counter create hit ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 4

ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 4

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தொலைபேசி மூலம் நேரடி இசையை வழங்கும் முயற்சியே ஸ்டிரீமிங் சேவைக்கான மூல விதை என பார்த்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இது நிகழ்ந்து விட்டாலும், ஸ்டிரீமிங் என்பது தனது காலத்தை முந்தைய சேவையாக இருந்தது. எனவே தான் நாமறிந்த வகையில், ஸ்டிரீமிங்கை அறிமுகம் செய்து கொள்ள ஒரு நூற்றாண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஸ்டிரீமிங் பாதையில் திருப்பங்களும், தாமதமும் !

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், ஸ்டிரீமிங் கருத்தாக்கம் அதற்கான உரிமைச்சொல்லுடன் அறிமுகமானாலும், இடைப்பட்ட காலத்தில் உண்டான தொழில்நுட்ப முன்னேற்றங்களே இதற்கு பாதை அமைத்தன. இந்த முன்னேற்றங்கள் நேர்கோட்டில் நிகழாமல், பல்வேறு துறைகளில் கிளைவிட்டன. ஒவ்வொரு கிளையும் தனக்கான திசையில் தனியே வளர்ச்சி பெற்றது. இந்த கிளைகள் எல்லாம் சங்கமிக்கும் அற்புதம் பின்னர் நிகழ்ந்தது.

இந்த பயணத்தில், மீண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கே செல்வோம். இசை நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க வேண்டும் என்றால், அது எங்கு நிகழ்த்தப்படுகிறதோ அங்கே செல்வது மட்டுமே ஒரு வழியாக இருந்த கால கட்டம் அது. இப்படி தேடிச்சென்று இசை கச்சேரிகளை கேட்பதும் இயல்பாக கருதப்பட்டது. (நாம் நூற்றாண்டுக்கு முன்னர் இருக்கிறோம், இன்னமும் பாடல்களை பதிவு செய்யும் வசதி அறிமுகமாகவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்). தொலைபேசி எனும் தொழில்நுட்பம் இதை மாற்றி அமைத்தது.

பேச்சலைகளை கொண்டு செல்லும் தொலைபேசியை இசைக்கான வாகனமாகவும் மாற்ற முடியும் என்பதை முதலில் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ’எலிஷா கிரே’ உணர்த்தியிருந்தார் என பார்த்தோம். அதன் பிறகு பிரான்சில் கிளமண்ட் அட்லரின் ’தியேட்டரோபோன்’ (Théâtrophone) சாதனம், இசை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைபேசியில் கொண்டு வந்ததையும் பார்த்தோம். இந்த சாதனம் செயல்பட்ட விதம் பற்றி தெரிந்து கொண்டால் இன்னும் வியப்பாக இருக்கும். அடிப்படையில் இந்த சாதனம் கேட்பவரின் இரண்டு காதுகளிலும் இரண்டு கேட்பு அமைப்புகளை கொண்டிருந்தது. இசைக்கச்சேரி நடைபெறும் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் பொருத்தப்பட்டிருந்த கம்பிகள் வாயிலாக கேட்பு கருவிகள் மூலம் இசையை கேட்க முடிந்தது. ஆனால், இதன் செயல்பாடு சிக்கலானதாக இருந்தது.

1881 ல் பாரிஸ் கண்காட்சியில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்ற இந்த கண்டுபிடிப்பு அதன் பிறகு பாரிஸ் நகரம் முழுவதும் விரிவடைந்தது. உணவகங்கள், அரங்குகள், கபேக்கள் உள்ளிட்ட இடங்களில் தியேட்டரோபோன் மையங்கள் அமைக்கப்பட்டன. கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொண்டால், ஐந்து நிமிடங்களுக்கு இந்த சாதனம் மூலம் இசை கச்சேரியை நேரடியாக கேட்கலாம். இதற்காக தியேட்டரோபோன் நிறுவனம் மைய நிலையம் ஒன்றை அமைந்திருந்தது. அதிலிருந்து துணை நிலையங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையங்களில், பாட்டரிகள், அழைப்பு சாதனங்கள் உள்ளிட்டவை பொருத்தப்படிருந்தன. இசை நிகழ்ச்சி மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளுடன் இவை இணைக்கப்பட்டிருந்தன. மைய நிலையமும், துணை நிலையங்களும் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு, மைய தொலைபேசி அமைப்புடன் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த ஏற்பாட்டின் மூலம், ஓபரா வகை இசை நாடக நிகழ்ச்சிகளை தொலைபேசி வாயிலாக நேரடியாக கேட்டு ரசிக்க முடிந்தது. இவைத்தவிர, பிரத்யேக வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இந்த வசதியை தங்கள் வீடுகளிலும் அமைத்துக்கொண்டிருந்தனர். பின்னர் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சேவை பிரபலமானது. லண்டன் நகரிலும் இதே போன்ற சேவை அறிமுகமாகி, விக்டோரியா மகாராணியும் அதன் வாடிக்கையாளராக இருந்தார். லண்டன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்த ராணுவ வீரர்கள், இந்த வசதி மூலம் இசையை கேட்டு மகிழ்ந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இசை மட்டும் அல்ல, தொலைபேசி அமைப்பு மூலம், செய்திகளும் கூட இதே விதமாக அளிக்கப்பட்டன. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில், டிரிவேடர் புஸ்கஸ் (Tivadar Puskas ) எனும் கண்டுபிடிப்பாளர் டெலிபோன் ஹெரால்ட் எனும் பெயரில் பங்குச்சந்தை செய்திகளை தொலைபேசியில் வழங்கினார். லண்டனில் எல்க்ட்ரோபோன் கம்பெனி, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தகவல்களை தொலைபேசியில் வழங்கியது. நாளிதழ் அலுவலகங்கள் போலவே இவை செயல்பட்டு செய்திகளை சந்தாதாரர்களுக்கு வாசித்தன. இசைக்கச்சேரி அரங்குகள், தேவாலயங்கள், மற்றும் நாடக அரங்குகளில் இருந்தும் சேவை வழங்கப்பட்டது. நிற்க, இந்த நிகழ்வுகள் நவீன ஸ்டிரீமிங்கின் முன்னோடியாக கருதப்படக்கூடியவை மட்டும் அல்ல, ஒலிபரப்பு சேவையின் முன்னோடியாகவும் அமைகின்றன.

 

ஆம், வானொலி மூலமான ஒலிபரப்பு துவங்குவதற்கு முன்பே, தொலைபேசி வாயிலான இசை மற்றும் செய்தி ஒலிபரப்பு துவங்கிவிட்டது. 1895 ல் மார்கோனி வானொலி அலைகள் மூலம் முதல் சோதனை ஒலிபரப்பை மேற்கொண்டார். அதன் பிறகு ராணுவ தகவல் பரிமாற்றத்திற்கே பெருமளவு பயன்படுத்தப்பட்ட
வானொலி அடுத்து வந்த ஆண்டுகளில் மெல்ல ஒலிபரப்பு சேவையாக அறிமுகமானது. 1920 களுக்கு பிறகு வானொலி முதன்மை ஒலிபரப்பு ஊடகமாக நிலைபெற்றது.

வானொலியின் எழுச்சி, இசை மற்றும் செய்தி சார்ந்த தொலைபேசி சேவைகளை பின்னுக்குத்தள்ளின. தொலைபேசி அமைப்புகளை விட, வானொலி வழியே செய்தி மற்றும் இசை கேட்பது எளிதாக இருந்ததோடு, கட்டணம் இல்லாமலும் இருந்தது. இதனால் வானொலி, ஒலிபரப்பு ஊடகமாக வளர்ச்சி அடைந்தது, தொலைபேசி, பேசுவதற்கான சாதனமாக அறியப்பட்டது. இதனிடையே, இசையை பதிவு செய்யும் வசதியும் அறிமுகமானது. தொலைபேசி கண்டறியப்பட்ட காலத்திலேயே, இசையை பதிவு செய்து மீண்டும் கேட்கச்செய்யும் ஆய்வுகள் துவங்கிவிட்டன என்றாலும், இதிலும் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.

 

1877 ல் தாமஸ் ஆல்வா எடிசன், ஒலியை பதிவு செய்வதற்கான உருளை சார்ந்த போனோகிராப் சாதனத்தை கண்டுபிடிக்கிறார். தொலைபேசியை  கண்டுபிடித்தவராக அறியப்படும் கிராகாம் பெல், இதே காலகட்டத்தில் ஒலியை பதிவு செய்வதற்கான கிராபாபோன் சாதனத்தை கண்டுபிடித்தார். சில ஆண்டுகள் கழித்து 1887 ல், அமெரிக்காவுன் எமிலி பெர்லைனர் (Emile Berliner ), நுண் குழிவுகள் கொண்ட வட்டு மீது ஒலியை பதிவு செய்யும் கிரமபோன் சாதனத்தை கண்டுபிடித்தார். இதன் பிறகு அறிமுகமான நுட்பங்கள் ஒலிப்பதிவு நுட்பத்தை மேலும் மேம்படுத்தின. இதன் விளைவாக, வினைல் இசைத்தட்டுகளும், பின்னர் கையடக்க கேசட்களும் அறிமுகமாயின.

துவக்கத்தில் ஒலிப்பதிவின் தரத்தில் போதாமைகள் இருந்தாலும், படிப்படியாக அறிமுகமான நுட்பங்கள் அதற்கு தீர்வாக அமைந்தன. ஆக, இசையை பதிவு செய்து விரும்பிய நேரத்தில் கேட்டு ரசிப்பது எளிதானது. ஆனால், ஒலியை பதிவு செய்வதற்கான முயற்சி, போனோகிராபை எடிசன் கண்டுபிடிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கி விட்டது என்பது தான் ஆச்சர்யம். 1857 ல், பிரான்சைச்சேர்ந்த எட்வர்ட் லியான் ஸ்காட் என்பவர், ( Édouard-Léon Scott de Martinville ) ஒலியை பதிவு செய்யும் போனடோகிராப் ( Phonautograph ) எனும் சாதனத்தை கண்டுபிடித்தார். இந்த சாதனம் ஒலி அலைகளின் குறிப்புகளை காகிதத்தில் பதிவு செய்யக்கூடியதாக இருந்தாலும், அதை மீண்டும் ஒலிக்க செய்யக்கூடியதாக இல்லை.

 

கேசட்களை அடுத்து, கம்ப்யூட்டர் காலத்தில் சிடிக்கள் அறிமுகமாயின. அதன் பிறகு இணைய யுகத்தில் எம்.பி.- கோப்பு வடிவம் அறிமுகமானது. அதுவரை அனலாக் வடிவில் அறியப்பட்ட இசையை எண்ம வடிவில் (டிஜிட்டல்) மாற்றும் வசதியே இதற்கு அடிப்படையாக அமைந்தது. இசையை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் போது, அதை சுருக்குவதற்கான தேவை ஏற்பட்டது. இந்த சவால் ஆரம்பத்தில், வரம்பாகவும், பின்னர் வரமாகவும் மாறியது பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம். இடைப்பட்ட காலத்தில், இசையை பதிவு செய்யும் வசதி, புதிய வர்த்தக துறையாக உருவெடுத்து, இசைக்கலைஞர்களும், பாடகர்களும் புதிய நட்சத்திரங்களாக உருவானார்கள். இசைத்தொழில் சார்ந்த வர்த்தக சம்ப்ராஜ்யங்களும் உருவாயின. ரசிகர்களுக்கும் இசை இன்னும் நெருக்கமானதோடு, இசைத்தட்டு வடிவில் சொந்தம் கொண்டாடுவதும் சாத்தியமானது.

நேரடியாக இசையை கேட்டு ரசிக்க வழி செய்த தொலைபேசி வழியிலான ஸ்டிரீமிங் வசதி ஏறக்குறைய மறக்கப்பட்டு விட்டது. அடுத்தடுத்து வந்த நவீன தொழில்நுட்பங்களுக்கு பழகிய தலைமுறை இப்படி ஒரு வசதி இருந்தது என்பதை கூட அறிந்திருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், இந்த வசதி ஸ்டிரீமிங் எனும் பெயரில் மீண்டும் துளிர்விடத்துவங்கிய போதும், பெரும்பாலானோர் அதை உணரவில்லை. அது மட்டும் அல்ல, ஸ்டீரிமிங் என்பது வீடியோவையும், அதன் மூல வடிவான தொலைக்காட்சியையும், அதற்கும் முன்னோடியான திரைப்படத்தையும் அரவணைத்துக்கொள்ளப்போகிறது என்பதையும்
அறிந்திருக்கவில்லை.

இவற்றின் நடுவே இன்னொரு கிளையாக, தொலைப்பேசி, அதன் ஆதிவடிவமான நிலைப்பேசியில் இருந்து உலாபேசியாக மாறியதும் நிகழ்ந்தது. அதோடு வயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா பரிமாற்றமும், புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது. டிஜிட்டல் யுகத்தின் தாக்கத்தால், இவை எல்லாம் சங்கமித்தது எப்படி என்றும், அதன் பயனாக ஸ்டிரீமிங் வசதி புதிய வேகம் எடுத்த விதத்தையும் தொடர்ந்து பார்க்கலாம்.

( தொடரும்)

- 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.