இந்த வாரத்தின் துவக்கத்தில் ஹைதராபாத்திலிருந்து செயல்படும் பாரத் பயோடெக் என்னும் இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR – Indian Council of Medical Research) மற்றும் பூனாவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடனும் (NIV – National Institute of Virology) இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாகவும் அதன் பெயர் கோவாக்சின் என்றும் அறிவித்திருந்தது.
தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது, சமகாலத்திய உலகமயமாக்கலின் அடிப்படை முரண்பாட்டை மிகத் தெளிவாக முன்னிலைப்படுத்தியுள்ளது. மக்களின் நலனுக்கும் நிதி மூலதனத்தின் நலனுக்கும் உள்ள முரண்பாடு என்ன என்பது தற்போது மிகத் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறது. உண்மையில், இந்த முரண்பாடு என்பது ஒட்டுமொத்த உலகமயமாக்கலின் அடிப்படை குணாம்சத்தினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும், இதற்கு முடிவு கட்ட ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது. இது உலகில் இப்படி உலகமயமாக்கலுக்குக் கட்டுண்டுள்ள ஒவ்வொரு நாட்டிலும் அம்பலமாகியுள்ளது.