counter create hit மூலிகை அறிவோம் - பெருந்துணை புரியும் பனை

மூலிகை அறிவோம் - பெருந்துணை புரியும் பனை

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வடமாகாணம் எங்கும் வளர்ந்து ஒய்யாரமாய் நிற்கும் மரங்கள். கரடுமுரடான நிலங்களிலும் கூட இவை செழித்து வளரும் இயல்புடையன.
கவனிப்பாரற்று வளர்ந்துகிடக்கும் மரங்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மக்களுக்குப் பல வகைகளில் உணவாகவும், மருந்தாகவும் பயன்பட்டு வருகின்றன. தன் தலையினாலே இனிமையான பானத்தைக் கொடுக்கிறன. பூமியில் ஊன்றி வைத்த தன் விதையின் முளை சுவை மிகுந்த பனங்கிழங்கைத் தருகிறது.

இவ்விதம் அடியிலிருந்து நுனி வரை பனையின் ஒவ்வொரு பாகமும் மனித வாழ்க்கையில் பங்கு கொண்டு இன்பத்தைக் கொடுக்கின்றமையினால் கற்பகதரு என செல்லமாக அழைக்கப்படுகின்றது.

தாவரவியல் பெயர் -Borassus flabellifer
குடும்ப பெயர்- Borassaceae
ஆங்கிலப் பெயர்- Palmyra tree
சிங்கள பெயர்- Thal gaha
சமஸ்கிருத பெயர்- Tála
வேறு பெயர்கள்-
தாலம், கரும்புறம்,கற்பகதரு ,ஏடகம், காமம், தருவிராகன், தாளி

பயன்படும் பகுதி-
குருத்து, ஓலை ,பூ ,நுங்கு, பழம், மட்டை, கள், கிழங்கு, வேர்
இலை, மட்டை ,வேர்

சுவை- துவர்ப்பு, இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு

பூ
சுவை - துவர்ப்பு
வீரியம்- சீதம்
விபாகம் -இனிப்பு

கள்
சுவை-இனிப்பு ,புளிப்பு
வீரியம் -சீதம்
விபாகம்-இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Sugar, Calcium, Iron, Phosphorus, Thiamine, Riboflavin, Ascorbic acid, Nicotinic acid ,Protein, Calories

மருத்துவ செய்கைகள்-
இலை, மட்டை
Astringent - துவர்ப்பி
Aphrodisiac - இன்பம் பெருக்கி

நுங்கு
Demulcent -உள்ளழலாற்றி
Diuretic -சிறுநீர் பெருக்கி
Nutrient -உடலுரமாக்கி

மது
Diuretic -சிறுநீர் பெருக்கி
Refrigerant -குளிர்ச்சியுண்டாக்கி

கள்
Stimulant -வெப்பமுண்டாக்கி

தீரும் நோய்கள்-
வாதகுன்மம், மூத்திரச் சிக்கல், பல்வலி,
குஷ்டம், க்ஷயரோகம், இரத்தக்கடுப்பு, கணைச்சூடு, சூதகவலி, சூதகக்கட்டி, பசியின்மை, ஆஸ்துமா

பயன்படுத்தும் முறைகள்-
ஓலை, மட்டை இவைகளைச் சுட்ட சாம்பலிலிருந்து ஒருவித உப்பு எடுத்துக் குறைந்த அளவில் குன்மநோய்க்குக் கொடுக்கலாம்.
மட்டைச்சாறு கண்நோயை அகற்றும்.
இளங்குருத்தைத் தின்னலாம். ஆனால் மூலம், பேதிளுண்டாகும்.
புளிக்காத கள் அல்லது மதுவை அதிகாலையில் 40 நாள் இடைவிடாது சாப்பிட்டுவர மேகரோகம் குணமாகும்.
பனைமதுவிலிருந்தும் வெல்லம், கற்கண்டு, சருக்கரை முதலியவை செய்து வருகிறார்கள்.

பூவைச் சுட்ட சாம்பல் துர்மாமிசத்தைப் போக்கும். மலக்கட்டு தோடம் நீங்கும். இதன் காய் முதிராததற்கு முன் வெட்டி உள்ளிருக்கும் நுங்கையும் நீரையும் சாப்பிட தாகம் தணிக்கும். குளிர்ச்சியைத்தரும். வெயில்காலத்துக்கு மிகவும் ஏற்றது.

பனம்பழம் மிகு மந்தத்தை உண்டுபண்ணும்.
இதன் கிழங்கு மிகு தீபனசக்தி வாய்ந்தது.
கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி அத்துடன் தேங்காய்பால் உப்பு முதலியவை சேர்த்துப் பிட்டவியல் செய்து தினமும் உண்டுவர தேகவன்மையைத் தரும்.
கிழங்கை வேகவைத்துத் தோல், உள்முளை முதலியன நீக்கித் துண்டு துண்டாக வெட்டி நன்றாகக் காயவைத்து உலர்த்தி எடுத்து, இடித்து மாவாக்கிப் பலகாரங்கள் செய்து சாப்பிடத் தாது புஷ்டியை உண்டாக்கும்.
தேகவன்மையையுந் தரும்.
குஷ்டம்
தினசரி ஒரே பனையின் பதநீரைக் காலை, மாலை அருந்தி பனை ஓலைப் பாயில் படுத்து, பனை ஓலை விசிறியைப் பயன்படுத்தி, பனை ஓலையில் உணவு உண்டு, பனைக் காட்டில், பனை ஓலைக் குடிசையில் 96 நாட்கள் தங்கி வர குட்டரோகம் குணமடைவதைக் கண்டுள்ளனர்.

க்ஷயரோகம்
அதிவிடயம், திப்பிலி வகைக்கு 35 கிராம் எடுத்து இரண்டையும் இள வறுவல் செய்து, பொடித்து அரித்து வைத்துக்கொண்டு 1300 mL பதநீரைச் சுடவைத்து, மேற்படி பொடியில் மூன்று சிட்டிகை அளவு போட்டுக் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் 40 நாட்கள் சாப்பிட்டுவர, க்ஷயம், ஈளை, இருமல், மார்புவலி, மார்பு அடைப்பு நிச்சயமாக நீங்கும்.

இரத்தக்கடுப்பு
வெந்தயம் 50 கிராம் வறுத்துப் பொடித்துக் காலை, மாலை இருவேளை ஒரு அவுன்ஸ் சூடு செய்த பதநீரில் கலக்கி 6 வேளை அருந்தி வந்தால் இரத்தக்கடுப்பு, மூலச்சூடு தணியும்.

கணைச்சூடு
அதிமதுரத்தைப் பொடித்துப் பதநீரில் காய்ச்சிப் பாகு பதத்தில் எடுத்து வைத்து காலையிலும், மாலையிலும் ஒரு 5 g உட்கொண்டால் அதி உஷ்ணம், நீர்க்கடுப்பு, நீர் எரிவு, அதிக பித்தம் தீரும்.

பெண்களின் சூதகம்
மாதவிடாய் தடைப்பட்டு அதனால் சூதகவலி, வாய்வு, சூதகக்கட்டி முதலியவைகளில் அவதிப்படுகிறவர்கள் பனங்குறுத்தின் உள் பாகத்தை உட்கொண்டால் வியாதி குணமாகி மாதவிடாய் தடையின்றி வெளியேறும்.
உரிய வயதாகியும் பருவமடையாத பெண்கள், பனங்குறுத்தை விடாமல் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால், விரைவில் பருவமடைவார்கள் என்பது உறுதி.

பசியின்மை
கறியுப்பை 35 கிராம் எடுத்து 400 மி.லி. பதநீரில் கரைத்து, 35 கிராம் மிளகைப் பொடி செய்து அதனுடன் சேர்த்து 24 மணி நேரம் ஊறவைத்து, தினந்தினம் சூரிய ஒளியில் காய வைத்து வர பதநீரிலுள்ள நீர் ஆவியாகிவிடும். மிளகுப் பொடி மட்டும் தங்கி நிற்கும். அந்தப் பொடியை ஒரு சிட்டிகை அளவு காலை, மாலை உணவுடன் கலந்து அருந்திவர நாட்பட்ட பசியின்மை நீங்கி நல்ல பசியுண்டாகும்.

வயிற்றுப்புண்
மஞ்சளைப் பொடித்து அரை தேக்கரண்டி அளவு எடுத்து, அரை அவுன்ஸ் காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள மூன்று வேளையில் வயிற்றுப்புண், தொண்டைப்புண், வெப்பக் கழிச்சல், சீதபேதி முதலிய வியாதிகள் குணமாகும்.

ஆஸ்துமா (சுவாசகாசம்)
பொடுதலையும், மிளகும் சமமாய் எடுத்து பதநீர் விட்டு அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரையாய் உருட்டிக் காயவைத்து எடுத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை சாப்பிடப் பத்து நாட்களில் தீராத சுவாசகாசம் குணமடையும்.
இது ஒரு கைகண்ட மருந்து. இந்நோய் திரும்ப வாராது. ஆஸ்துமா நோயாளிகள் உடனடியாக இம்முறையைக் கையாண்டு குணம் காணலாம்.

சகல வாய்வுக்கு
சுக்கு 35 கிராம், மிளகு 15 கிராம், திப்பிலி 35 கிராம் மூன்றையும் பொடித்துச் சூடாக்கிப் பதநீர் விட்டு அரைத்துக் கடலை அளவு மாத்திரை உருட்டிக் காய வைத்து எடுத்துக்கொண்டு, நாள் ஒன்றுக்கு மூன்று வேளை, இரண்டு நாட்கள் சாப்பிட எல்லா வாய்வு சம்பந்தமான நோய்களும் குணமாவது உறுதி.

~சூர்யநிலா

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula