இளையராஜாவின் பதிலைப் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இசைஞானி இளையராஜா மீது குரு என்கிற அபிமானம் கொண்டவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜா 90களில் இசையமைத்த பல பாடல்களுக்கு அப்போது திலிப் குமாராக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் வாசித்ததையும் சில நுணுக்கங்களை ராஜாவிடம் கற்றுக்கொண்டதையும் ரஹ்மான் மறக்கவில்லை.

இதை இளையராஜா - 75 நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்து பதிவு செய்துள்ளார். இதற்கிடையில் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதேபோல் 16 வயதினிலே படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, இந்த இரு படங்களின் இசையமைப்பாளர் என்ற் முறையில் ஒரு திரைப்பாடல் என்பது எப்படி இருக்க வேண்டும் என சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா தெரிவித்தார். அதை தன்னுடைய சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

இதோ செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இளையராஜா அளித்த பதில்: “ஒரே பாடலை திருப்பி திருப்பி எத்தனை வருடமாக ரசிகர்கள் கேட்கிறார்கள். 20 வருடத்துக்கு முன்பு போட்ட பாடல்களை அவர்கள் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பாடல் என்பது அப்போதுதான் பூத்த மலர் மாதிரி இருக்க வேண்டும். பூத்த மலர் என்ன ஆகும் என்றால் ஓரிரு நாளில் சருகாகி உதிர்ந்து போய்விடும்.

ஆனால் பாடல் மலராகவே இருக்கும். மொட்டில் இருந்து லேசாக விரியும் நிலையில் இருப்பதைத்தான் நீங்கள் திரையிசையில் ரசித்து கேட்க முடியும். எப்போது கேட்டாலும் அடடா புதிதாக இருக்கிறதே. இப்போதுதான் போட்டமாதிரி இருக்கிறதே என்று சொல்ல வேண்டும். புதிதாக இல்லையென்றால் பயன் இல்லை. மனது எப்போதும் புதிதை நோக்கித்தான் போகும். பழையதை திரும்பி பார்க்காது. ஆனால் பழைய பாடல்களை மீண்டும் கேட்க காரணம் அது புதிதாக இருப்பதால்தான்.” என்று
கூறினார்.