இப்போது புற்றில் பால் பொங்கிவழிவதைப் பார்க்க ஊரார் திரண்டு வருகிறார்கள்.

மூக்குத்தி அம்மனும் பிரபலமாகிறாள். அதைத் தொடர்ந்து அட்ரஸ் தெரியாமல் இருந்த பகவதி பாபா என்ற நடன சாமியார் வெள்ளிமலை என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க முயல்கிறார். இதைச் செய்தியாக தனது நிறுவனத்துக்கு அனுப்புகிறார் ஏங்கெல்ஸ் ராமசாமி. இதனால் நிருபருக்கும் சாமியாருக்கும் முட்டல், மோதல். திட்டமிட்டபடி சாமியாரால் நிலத்தை ஆக்கிரமிக்க முடிந்ததா? மூக்குத்தி அம்மன் ராமசாமிக்கு காட்சி தந்தது தனது ஆலயத்தைப் பிரபலப் படுத்த மட்டும்தானா போன்ற கேள்விகளுக்கு மொக்கையான பதில்களைத் தருகிறது மூக்குத்தி அம்மன்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.