counter create hit எம்.ஜி.ஆருடன் ஒரு பளாஷ் - பேக் சந்திப்பு!

எம்.ஜி.ஆருடன் ஒரு பளாஷ் - பேக் சந்திப்பு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் திலகம் என்று பெயர் பெற்ற எம்.ஜி.ஆருக்கு இன்று 105-வது பிறந்த தினம். அவர் 75-ஆம் ஆண்டு வரை

தமிழ் சினிமாவில் அவர் தான் சூப்பர் ஸ்டார். 1959-ஆம் ஆண்டும் 10 ஆண்டுகள் கழித்து 1969-ல் மீண்டும் என பேசும் படம் என்கிற சினிமா இதழின் ஆசிரியர் சம்பத் என்பவருக்கு எம்.ஜி.ஆர். இருமுறை பேட்டி அளித்தார். அந்த பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுத்த கேள்விகள் அவற்றுக்கு எம்.ஜி.ஆர். தயங்காமல் அளித்த பதில்கள் இங்கே:

நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

வறுமைதான்.

நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?

வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார். பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம். பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.

வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை.

நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?

நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.

நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?

நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே' என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.

உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?

சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.

ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?

இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.

மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?

தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.

கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?

நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.

உங்களுக்கு குல தெய்வம் உண்டா?

காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.

உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?

என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.

நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?

கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.

ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.

தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?

சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.

சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்.

சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?

இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?

அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது.

ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?

ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும். மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி. அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.

சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?

ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.

பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?

தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.

வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?

விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.

உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?

வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?

அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்.

பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?

படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.

திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?

அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்' என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.

வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?

தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு' என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.

சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?

என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.

எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?

இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.