கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.
இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு மொழிப் படபிரிவுக்கான ஆஸ்கர் போட்டிக்கு இவர் இயக்கிய ‘ஜெல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் படத்தின் விமர்சனம் இதோ நமது வாசகர்களுக்காக:
இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குச் செல்லும் மலையாளப் படம்!
ஏற்கெனவே இடுக்கி மாவட்டத்தை மிக அழகாகக் காட்டிய இரண்டு திரைப்படங்கள் மகேஷிண்டே பிரதிகாரமும், அய்யப்பனும் கோஷியும். இந்த இரு படங்களுக்கு நடுவில் கடந்த ஆண்டு வெளியான ஜெல்லிக்கட்டும் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள காடும் மலையும் சேர்ந்த ஒரு மலைக் கிராமத்தையே கதையின் களமாக கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது. அங்கே கறி வியாபாரம் செய்யும் வர்கியின் கடைக்குக் கொண்டுவரப்படும் எருமை, அடித்துக்கொல்லப்படும் அதிகாலை வேளையில் அவருடைய கையாள் அந்தோணியின் பிடியிலிருந்து நழுவிக் காட்டுக்குள் பதுங்கி விடுகிறது. அதன் பிறகு அந்த ஊரின் இரு பகல்களும் இரு இரவுகளும் நடைமுறை வாழ்க்கையி லிருந்து தப்பிக் காட்டுக்குள் அலைகிறது. இந்தச் சிறு காலத்துக்குள் படம், பலவித மாகத் தன்னை வெளிப்படுத்து கிறது. இதற்கு முன்பு எருமை மாட்டிறைச்சி, அந்த ஊரின் வாழ்க்கையுடன் எவ்வளவு தொடர்பு கொண்டது என்பதைத் திட்டுத் திட்டான காட்சிகள் வழியே லிஜோ சொல்லியிருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் : விமர்சனம்
காட்டுக்குள் தப்பிச் சென்ற எருமை மூர்க்கத்துடன் ஊருக்குள் நுழையும் ஒரு நீண்ட காட்சியில் முதலில் டீக்கடையை முட்டிச் சிதைக்கிறது. பிறகு கம்யூனிஸ்ட் கொடியை, பிறகு வங்கிக்குள் புகுந்து பெரும் சினத்துடன் வர்கியை முட்டித் தள்ளிவிட்டு மீண்டும் காட்டுக்குள் புகுந்து கொள்கிறது. இதற்குப் பிறகு தோழர்கள் வருகிறார்கள். சாய்ந்த கொடியைக் குறித்துப் பேசுகிறார்கள். ஏதோ தீர்வு சொல்ல முயன்று அதற்குள் வன்முறையில் இறங்குகிறார்கள். இதற்கு முந்தைய காட்சியில் பசு மூத்திரம் பிடிக்கும் ஒருவர் எருமையை அதன் போக்கில் வாழவிட வேண்டும் என்று ஜீவகாருண்யம் பேசுகிறார். ஆனால், எருமை அவரது காட்டைச் சிதைக்கும்போது கொதித்துப் போய் வசை பாடுகிறார். வலது, இடது அரசியலை விமர்சிக்கும் இந்தப் படம், போலீஸ் அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதையும் சொல்கிறது. மத அமைப்புகள், எளிய மனிதர்களின் நம்பிக்கைகளைக் கொண்டு தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளைச் சாதிப்பதையும் படம் காட்சிகளின் வழியே பதிவுசெய்கிறது.
படத்தின் தொடக்கத்தில் மின்னல் வெட்டுபோல் காட்சி கள் வந்துபோகின்றன. அவற்றில் ஒன்றில் தினமும் புட்டு சமைப்பதற்காக ஒருவர் தன் மனைவியை அடிக்கிறார். இதுபோல் திட்டுத் திட்டாகப் பெண் கதாபாத்திரங்கள் படத்துக்குள் வந்துபோகின்றன. ஆனால், அவை மையக் கதைக்குள் எந்தக் குறுக்கீட்டையும் நிகழ்த்த வில்லை. ஆனால், இந்தக் கதாபாத்திரங்களின் வழி அதிகார அமைப்பை படம் சித்தரிக்கிறது. இன்னொரு காட்சியில் நக்சல் தோழரின் வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இதற்கு ஒரு தொடர்ச்சி படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கிறது. எருமை திரும்பவும் தப்பிக்கும் காட்சியில் இந்த நக்சல் தோழர் மூலம் நடப்பு காலத்தின் இடதுசாரி அரசியலைப் படம் விமர்சிக்கிறது.
சூரரைப் போற்று - விமர்சனம்
அந்தோணி, வர்கியின் தங்கை, எருமையைப் பிடிக்க காட்டுக்குள் இறங்கும் வர்கியின் முன்னாள் கையாள் குட்டச்சன் இந்த மூன்று கதாபாத்திரங்களின் முரணில்தான் படத்தின் இரண்டாம் பகுதி துளிர்க்கிறது. இவர்களுக்கு வெளியே எருமையைப் பிடிக்க ஒன்றுக்கு ஒன்று முரண்பாடுள்ள ஜனக் கூட்டம் மூன்று பிரிவுகளாகக் காட்டுக்குள் இறங்குகிறது. இந்த ஜனக் கூட்டம் சட்டம், ஒழுங்கைக் கைப்பற்றுகிறது. ஊரின் காவல் உதவி ஆய்வாளர் ஜனத்தோடு ஜனமாகக் கைலியுடன் எருமையின் மீது காலனைப் போல் ஓடுகிறார். பிறகு அந்த ஊரே ஒரு ஜனக் கூட்டத்தின் ஜனநாயகத்தின் கீழ் வருகிறது. ஒருவகையில் இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகத்தின் நிலை என்பதைப் படம் சொல்ல முயன்றிருக்கிறது.
இந்தத் துரத்தல் நாடகத்தை கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும் பிரஷாந்த் பிள்ளையின் ஒலிப்பதிவும் மூர்க்கமானதாக மாற்றியிருக்கின்றன. பின்னணி இசையாகக் குரல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. நாகரிகம் தொடங்குவதற்கு முன்னான மனித சப்தங்கள். நவீன ஆயுதங்கள் இன்றி கம்பும் சுத்தியலுமாக முன்னேறும் ஜனக் கூட்டத்தின் சப்தமும் தீப்பந்தமும் அத்துடன் சேர்ந்துகொள்கின்றன.
இந்தத் தேடுதல் வேட்டையின் ஊடே அந்தக் காட்டுக்குத் தங்கள் முப்பட்டான்கள் மலை ஏறி வந்த கதையைக் கதாபாத்திரங்கள் சொல்கின்றன. வாழ வழியில்லாத, வாழ்க்கைக்குத் தப்பிய உதிரிகளின் தேசமாக அது ஆனதைப் பல காட்சிகள் ஊடே படம் சொல்கிறது. அந்த ஊரே ஒரு தேசமாக விரிவுகொள்கிறது. அந்தத் தேசத்தில் இன்னும் மீதமிருக்கும் காட்டு வாசனையைப் போல் ஜனங்களிடம் தேங்கியிருக்கும் மிருக வாசனையையும் இந்தப் படம் இறுதியாகக் கண்டடைகிறது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்