சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் 'ப்ளூ சட்டை' மாறன் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர்.
ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு படம் மிகவும் சிறப்பாக உள்ளதென ஒட்டுமொத்த குழுவினரும் பாராட்டினர்.
'இந்தப்படம் கண்டிப்பாக வெளியே வரவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம் நாங்கள் சொல்லும் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது ம்யூட் செய்யவேண்டும். குறிப்பாக ஆன்டி இண்டியன் எனும் டைட்டிலை மாற்றிவிட்டு வேறு டைட்டில் வைக்க வேண்டும். நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்கவேண்டும்.
இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கேரக்டர் ஒன்றின் பெயர் 'ராஜா' என்று இருக்கிறது. அந்த பெயரையும் நீக்க வேண்டும்' என்று அக்குழுவினர் பத்து பேரும் ஒரே முடிவாக கூறினர் ‘நாங்கள் தரும் 38 கட்களையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்பட்டால் U/A சான்றிதழ் தருகிறோம்' என்றனர் ரிவைசிங் கமிட்டியினர். சமீபத்தில் ட்ரிபியூனல் கமிட்டி மத்திய அரசால் கலைக்கப்பட்டு விட்டதால், இனி இவர்கள் நீதி மன்றத்தில் மட்டுமே முறையிட முடியும்.
Comments powered by CComment