மகத்துவமிக்க மஞ்சள்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தெற்காசியாவை தாயகமாக கொண்ட இச் செடியானது இலங்கை, இந்தியா, சீனா போன்ற அயன மண்டல நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது. இலங்கையில் இது தாழ் ஈர நிலங்களில் பயிரிடப்படுகின்றது.

தாவரவியல் பெயர்- Curcuma longa
குடும்பவியல் பெயர்- Zingiberaceae
ஆங்கிலப் பெயர்- Turmeric
சிங்களப் பெயர்- அத்-கஹா
சமஸ்கிருதப் பெயர்- ஹரித்ரா, கௌரி
வேறு பெயர்கள்- அரிசனம், காஞ்சனி, நிசி, பீதம்

பயன்படும் பகுதி- கிழங்கு
வேதியியற் சேர்க்கைகள்-
Curcuminoids, Volatile oil(3-5%), 60% of turmerones, Bitter principles, Sugar, Starch, Resin Camphor, Fat, Carvone, Cucumone, Curlone
சுவை- கைப்பு, கார்ப்பு
வீரியம் - வெப்பம்
பிரிவு- கார்ப்பு
மருத்துவச் செய்கைகள்-
Curcumin விஷேடமாக
Anti-oxidant ஒட்சியேற்றி எதிரி
Anti-inflammatory அழற்சி எதிரி
Gastroprotective இரைப்பை தேற்றி
Hepatoprotective ஈரல் தேற்றி
Hypocholesterolamic கொழுப்பை குறைத்தல்
போன்ற மருத்துவச் செய்கைகளை ஆற்றும்.

Turmeric விஷேடமாக Hepatoprotective ஈரல்தேற்றியாக தொழிற்படும். Turmeric & Curcumin இரைப்பையினுள் சீதப்படையின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் மனவழுத்தம், மதுபாவனை மற்றும் மருந்துகளால் உருவாகிய புண்களை ஆற்றும் குணமுடையவை. மிளகில் காணப்படும் Piperine எனும் வேதியியற் சத்தானது Curcumin அகத்துறிஞ்சப்படலை அதிகரிக்கச் செய்யும். (இதனாலேயே எமது பாரம்பரிய சமையலில் மிளகும் மஞ்சளும் ஒன்றாக உணவில் சேர்க்கப்படுகின்றன.)
வேறு மருத்துவச் செய்கைகள்-
Cholagogue பித்தநீர் பெருக்கி
Blood purifier இரத்த சுத்திகாரி
Anthelmintic நுண்புழுக்கொல்லி
Detoxifier நச்சுநீக்கி
Anti-Asthmatic இரைப்பு நீக்கி
Anti-tumour கழலை எதிரி
Anti-cutaneous தோல்நோய் எதிரி
Stomachic பசித்தீ தூண்டி
Stimulant வெப்பமுண்டாக்கி
Anti-platelet செய்கை மூலம் இதயத்திற்கும் குருதிக்கலன்களிற்கும் பாதுகாப்பளிக்கின்றது.
நிணநீர் கலங்களில் மரபணு பாதிப்படைவதிலிருந்தும் பாதுகாக்கின்றது.

நோய்நிலைமைகள்-
குன்மம், மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வயிற்றோட்டம், தலைவலி, நீரேற்றம், பீனிசம், மாறல் சுரம், வீக்கம், வண்டுகடி விஷம், அட்டைக்கடி விஷம், பெருவிரணம், அம்மை நோய், சருமச் சிதைவு, கீல் வாதம், மாதவிலக்கின்மை

பயன்படுத்தும் முறை-
மஞ்சளை நீர் விட்டரைத்து உடலிற் பூசி நீராட சருமத்தின் துர்நாற்றம் நீங்கும்.
மேலும் மேனி பொன்னாகும். முகத்திலுண்டான ரோகமும் வியர்வையும் நீங்கும்.
மஞ்சளை பொடியாக்கி புண்கள் மீது தூவ அவை ஆறும்.
சாதத்துடன் மஞ்சளை சேர்த்தரைத்து கட்டிகளின் மீது வைத்துக் கட்ட எளிதில் பழுத்துடையும்.
மஞ்சளை சுட்டு நுகர நீரேற்றம் நீங்கும்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து அம்மைக் கொப்புளங்களின் மீது பூச அவை விரைவில் ஆறும்.
ஆடாதோடை இலையுடன் மஞ்சள் மற்றும் பசுவின் சிறுநீர் விட்டரைத்து உடலில் பூச சொறி, சிரங்கு, நமைச்சல் ஒழியும்.
மஞ்சளுடன் சுண்ணாம்பு மற்றும் பொட்டிலுப்பு சேர்த்து சுடவைத்து சுளுக்கு, சருமச்சிதைவுக்கு பூசலாம்.
பச்சை மஞ்சளின் இரசத்தை பூச அட்டைக்கடி விஷம், காயம், சருமச் சிதைவு நீங்கும்.
மஞ்சட் சூரணத்தில் 8-10 குன்றியளவு உட்புகட்ட வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, மாறல் சுரம் நீங்குவதுடன் குடல் பலமடையும்.
மஞ்சளை குப்பிளாய் இலையுடன் சேர்த்தரைத்து பசை போலாக்கி சருமத்தில் பூச சிரங்கு (Eczema) நோய் குணமடையும்.
மஞ்சள் நீரையருந்த காமாலை குணமாகும்.
மஞ்சளை அரைத்து நீரிற் கலக்கி வெண்சீலைக்கு சாயமேற்றி அதை ஆடையாக பயன்படுத்தினால் வாதநீர்ச் சுருக்கு, இருமல், விடசுரம், மாறாத்தினவு, தனிச்சுரம், மலபந்தம் போன்றவை நீங்கும்.
மஞ்சள் நீரில் ஒரு சீலைத்துண்டை நனைத்து நிழலில் உலர்த்தி கண்நோய் உள்ளவர்கள் அதனைக் கொண்டு கண்களை துடைத்து வர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் போன்றவை நீங்கும்.
மகத்துவமிக்க மஞ்சளின் மகிமையறிந்து அதனை அன்றாடம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோமாக!

~ சூர்யநிலா

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.