தமிழ்மீடியாவின் ஆரம்பம் குறித்த அறிவிப்பு, தமிழில் வெளிவரும் அனைத்துசெய்தித் தளங்களுக்கும், அச்சு ஊடகங்களுக்கும்,மின்னஞ்சல் வழி அறியத் தரப்பட்டது. ஆயினும் எந்த ஆதரவு கரமும் எழவில்லை.
ஏற்கனவே இருந்த அறிமுகங்களின் வழியில் தமிழ்மணம் திரட்டியும், வலைப்பதிவர்கள் சிலரும், தங்கள் தளங்களில் இணைப்புக்கள் வழங்கி, ஆதரவு தந்தனர். பின்னர் தமிழிஷ் தளமும், யாழ் களமும், விளம்பர பட்டிகள் வாயிலாக இணைப்புக்கள் தந்தன. எங்கள் பணியும் தொடர்ந்தது.
4தமிழ்மீடியா தன் சேவையைத் தொடங்கிய ஒரு சிலமாதங்களுக்குள்ளே பலமான கவனிப்பை பெற்று வருகிறது என்பதை நாம் அவதானித்தோம். அதுவரையில் செயற்பட்ட பல முன்னணித் தளங்கள், தளவடிமைப்புக்களில் மாற்றம் செய்யத் தொடங்கியதையும், 4தமிழ்மீடியாவில் வெளியான செய்திகள், ஆக்கங்கங்கள், அச்சு ஊடகங்களிலும், இணையத்திலும் பிரதி செய்யப்பட்டு வெளியானதையும் எம்மால் கவனிக்க முடிந்தது. இந்த நகர்வுகளை நன்நோக்கிலேயே எடுத்தும் கொண்டோம்.
இதேவேளை நாங்கள் வேறுசிலராலும் அவதானிக்கப்படுகின்றோம் என்பதை 4தமிழ்மீடியா மீதான முதலாவது சைபர் தாக்குதல் நிகழ்த்தப்படும் வரை நாம் கவனிக்கவில்லை. அதன் பின்னர் நாங்கள் அவதானமாகிய போதும் அடுத்தடுத்து நடந்த இருவேறு தாக்குதல்கள், எங்கள் தொடக்கநிலையில் குழப்பத்தினை ஏற்படுத்தின. ஆயினும் அதே காலப்பகுதியில் ஈழம் தொடர்பான செய்திகளை வெளியிட்ட பல்வேறு இணையத்தளங்கள் தாக்குதலுக்கு உள்ளான போது, எதிரிற் செயற்படுவது யார் என்று இனம் புரிந்தது. அவதானமாய் தற்காத்துக் கொண்டோம்.
ஈழப்போர் சடுதியாக உக்கிரமடையத் தொடங்கிய இக் காலகட்டத்தில் 4தமிழ்மீடியா தன் சக்திக்குட்பட்டவகையில் மிக நிதானமாகவும், காத்திரமாகவும் செய்திகளைத் தந்துகொண்டிருந்தது. அந்தவேளையில் ஆனந்த விகடனின் வரவேற்பறைப் பக்கத்தில் 4தமிழ்மீடியாவுக்கு ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது.
மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்த 2009ம் ஆண்டின் ஆரம்பத்தில், அவை தொடர்பான செய்திகளை தமிழ்ப்பரப்புக்கு அப்பாலும் கடத்தும் வரலாற்றுக் கடமையை அமைதியாகச் செய்திருந்தது. உலக அரசியல் நகர்வுகளில் ஈழவிடுதலைப் போராட்டம் சிக்கிக் கொண்ட அவலம் குறித்து 4தமிழ்மீடியா தெளிவுற்றிருந்த நிலையில், மக்கள் அவலங்கள் குறித்த உண்மைநிலையினைத் தொடர்ச்சியாகத் தமிழ்த் தளத்திலும், அதற்கப்பாலான பரப்பிலும், வெளிப்படுத்தி வந்தது. உணர்ச்சிகரமான செய்தி வெளிப்பாடு என்பதற்கும் மேலாக, உண்மைச் செய்தியினை நிதானமாகத் தருதல் என்ற வகையிலேயே இன்றுவரை 4தமிழ்மீடியாவின் பணி தொடர்கிறது.
இந்த நேர்மையான பணி தொடரும் வகையிலேயே 4தமிழ்மீடியாவின் குழுமம் வடிவமைக்கப்பட்டுச் செயற்பட்டும் வருகிறது. இந்த நான்கு வருடகாலப்பணியில் 4தமிழ்மீடியா சாதித்தது என்னவெனக் கேட்போருக்கு, முதலில் சொல்லக் கூடிய பதில், அதன் செய்திக் குழுமம் என்பதாகவே இருக்கும். இளவயதும், துடிப்பும் மிக்க இந்தச் செய்திக் குழுமத்தை சிறப்பாக வளர்த்தெடுத்ததின் பயனை, இன்று தினந்தோறும் 4தமிழ்மீடியாவின் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.
இணையத் தளத்திற்கு ஏற்ற செய்தி வடிவம், அதற்கு ஏற்புடைய பொருத்தமான படம், அதற்கும் மேலான பொருத்தமானதும், அதிகாரபூர்வமானதுமான வெளியிணைப்புக்கள் என செய்தியின் முழுமையினையும் சிறப்பினையும் தருபவர்கள் 4தமிழ்மீடியாவின் செய்திக்குழுமத்தினர். ஆனால் இது ஒன்றும் அவ்வளவு இலகுவில் வாய்த்ததல்ல. ஓய்வற்ற தொடர் பயிற்சியின் அறுவடை இது. வெவ்வேறு பகுதியிலிருந்து ஒரு தளத்தில் செயற்படும் செய்தியாளர்களின் மொழி உபயோகத்தில் ஏற்படக் கூடிய குழப்பங்கள் மிகப்பெரிய சவலாக முதலில் அமைந்தது.
ஆரம்பத்தில் உள்ளது போல் இல்லையென்றாலும், இன்றளவும் இந்தப் பிரச்சனை தொடர்கிறது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். இந்தியாவில் இருந்து செய்தி எழுதுபவர்கள் கருமை நிறத்தை, கருப்பு நிறம் என எழுதுவார்கள். அதை இலங்கைச் செய்தியாளர்கள் கறுப்பு எனக் குறிப்பிடுவார்கள். இதே போன்று பொருத்தமான என்ற சொற்பதத்தை இந்தியச் செய்தியாளர்கள் சிலர் பொறுத்தமான என எழுதியிருப்பார்கள். அதனை தமிழ்க்கொலை என வாசகர்கள் கண்டிப்பார்கள். முடிந்தவரையில் இந்தத் தவறு திருத்தம் செய்யப்பட்டே வருகிறது. ஆனாலும் முடிவிலாதும் தொடர்கிறது.
ஒரு எழுத்தில் வரும் தவறில் அதிகளவு வித்தியாசம் தெரியாத போதிலும், சில வழக்குச் சொற் பிரயோகங்கள், செய்தியின் தரத்தினைக் குறைத்துவிடுவதுடன், பொருள் பிழையும் ஏற்படுத்திவிடும். ஆரம்ப காலத்தில் செய்திக் குழுமத்தில் இணைந்து கொண்ட இளவயதினரான ஸாரா, சென்னை விமானச் செய்தி தொடர்பாகத் தலைப்பிடுகையில், ' சென்னை விமான நிலையத்தில் 65 பயணிகள் உயிர் அருந்தப்பு ' எனத் தலைப்பிட்டார். இந்தச் செய்தித் தலைப்பினைப் பார்க்கும் இந்தியத் தமிழர் பலருக்கும் அச் செய்தியின் பகிர்வு என்னவென உடனடியாகப் புரியாது போயிருக்கும். ஈழத்தின் பேச்சு வழக்கில் அவ்வாறு தலைப்பிட்ட ஸாரா, இன்று செய்திப்பிரிவின் முக்கிய செய்தியாளராகவும், நல்ல கட்டுரையாளராகவும், வளர்ந்துள்ளார். அவ்வாறான வளர்ச்சியின் போக்கில் உலக அரசியல் நகர்வுகளை அவதானித்துச் செய்திகளை எழுதுபவராக மாறியுள்ளார்.
4தமிழ்மீடியாவின் செயல்திறன் கண்டு, தொடக்க நாட்களில் இக் குழுமத்தில் இணைந்தவர்கள் சிலர். அன்று அவ்வாறு இணைந்தவர்கள் இன்றளவும் தொடர்வது, எங்கள் குழுமத்தின் உறவுச் சிறப்பு எனலாம். சினிமாப் பகுதிகளுக்கான செய்திகள் தரும், தேவா, தமிழக அரசியல் நிலவரங்களை அவதானித்து, செய்திக் கட்டுரை தரும் ஆனந்த மயன், பிரபஞ்சவியல் தொடர்கட்டுரை, உலகச் செய்திகள், ஆங்கில மொழி பெயர்ப்பு எனச் செயற்படும் நவன், நாகரீகம் தொடர்பான கட்டுரைகள் தரும் லவ்யா, மலேசியாவிலிருந்து சினிமாப் பகுதிக்கான தள நிர்வாகத்தினைக் கவனிக்கும் எஸ்வி, ஆன்மீகப் பகுதிகளுக்கான கட்டுரைகள் பலவற்றை எழுதிவரும் அருந்தா ஆகியோர் அவ்வாறான உறவின் அடையாளங்கள்.
இவர்கள் தவிர குழுமத்திற்கு வெளியேயிருந்து கொண்டு, தங்களின் தொடர்ச்சியான படைப்புக்கள் மூலம், 4தமிழ்மீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் பலர். பிரித்தானியாவின் ஓக்ஸ்போர்ட்டிலிருந்து ஆய்வாளர் பற்றிமாகரன், அவரது துணைவியார் ஆசிரியை றீட்டா பற்றிமாகரன், தமிழகத்திலிருந்து தமிழில் பங்கு வணிகம் தொடர்பான பயிற்சித் தொடர் கட்டுரையான ' பயில்வோம் பங்குச் சந்தை' எழுதிய சரவணபாலாஜி, நெருக்கமான நட்புக்கும் 4தமிழ்மீடியாவின் தீவிரவாசிப்புக்கும், ' காக்க காக்க..நோக்க..நோக்க ' தொடர் கட்டுரை எழுதியவருமான திருப்பூர் ஜோதிஜி, மதுரைத் தமிழ்செல்வன், எனப் பலரைக் குறிப்பிடலாம்.
அதேபோல் தங்கள் படைப்புக்களை மீள் பிரசுரம் செய்ய பல வலைப்பதிவர்கள் மனமுவந்து அனுமதி தந்திருந்தார்கள். அதே போல் ' குளோபல் தமிழ் செய்திகள் , ' வினவு ', 'இனியொரு ' ஆகிய தளங்கள், தங்கள் படைப்புக்களை மீள்பதிவு செய்யும் அனுமதியை மனமுவந்து அளித்திருக்கிறார்கள். 'இனியொரு ' இவர்களுக்கெல்லாம் இந்த இடத்தில் நன்றி எனச் சொல்லி, அவர்களை அந்நியப்படுத்திக் கொள்ளாது, 4தமிழ்மீடியாவின் வளர்ச்சியில் அவர்களும் இனிய பங்காளர்கள் என அரவணைத்துச் செல்லவே விரும்புகின்றோம். அவ்வாறான இணைவே இணையத்தின் மிகப்பெரும் சாத்தியம் என்பதே 4தமிழ்மீடியா குழுமத்தின் ஆணித்தரமான நம்பிக்கை.
இத் தொடர் ஒரு சுயபுலம்பல் அல்ல. மாறாக நாம் இப்படித்தான் உருவாகினோம். இந்த வழியில் பயணிக்கின்றோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துத் தொடரும் ஒரு முயற்சி. இவ்வாறான வெளிப்படுத்தல்கள் தமிழில் விரிவாக மேற்கொள்ளப்படுவதில்லை. ஒன்றில் அதை தொழில் ரகசியம் எனத் தவிர்த்து விடுதல், அல்லது சுயதம்பட்டம் என நிராகரித்து விடுதல் என்றவகையில் இவ்வகையான முயற்சிகள் முழுமை காண்பதில்லை. ஆனால் அதனை நாங்கள் செய்ய முனைகின்றோம்.
4தமிழ்மீடியாவின் தனித்துவமான வளர்ச்சி, திட்மிட்டுப் படிநிலையாக உயர்ந்து வருகிறது என்பதை அதன் தொடர் வாசகர்கள் எளிதில் உணர்வார்கள். இது ஒரு குறுகிய கால நோக்கின் அடிப்படையில் அல்லாது நீண்ட கால அடிப்படையில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட செயற்திட்டம். இத்திட்டத்தின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதனை வெளிப்படுத்தி அடுத்த கட்டத்துக்குப் பயணிக்கவே விரும்புகின்றோம். இந்த முதல் நான்காண்டுகள் 4தமிழ்மீடியாவின் செயற்திட்டங்களில் ஒரு காலகட்டமாக அமைகிறது.
- இன்னும் சொல்வேன்...
இனிய அன்புடன்
- மலைநாடான்
Comments powered by CComment