திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் இது ஆந்தாலஜி திரைப் படங்களுக்கான காலம். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ‘ஒரு வீடு இரு உலகம்’ படத்தின் மூலம் இரண்டு கதைகளை ஒரே படத்தில் கொண்டுவந்தார். அதை தமிழின் முதல் ஆந்தாலஜி படம் என்று கூற முடியாது.

காரணம், தமிழ் சினிமா பேசத் தொடங்கிய 30-களிலேயே ஒரு முழு நீளப் படத்துடன் ஒரு குறும்படத்தையும் இணைத்து நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளன. என்றாலும் இந்திய மொழி சினிமாக்களில் மலையாளத்தில்தான் ‘ஆந்தாலஜி’ சினிமா வகை வளர்த்தெடுக்கப்பட்டது. அவர்களுடைய ‘கேரளா கஃபே’ இந்திய மொழி சினிமாக்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. அதன் பின் இந்திப் படவுலகம் ஆந்தாலஜியை கண்டுகொண்டது. ’கேரளா கஃபே’ படத்துக்குப் பின்னர், தமிழில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில், தொடர்பில்லாத தனித்தனி குறும்படங்களை இணைத்து ‘பென்ச் டாக்கீஸ்’ என்ற பெயரில் இரண்டு திரப்படங்களை வெளியிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், அவை தோல்வி அடைந்தன.

அதன்மூலம் உண்மையான ஆந்தாலஜி படமென்பது மிகுந்த பொறுப்பு மற்றும் நேர்த்தியுடன் எடுக்கப்படுவதுடன், ஆந்தாலஜியில் இடம்பெறும் கதைகளுக்கு இடையிலான தொடர்பு கவித்துவமாக இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டியது ஹலிதா ஷமீமின் ‘சில்லுக்கருப்பட்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது வெற்றிபெற்ற இயக்குநர்கள் வரிசையாக அந்தாலஜி படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அவற்றில் ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது சூட்டோடு சூடாக வெளியாகியிருக்கும் படம் ‘குட்டி ஸ்டோரி’

கதை 1

குட்டி ஸ்டோரி தொகுப்பில் முதல் படமாக இடம்பெற்றிருக்கிறது கௌதம் மேனன் இயக்கி நடித்திருக்கும் ‘எதிர்பாரா முத்தம்’. இதில் கல்லூரிக் கால கௌதம் மேனனாக வினோத் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். அமலா பால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கல்லூரிக் காலத்தின் இறுதியில் தனக்கும் அமலாபாலுக்கு இடையிலான தனக்கிருந்த நட்பு தனது ஐம்பதுகளில் நண்பர்களிடம் சொல்கிறார் கௌதம் மேனன். ‘அது நட்பு அல்ல.. காதல்தான்’ என்று நண்பர்களில் ஒருவரான ரோபோ சங்கர் சொல்ல.. ‘இல்லவே இல்லை.. அது வெறுமனே நட்புதான்’ என்று சாதிக்கிறார் கெளதம் மேனன். கல்லூரிக் காலத்தின் கடைசி நாளில் அமலா பாலை சந்தித்தபோது அவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கிறார். அந்த முத்தத்தின் அர்த்தத்தை நண்பர்கள் கொச்சைப்படுத்தி கிண்டல் அடிக்கிறார்கள்.

ஆனால், கௌதம் மேனன் அதை ஏற்றுகொள்ளவில்லை. அது களங்கமற்ற முத்தம் என்கிறார். நண்பர்களுடனான அந்த சந்திப்புக்குப் பின் 20 ஆண்டுகள் கழித்து கௌதம் மேனனைச் சந்திக்க வருகிறார் தோழி அமலா பால். இந்த சந்திப்பில் கெளதம் மேனனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார். அந்தக் கடிதத்தில் என்ன இருந்தது என்பதுதான் இக்கதையின் எதிர்பாராத திருப்பம்.

இந்தக் கதையை கெளதம் மேனன் தனக்கே உரித்தான பாணியில் உருவாக்கியிருக்கிறார். நிறைய ஆங்கில வார்த்தைகளை வைத்து உரையாடல் எழுதியிருக்கிறார். பல முக்கியமான வசனங்களைக்கூட ஆங்கிலத்திலேயே சொல்லிவிட்டுப் போவதால் பார்வையாளர்களால் இந்தக் கதையில் ஒன்ற முடியவில்லை. மேட்டுக்குடித்தனமான காதலையும், நட்பையும் காட்டினாலும் கெளதம் மேனனின் டச் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது.

நகைச்சுவை நடிகர் ரோபா சங்கர் டைமிங்காக பல காமெடிகளை உதிர்க்கிறார். மிக வேகமாக பேசப்படும் வசனங்களினால் எதற்குச் சிரிக்கிறார்கள் என்பதே புரியாத அளவுக்கு போய்விட்டது. அமலா பால் அழகாக இருக்கிறார். நடிப்பதற்கு ஸ்கோப் இருக்கிறது. அவரும் மிக யதார்த்தமாக நடித்துவிட்டுப் போயிருக்கிறார். கெளதம் மேனனும் இதே போலத்தான். வினோத் கிருஷ்ணாவின் நடிப்பையும் குறை சொல்வதிற்கில்லை. இயக்குநர் கௌதம் மேனன் இந்தப் படத்தின் மூலம் சொல்ல வந்தது ‘ஆண் - பெண் நட்பில் கண்டிப்பாக கள்ளத்தனம் உண்டு’ என்பதை. அதைத் தெளிவாகவே சொல்லிச் செல்கிறது ‘எதிர்பாராத முத்தம்’. இந்தப் படத்தில் அதிகம் கவனிக்க வைத்தவர் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

2

இரண்டாவது கதையான ‘அவனும் நானும்’ ஒரு காதலின் எதிர்பாராத தற்செயல் நிகழ்வுகளை மையப்படுத்தி நகர்கிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார்.

கல்லூரியில் பயிலும் மேகா ஆகாஷ் - அமீர் டாஸ் இருவரும் காதலர்கள். ஒரு அழகான தருணத்தில் எல்லை கடந்துவிடுகிறார்கள். உறவு கொண்டது ஒருமுறைதான் என்றாலும் அது மேகா ஆகாஷை கர்ப்பமாக்குகிறது. அவரால் வெளியில் சொல்ல முடியவில்லை. காதலன் அமீர் டாஸுக்கு தான் கர்பமாக இருப்பதை வாட்ஸ் ஆப் செய்கிறாள். அவன் தன்னைக் காண ஓடோடி வருவான் என்று தவிக்கிறாள். ஆனால் அவனது போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. வேறு வழியில்லாமல் உடன் கல்லூரியில் செய்யும் தோழியுடன் இணைந்து கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனைக்கு வருகிறார். அதே மருத்துவமனையில் அமீரின் குடும்பத்தினர் கதறலுடன் நிற்பதை பார்க்கிறார் மேகா. அவரசரமாக மேகாவைப் பார்த்து வரக் கிளம்பியவன் அமீர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் சொல்ல.. கருவைக் கலைக்க மறுத்துவிடுகிறார் மேகா. குழந்தையும் பிறக்கிறது. ஆனால் பிறந்த குழந்தையை கருணை இல்லத்துக்குக் கொடுத்துவிட்டதாக அவளுடையத் தோழி சொல்கிறார். எல்லாம் நன்மைக்கே என்ற நினைப்பில் வீடு திரும்பும் மேகாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி வீட்டில் காத்திருக்கிறது. அதுவும் ஒரு தற்செயல் நிகழ்வாகவே முடிவதால் படம் எதிர்பார்த்த தாக்கத்தை தர மறுத்துவிடுகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேகா ஆகாஷின் கண்களும் முகமும் நடிப்பைக் கொட்டியிருக்கின்றன. வசனங்கள் கவர்கின்றன என்றாலும் அவற்றில் ஒரு சினிமாத்தனம் மின்னுவதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

3.

மூன்றாவது கதையான ‘லோகம்’ இன்றைய இளையதலைமுறை இளைஞர்களின் டிஜிட்டல் கேமிங் அடிக்கஷனை நச்சென்று படம்பிடித்துக்காட்டியிருக்கிறது. அருணும் சங்கீதாவும் ஆனலைன் வீடியோ கேமில் கிட்டத்தட்ட அடிக்ட் என்ற நிலையில் இருப்பவர்கள். பொதுவாக ஆன்லைன் வீடியோ கேமில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட ‘அவர்தார்’களில் இருந்துகொண்டு தங்கள் தனிப்பட்ட முகத்தைக் காட்டாமல் விளையாடுவார்கள். ஆனால், அசல் குரலைப் பயன்படுத்தி வாய்ஸ் சாட் செய்யும் வசதியும் பல 3டி கேம்களில் உண்டு. அப்படியொரு 3டி ஆனலைன் கேம் ‘லோகம்’. அதில் முகம் தெரியாமல் விளையாடி வரும் அருணும் சங்கீதாவும் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்குகிறார்கள். மொத்த 48 கட்டங்களைக் கொண்ட (லெவல்ஸ்) அந்த வீடியோ கேமில் 28 கட்டங்களை வென்றவன் அருண். சர்வதேச அளவில் டாப் 5 பிளேயராக இருக்கிறான். அவன் ஒரு பெண்ணுக்கு அதே வீடியோ கேமில் டிஜிட்டல் கிராஃபிக்ஸ் மூலம் ஒரு அரண்மனை கட்டுகிறான். அவளிடம் அந்த கேம் வழியாக அவனிடம் மனதைப் பறிகொடுக்கிறான். அதைப் பற்றி ஒரு யூடியூபர் பேட்டி எடுக்க்கும்போது அந்தப் பெண் யார் என்பதைச் சொல்கிறான் அருண்.

வீடியோ கேமில் இருவரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்யும்போது அந்தப் பெண் தோல்வியடைந்து மாண்டுபோகிறாள். சோகத்தின் உச்சிக்கும் செல்லும் அருண், காதலியை இழந்த வேகத்தில் 28 கட்டங்களை விளையாடி எட்டுகிறான். பொய்யான டிஜிட்டல் உலகத்தில் உண்மையான உணர்வுகளைத் தேடிச் செல்லும் இருவரும் இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதை ‘காதல் கோட்டை’ பாணியில் ஒரு சிறு திருப்பத்துடன் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு. அந்தத் திருப்பம் புதிதில்லை என்றாலும் ‘அட!’ சொல்லும் விதமாக இருக்கிறது.

அந்தாலஜி படங்களில் வெங்கட் பிரபுவின் இந்தக் குறும்படம் முற்றில் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் ஒன்றாக உருவாகியிருக்கிறது.

4

நான்காவது கதை ‘ஆடல் பாடல்’. தமிழ் சினிமாவில்தான் இருக்கிறார் என்று தேட வைத்துவிட்ட நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி - அதிதி பாலன் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

அதாவது மனைவிக்குத் துரோகம் செய்யும் கணவனுக்கு அவள் கத்தியின்றி யுத்தமின்றி கொடுக்கும் அதிரடியான ட்ரீட்மெண்ட்தான் கதை. விஜய் சேதுபதி தனது மனைவி, மகள், மாமனாருடன் வாழ்ந்துவரும் உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அவருக்கு ஒரு முறைகேடான வெளித்தொடர்பு உள்ளது. ஒரு நாள் தனது ஆசை நாயகி என்று நினைத்து தன் மனைவியிடமே பேசி விடுகிறார். உண்மையைக் கண்டுபிடிக்கும் மனைவியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக அவரது அணுகுமுறை எப்படி இருந்தது, அதற்கு மனைவி எப்படி பதிலடி கொடுத்தார் என்பதை முற்றிலும் ஒரு பெண்ணின் உலகத்திலிருந்து பேசியிருகிறது. விஜய்சேதுபதியையே தூக்கிச் சாப்பிடும்விதமாக நடித்திருக்கிறார் அதிதி பாலன். விஜய் சேதுபதியிடம் நடிப்பில் வேறுபாட்டைப் பார்க்கமுடியவில்லை. என்றாலும் இயக்குநர் நலன் முடிந்தவரை அவரிடம் வேலை வாங்கியிருக்கிறார்.

காதல் என்னும் ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்ட குட்டி ஸ்டோரியின் நான்கு கதைகளுமே ரசிக்கும்விதமாக இருந்தாலும் காதலின் பரிமாணம் நவீன வாழ்க்கையில் எத்தகையது என்பதை முற்றிலும் புதிய உணர்வையும் ரசனையும் நமக்குப் பாறிமாறியிருப்பவை வெங்கட் பிரபுவின் ‘லோகம்’, நலன் குமாரசாமியின் ‘ஆடல் பாடல்’ ஆகிய கடைசி இரண்டு கதைகள்தான். அவை ‘படைப்பு’ எனும் எல்லையை நோக்கி நகர்ந்துவிடுகின்றன.

 -4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.