counter create hit மாநாடு - விமர்சனம்

மாநாடு - விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த வாரம் ‘ஜாங்கோ’ என்ற பெயரில் ‘டைம் லூப்’ அதாவது கால வளையம் அல்லது நேர வளையம் எனும் கருத்தாக்கத்தை கதைக்களமாகக் கொண்டு வெளியானது.

அதாவது கதாநாயகனும் இன்னும் அவனுடன் தொடர்புடைய இன்னும் சில பாத்திரங்களும் கூட ஒரு குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகளை திரும்பத் திரும்ப எதிர்கொள்ளும் சிக்கலில் மாட்டிக்கொள்வதை இப்படங்கள் பேசுகின்றன. ஹாலிவுட்டில் கடந்த 10 ஆண்டுகளாகவே ‘டைம் லூப்’ கதைகள் பிரபலமாக இருக்கின்றன. அவற்றில் ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் நாயகன் டாம் க்ரூஸ் நடித்த ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ இந்த வகைக் கருத்தாக்கம் மற்றும் கதைக் களத்துக்கு சிறந்த உதாரணம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படமும் ‘டைம் லூப்’ சிக்கலில் மாட்டும் அப்துல் காலிக் (சிம்பு) எனும் இளைஞனின் சமூக அக்கறை சார்ந்த போராட்டத்தைப் பேசுகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகரன் மூவேந்தர் முன்னேற்றக் கட்சியின் தலைவர். அவர்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கிறார். அவர் கோவையில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறார். அவரை மாநாட்டு மேடையிலேயே தனது ஆட்களை வைத்து சுட்டுக்கொன்றுவிட்டு, அந்தப் பழியை சிறுபான்மை முஸ்லீம் இளைஞன் ஒருவன் மீது போட்டுவிட்டு, முதல்வர் பதவியை அடைய நினைக்கிறார் அதே கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான ஒய்.ஜி.மகேந்திரன். துபாயில் பணிபுரியும் சிம்பு, நண்பன் பிரேம்ஜியின் திருமணத்துக்காக கோவைக்கு விமானத்தில் வருகிறார். அப்படி வரும்போது டெல்லி வந்து கணெக்டிங் விமானம் மூலம் கோவை வருகிறார். அவர் வரும் விமானம் அயோத்தி நகருக்கு மேலே கால பைரவர் கோயிலுக்கு நேர்மேலே பறக்கும்போது, சிம்பு டைம் லூப் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அவருக்கு நடக்கவிருக்கும் கோவை மாநாடு, முதல்வர் கொலை, நண்பர்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து என அனைத்தையும் அறிந்துகொள்கிறார். இதன்பின்னர், முதல்வரின் படுகொலையைத் தடுத்து, மாநாட்டில் தூண்டப்பட இருந்த மதக் கலவரத்தை தடுத்தாரா, நண்பர்களை ஆபத்திலிர்ந்து காப்பாற்றினாரா, அப்பாவி முஸ்லீம் இளைஞனை காப்பாற்றினாரா என்பதுதான் மீதிக் கதை.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை காலம் காலமாக கட்டம் கட்டுவதில் இருக்கும் பிழைப்பு அரசியலைத் தோலுரிக்கும் அப்துல் காலிக் ஆக வரும் சிம்பு, மூத்த அரசியல்வாதி சதியின் சூத்திரதாரியாக இருந்தாலும் அவருக்கு உறுதுணையாக இருந்து முதல்வரைக் கொலை செய்யும் திட்டத்தை அரங்கேற்றத் துடிக்கும் போலீஸ் அதிகாரி தனுஷ்கோடி (எஸ்.ஜே.சூர்யா) ஆகிய இரண்டுபேருக்கும் சரி சமமான கதாபாத்திரம் வழங்கியதால் திரைக்கதை செம்ம விறுவிறுப்பாகவும் கதாநாயகனுக்கான சவால் அத்தனை எளிதாக வெற்றிகொள்ளமுடியாததாகவும் உள்ளது. இப்படி சரி சமமாக கதாபாத்திரங்களை எழுதியதால் திரைக்கதை வலுவான ஆடுபுலி ஆட்டமாக மாறிவிடுகிறது.

முக்கியமாக கால வளைத்தில் கதாநாயகன் கொல்லப் பட்டால் மட்டுமே, அவன் திரும்பத் திரும்ப வந்து ஆபத்தை தடுக்கமுடியும் என்கிற நிலை இருப்பதால் அவனைச் சாகாமல் பார்த்துகொள்ளும் வில்லன் கதாபாத்திர வடிவமைப்பு அருமையிலும் அருமை. நாயனுக்கு இருக்கும் கால வளையப் பிரச்சினைக்குள் வில்லன் எப்படி சிக்குகிறார் என்பதைச் சொன்னது லாஜிக்குடன் இருந்தாலும் அதை இன்னும் தெளிவுபடுத்தியிருக்கலாம்.

சிம்பு பல காட்சிகளில் குண்டாக இருந்தாலும் முதல் முறையாக கதையை நம்பும் ஒரு படத்தில் துணிந்து நடித்திருப்பதற்காக அவரைப் பாராட்டலாம். எஸ்.ஜே.சூர்யா அநியாயத்துக்கும் ஓவர் ஆக்டிங் செய்வதாலும் அவருடைய சதிக் கோட்பாட்டுக் கதாபாத்திரத்துக்கு அட்டகாசமாக எடுபடுகிறது. அவருக்கு அடுத்த நிலையில் அப்ளாஸ்களை அள்ளிக்கொண்டு போகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அவருடைய திரைப்பட கேரியரில் இப்படியொரு அரசியல்வாதி வில்லன் கதாபாத்திரம் கிடைத்தன் மூலம் தன்னுடைய எதிர்மறை நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகி கல்யாணி ப்ரியதர்சனுக்கும் கதையில் வேலை இருக்கிறது. அதை உணர்ந்து நன்றாகவே செய்திருக்கிறார். இவருடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோரும் ஜாமாய்த்திருக்கிறார்கள்.

காட்சிகள் திரும்பத் திரும்ப வந்தாலும் பார்வையாளர்களை எரிச்சல் ஊட்டாதவண்ணம் பார்த்துப் பார்த்து எடிட் செய்திருக்கிறார்கள் இயக்குநரும் படத் தொகுப்பாளர் பிரவீனும். படத்தின் இன்னொரு கதாநாயகன் யுவன் சங்கர் ராஜா. கதைக் களத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு விறுவிறுப்பான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். ஒரேயொரு திருமண வீட்டின் பாடலும் ஈர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் கே.நாதனுக்கு சவாலான கதைக் களம். நிகழ்ந்த காட்சிகள் திரும்ப வருவதால், அவற்றின் கோணங்களை மாற்றி அலுப்பு ஏற்படுவதைத் தடுத்துள்ளார்.

மாநாடு உண்மையாகவே சிம்புவுக்கு அட்டகாசமான ‘கம்பேக்’ திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் ‘டைம் லூப்’ படங்கள் தமிழில் தொடந்து வருமானால் அதை பார்வையாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சிகளையும் கதாபாத்திரங்களின் சாவல்களையும் அமைக்க வேண்டும் என்பதை ‘மாநாடு’ எடுத்துக்காட்டியிருக்கிறது.

-4தமிழ்மீடியா விமர்சனக் குழு

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula