counter create hit லொகார்னோ பியாற்சே பெரு முற்றத்தில் ஒரு Expressionist சினிமா அனுபவம் !

லொகார்னோ பியாற்சே பெரு முற்றத்தில் ஒரு Expressionist சினிமா அனுபவம் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ மூன்றாம் நாள் திரைப்பட விழாவில் காணக்கிடைத்த இரு திரைப்படங்கள் Axelle Robert இன் பிரெஞ்சு திரைப்படம் ' Petite Solonge ' மற்றும் பியாற்சே கிராண்டே பெரு முற்றத்தில் திரையிடப்பட்ட ஜேர்மனிய திரைப்படம் Hinterland.

இதில் Hinterland திரைப்படம் ஒரு Expressionist Cinema அனுபவம். 1920ம் ஆண்டு வியென்னா. முதலாம் உலகப் போர் முடிவடைந்து முழுவதும் கலைக்கப்பட்ட ஆஸ்திரிய ஹங்கேரிய சாம்ராஜ்ஜியத்திற்கு, எதிரியின் பிடியில் சிக்கி உயிருடன் மீண்டு வந்த கடைசிப் போர்வீரர்கள், சிலர் திரும்புகின்றனர். ஆனால் அவர்கள் கொண்டாடப்படுவதற்கு பதிலாக யாரென்றே இனம் தெரியாத நபர்களாக வியென்னா தெருக்களில் அலையவிடப்படுகின்றனர்.

போரில் வென்றோ, தோற்றோ தன் சொந்த நாட்டுக்காக போராடிய வீரர்களின் மதிப்பு சொந்த மக்களிடம் அவ்வளவு தான். ஏனெனில் போரின் அழிவு, கொடூரத்தால் எந்த மக்களின் மனதில் ஏற்பட்ட விளைவு அது. இப்படியான ஒரு சூழலில் வியென்னாவுக்கு திரும்பி வரும் அந்த போர் வீரர்கள் ஒவ்வொருவராக ஒருவனால் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். யார் கொல்கிறான், ஏன் கொல்கிறான் என தேடத் தொடங்குகிறான் படத்தின் கதாநாயகன்.

இத்திரைபப்டத்திற்காக இயக்குனர் Stephan Ruzowitzky உருவாக்கிய காட்சி செட்டுக்கள் இதுவரை சினிமாவில் பெரிதாக கண்டிராத ஒரு காட்சி அனுபவம். ஒருவகையான ஓவிய கிராபிக்கல் செட்டில் அனைத்து கதையும் நகர்கிறது.

அடுத்த தசாப்தத்தின் Most innovative திரைப்படமாக இது பேசப்படலாம். அந்தளவு புதிய நிறங்களும், வெளிச்சமும், இசையும் படத்தை அழகு படுத்துகிறது. படத்தின் அனைத்து காட்சிகளும் கிட்டத்தட்ட நீலத் திரையில் படமாக்கப்பட்ட பின்னர் கிராபிக்ஸ் செட் சேர்க்கப்பட்டது என்கிறார் இயக்குனர். எப்போதும் இரண்டாம் உலகப் போரையும், ஹிட்லரின் ஹோலாகோஸ்ட்டையும் தான் அதிகம் பேசுவோம். இந்த திரைப்படம் வியென்னாவின் முதலாம் உலகப்போரின் பின்னரான கலை, இசை மாற்றம், சோசலிச, கம்யூனிச மாற்றம் அதன் தாக்கம் எப்படி மக்களை மாற்றுகிறது என்பதனை காண்பிக்க விளைகிறது. அதுதான் உண்மையில் ஆஸ்திரிய மக்களுக்கு நிஜ அதிர்ச்சி கொடுத்த போர் என்கிறார் இயக்குனர். ஏனெனில் இந்த சமூக சித்தாந்தங்கள் இதுநாள் வரை இருந்த அனைத்து இறுக்கமான தேசிய கோட்பாட்டுக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதில் இருந்த எல்லா நம்பிக்கையும் இழக்கச் செய்கின்றன. அந்த மாற்றங்கள் இப்படத்தின் கதாநாயகனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.

இந்தப்படத்தின் அனைத்து Visual காட்சிகளும் கிட்டத்தட்ட Expressionnisime வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். தெருக்கள், நகரங்கள், பாலங்கள், கட்டிடங்கள் என அனைத்தும் ஒரு வகையில் சரிந்தும், கூணிக் குருகியும், ஒழுங்கற்ற சமச்சீரற்ற கோணத்திலும் இருக்கும். அது அனைத்தும் கதாநாயகன் பார்வையில் அந்நகரம் தோன்றும் காட்சிகள். இதை இப்படி உருவாக்குவதற்காக முதலில் நீலத்திரையில் நடிகர்கள் அனைவரையும் நடிக்க வைத்து பின்னர் அவர்களது நடிப்புக்கு ஏற்ற வகையில் கிராபிக்ஸ் காட்சிகளை பின்னர் சேர்த்தோம் என்கிறார் இயக்குனர். மாற்றிச் செய்யத்தான் முயற்சித்தோம். ஆனால் செட்டுக்கள் செயற்கையானவை என்பதனால் நடிகர்களால் இயல்பாக நடிக்க முடியவில்லை. ஆகையால் அதைக் கைவிட்டு நீலத்திரையிலேயே அனைவரையும் நடிக்க வைத்தோம் என்கிறார் அவர்.

Espressioniste என்பது எமது கண்களால் இயற்கையாக காணமுடியாத ஆனால் உணரக்கூடியவற்றை கலையில் காண்பிப்பது. அதைத்தான் Stefan Ruzowitzky உருவாக்கி அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். அந்தளவு படத்தின் காட்சி அமைப்புக்கள் கதையை அழகாக நகர்த்துகிறது. பியாற்சே கிராண்டே போன்ற திறந்த வெளி முற்றத்திற்கு ஏற்ற திரைப்படம் தான் இது.

Petite Solange திரைப்படம் இம்முறை போட்டிப் பிரிவில் உள்ள முழு நீளத் திரைப்படம். Axelle Ropert இன் இயக்கத்தில் உருவான திரைப்படம் முழுவதுமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் படம்பிடிக்கப்பட்டது.

14 வயதும் நிரம்பாத Solange எனும் பெண்ணின் பார்வையில் அவள் அதிகமாக நேசித்த அவளது குடும்பம், பெற்றோர் எப்படி பிரிவடைகின்றனர், அவர்களுடைய பிரிவும், சண்டையும் அவளை என்ன செய்கிறது என்பதை காண்பிக்கும் உணர்ச்சித் திரைப்படமிது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இத்தாலிய, பிரான்ஸ் புதிய அலை சினிமாக்களை பிரதிபலிக்கிறது.
Jaques Demy, Luigi Comencini ஆகியோரின் திரைப்படங்களை ஒத்த காட்சி அமைப்புக்கள் பெரும்பால நேரங்களில் வந்து செல்கின்றன. ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் பார்வையில் பெற்றோரின் பிரிவு மெதுவாக காண்பிக்கப்படுகிறது.

தன் மனைவியை விட இளவயது பெண் மீது காதல் ஏற்பட்டு மனைவியை பிரியத் தொடங்கும் கணவன், செய்வதறியாது திகைக்கும் மனைவி, இந்த சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள வேண்டாமே என அவர்களை விட்டு தூரத்திற்கு செல்லும் அண்ணன், பெற்றோரின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாது, பள்ளிக் கல்வியிலும் புலனை செலுத்த முடியாது வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கும் மகள் என கதை இக்குடும்பத்தை சுற்றியே நகர்கிறது.

Burgouise என சொல்லக்கூடிய மேற்குலக பணக்கார அல்லது நடுத்தர பணக்கார குடும்பங்களில் எந்தளவு கணவன் மனைவி தனித்தனியாக தங்களது வாழ்க்கையை வாழத் தொடங்க அல்லது வாழ விரும்புவதில் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படத் தொடங்குகிறது என காண்பிக்கும் இன்னுமொரு திரைப்படம்.

பார்த்து முடிக்கையில், மேற்குலக நடுத்தர பணக்கார குடும்பங்களில் நிதி நிலைமை சரியாக இருக்கும் போது அவர்களுக்குள் ஏற்படக் கூடிய (ஒரே ஒரு ) பிரதான வாழ்க்கைச் சிக்கல் திருமண முறிவாகத் தான் இருக்கும் என்பதைச் சொல்லும் இன்னுமொரு திரைப்படம். அதனாலேயே படத்தின் நடுப்பகுதியிலேயே அலுப்பு ஏற்படத் தொடங்குகிறது.

- 4தமிழ்மீடியாவுக்காக : லொகார்னோவிலிருந்து ஸாரா