சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நேற்றுமுதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கும் படம் ‘ வெந்து தனிந்தது காடு’. ஆனால், ஈழத் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞரான மதிசுதா, இதே தலைப்பில் 3 வருடங்களுக்கு முன்னர் தனது மக்களைப் பற்றிய படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தமிழ் நாட்டிலும் அந்தப் படத்தை விற்பனை செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் அதே தலைப்பில் கௌதம் மேனன் படம் எடுத்து வருவது தனது படைப்பை முடக்கும் செயலாகும் என தனது முகநூல் பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இதோ அவருடைய பதிவு:
நானும் கெளதம் மேனனும் பயன்படுத்திக் கொண்ட ஒரே திரைப்படத் தலைப்பும் முடங்கிப் போன என் திரைப்படமும்!
1) எங்களுக்கென்றொரு சினிமா தேவையில்லை
2) மக்கள் இருக்கும் நிலையில் சினிமாவெல்லாம் ஒரு கேடா
போன்ற எதிர் நிலைப்பாடுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்காமல் கடந்து செல்வது ஆரோக்கியமாகும்.
ஒரு ஆலமரத்தின் கீழ் முளைக்கத் துடிக்கும் அறுகம் புல்லாக சின்ன சின்ன விடயத்துக்கும் போராடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
A) தென்னிந்திய சினிமாவின் ஊடக ஆக்கிரமிப்புக்களால் எம் மக்களிடம் எம் படைப்புக்களை கொண்டு சேர்க்க ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
B ) தயாரிப்பாளர் என்று எவருமே இல்லாத இடத்தில் ஒவ்வொருவரிடமும் சிறுக சிறுக 1000 ஆயிரம் ஆக சேர்த்து, இருக்கும் காசுக்கு ஏற்ப இருக்கும் வளத்தை வைத்து தான் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டியுள்ளது.
C) இந்தக் கனவோடு பயணிக்கும் ஒவ்வொருத்தனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பலதை துறந்து தான் தியாக மனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கின்றான்.
இது சில உதாரணங்களே, இந் நிலையில் ஒரு உண்மையான கலைஞனாக இன்னொரு படைப்பாளியின் படைப்புக்கும் உழைப்புக்கும் உள்ள உரிமைக்கு சின்ன அங்கீகரத்தைக் கொடுத்திருக்கலாம். தன் மொழியில் உள்ள ஒரு தலைப்பை முதன் முதலாக ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தும் ஒரு உரிமை கூட தன் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவனுக்கு இல்லையா ?
இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது திரைப்படத்தலைப்பான "வெந்து தணிந்தது காடு" என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தேன். பலமாதங்களுக்கு முன் திட்டமிட்ட இத்தலைப்பை பட வேலைகளை முடித்த பின் அறிவிப்போம் என்ற நிலைப்பாட்டில் படத்தை கையில் வைத்துக் கொண்டே அறிவித்தோம்.
"மூடப்பட்ட பங்கர்களுக்குள் தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன" என்ற மூலக் கருவைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்காத நிலையில் 111 பேரிடம் இருந்து சேகரித்த பணத்தைக் கொண்டு ஐ போன் மூலம் உருவாக்கியிருந்தோம்.
இன்றைய நாள் , கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படம் அதே பெயரில் வெளியாகியிருக்கின்றது.
1) பாரதியாரின் கவிதை தானே யாரும் அதை வைக்கலாம் என கருத்துப்பட சிலரது எதிர்வாதங்களைக் கண்டேன்
அக்கருத்தை நான் மறுக்கவில்லை ஆனால் அதே தலைப்பை எந்த வகைப் படைப்புக்கு முதல் முதல் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற விடயமும் கணக்கில் எடுக்கப்படும். நான் தலைப்பிட முன் தேடிய வகை இப் பெயரில் கவிதை நூல் ஒன்று மட்டுமே இருந்தது. திரைப்படம் எதுவும் இருக்கவில்லை.
- ஒரு திரைப்பட தயாரிப்புக் குழுவின் முக்கிய வேலைவேலைகளில் ஒன்றாக தலைப்புகளை ஆய்வு செய்தலும் அடங்கும். அவ்வகையில் பல இந்திய ஊடகங்களிலும் வெளியாகியிருந்த எமது திரைப்படத்தின் தலைப்பை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சந்தர்ப்பமே இல்லை. நிச்சயம் கூகுலிலாவது ஒரு தடவை தேடிப் பார்த்திருப்பார்கள்.
- அவர்களது பணபலம், விளம்பர பலம் , star value என்பவற்றின் மூலம் இச் சிறிய படைப்பு மறைக்கப்பட்டு விடும் என கருதியுமிருக்கலாம்.
2) இரண்டு வெவ்வேறுபட்ட நாடுகள் தானே இதைக் கணக்கெடுக்க தேவையில்லை என்ற கருத்துக்கான பதில்
இலங்கையில் பணம் கொடுத்து வாங்கக் கூடிய OTT கள் இல்லாத நிலையில் இந்தியாவை மையப்படுத்திய OTT களுக்கு மட்டுமே விற்க முடியும்.
எமது படம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் அப்பட பதிவிருப்பதால் அங்கு இப்படைப்பை விற்பதில் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது
- ஏற்கனவே இத் திரைப்படத்துக்கு வியாபார விடயம் பேசிக் கொண்டிருந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் (பெயர் குறிப்பிட முடியவில்லை) இத் தலைப்பால் இப்படைப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து பதில் தர 3 நாள் அவகாசம் கேட்டுள்ளன. பெரும்பாலும் இத் தலைப்பில் ஒரு படைப்பு முதலே வருவதை விரும்பமாட்டார்கள்.
ஏதோ , என் மூன்றரை வருட ஒட்டு மொத்த கனவும், உழைப்பும், காத்திருப்பும் ஒரு சம்பவத்தால் சுக்கு நூறக்கப்பட்டு விட்டதை நான் முழுமையாக உணர்கின்றேன்.
வழமை போல இந்தப் படைப்பை ஓடுவதற்கு தற்போது தியெட்டர்களும் இல்லை. படத்துக்கு தேடி வந்த யூரியூப்காரர்களும் தமது channel க்கு தாருங்கள் வரும் பணத்தில் 50% தருகிறோம் என்ற வியாபார கணக்கோடு வரிசையிடுகின்றார்கள்.
என்ன செய்வது சிறு புன்னகையுடன் இந்த விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் இருந்து ஈழ சினிமாவை பறித்துக் கொண்டு பயணப்பட்டுக் கொண்டே இருப்பான்.
- MaThi Sutha
Comments powered by CComment