counter create hit செந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள் !

செந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள் !

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எல்லாவற்றையும் தோற்றுவிக்கவும், மறைக்கவும், இயற்கையெனும் பேராற்றலால் மட்டுமே முடிகிறது. காலத்துக்குக் காலம், அதன் பிரசவிப்பில் மகிழ்வு கொள்கிறது பூவுலகு. அவ்வாறான இயற்கைப் பேராற்றலின் பிரசவிப்பாக வந்திருக்கக் கூடியவர்களாகத் தமிழ்சமூகத்திற்கு அன்மையில் வெளிப்பட்டிருப்பவர்கள், நாட்டார் பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதிகள்.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் மேடை, இவர்களை உலகெங்கும் தெரியப்படுத்தியிருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள் நம் வீட்டுக் கூடங்களை நிறைந்திருக்கும் சமகாலத்தில், அதனூடு எங்கள் வரவேற்பறை வரை வந்திருக்கும் கலைஞர்கள். ஆனால் அவர்கள் தொடக்கம் அதுவல்ல. உழைக்கும் மக்களின் உணர்வுக் கலையாற்றுகையால் , கிராமங்களை மகிழ்வித்து, தாமும் மலர்ந்த சுயம்புகள் அவர்கள்.

கொல்லங்குடி கருப்பாயி, டி.கே.எஸ். நடராஜன், அந்தனி தாசன், சின்னப் பொண்ணு, பரவை முனியம்மா, தேனி குஞ்சரம்மாள், எனப் பலரை நாட்டுப்புறப் பாடற்கலைஞர்களாக சினிமா எமக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இவ்வாறான அறிமுகம் பெறாத ஆத்தூர் [மதுரை செம்பட்டி] கோமதி , விளாத்தி குளம் ராஜ லட்சுமி , மதுரை சந்திரன், தேக்கம்பட்டி சுந்தர ராஜன், பழனியம்மா, கோட்டை சாமி ஆறுமுகம், வேல் முருகன், , தஞ்சை செல்வி, என மேலும் பல கலைஞர்கள் நாட்டார் பாடல்களை நாளும் பாடி , மக்களை மகிழ்வித்தே வந்திருக்கிறார்கள். நாட்டுப்புறப் பாடற்கலைஞர்கள் எனும் பெரும் பட்டியலில், மேலும் சிலர் , வானொலி மற்றும் தொலைக்காட்சி வழி, பிரபலமும், முக்கியத்துவமும், பெறுகின்றார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், நாட்டுப்புறப் பாடல்களில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் தம்பதிகள்.

தொலைக்காட்சிகளின் வருகை தொடங்கிய காலங்களில், கிராமிய உடையலங்காரத்தோடு, கிராமிய வாத்தியங்கள் சகிதம், இவர்கள் நிகழ்த்திய ஆற்றுகைகள், கிராமங்கள் தாண்டி, நகர்புறங்களிலும், எல்லைகள் கடந்து அயல்நாடுகளிலும், அவர்களையும், நாட்டுப்புறப் பாடல்களையும் பிரபலமாக்கியது.


விஜயலட்சுமி நவநீத கிருஷணனின் " ஒன்னாம் படியெடுத்து ஒசந்த பூவாம்.." பாடல் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றதுடன், அந்த தம்பதிக் கலைஞர்களையும் வெகு பிரபலமாக்கியது.

அறிவும், ஆய்வும் ஆற்றகையும், மிக்க அந்தத் தம்பதியர் போல அதிக பிரபரபலம் பெற்ற மற்றுமொரு தம்பதிக் கலைஞர்கள், புஸ்பவனம் குப்புசாமி, அனிதா தம்பதியினர்.

நாட்டுபுறப் பாடற்கலைஞர்களாக அறிமுகம் பெற்றிருக்கக் கூடிய கலைஞர்களான, அனிதா குப்புச்சாமி தம்பதிகள், பல்வகை இசைகளையும் பயின்றவர்கள். அவர்களது பயிற்சியும், பட்டறிவின் தேர்ச்சியும் மிக்க அவர்களின் பாடல்கள், அவர்களது தோற்றம் போலவே நவீனத்துவம் நிறைந்த கிராமியப் பாடல்களாக மக்களிடம் சேர்ந்தன.

நாட்டுப்புறப் பாடல் தம்பதியினராக, தொலைக்காட்சி வழி நமக்கு இப்போ அறிமுகமாகியிருக்கும் கலைஞர்கள், புதுக்கோட்டை செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதிகள். நாட்டுப்புறப் பாடற்கலைஞர்களாகக் கிராமங்கள் தோறும் பயனித்து, வாழ்க்கையிலும் தம்பதியினராக இனைந்து கொண்ட இத் தம்பதிக் கலைஞர்கள், விஜய் தொலைக்காட்சியின் " சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி" யிலும், நாட்புறப்பாடல்களையே பாடி வருகின்றார்கள். ஏலவே பலர் பாடிய நாட்டார் பாடல்களையும், தாம் எழுதிய பாடல்களையும், கிராமிய மணத்தோடு பாடி வரும் இவர்கள், இதுவரை கிராமிய முகத்தொடும் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

கிராமியக் கலைகளின் யாசிப்பும், சமூகத்தின் மீதான நேசிப்பும், அக்கறையும், இவர்களது பாடல்களிலும், பேச்சுக்களிலும் தெரிகிறது. அன்மையில் செந்தில் கணேஸ் பாடிய " ஆத்தா உன் சேலை.." கிராமிய வாழ்வை கண்முன் காட்சிப்படுத்திய பாடல்.

 


நலிந்து வரும் நெசவுத் தொழிலாளர்களுக்காக ராஜலட்சுமி பாடிய " என்ன சொல்லிப் பாடி வருவேன் எங்க கதையை...." நெசவுத் தொழிலாளிகளின் வாழ்க்கைப்பாடுகளின் துயரத்தை , ஏக்கத்தை, பாட்டாகக் கட்டிய இசை.

 

செந்தில், ராஜலட்சுமி தம்பதிகளின் பாடல் சிறப்பு யாதெனில்,   நிறைந்திருக்கும் கிராமியம். சொல், குரல், மெட்டு, என எல்லாவற்றிலும், கிராமியம் தோய்ந்திருக்கிறது. காலவோட்டத்தில் கரைந்து காணமற்போகும் கிராமியத்தின் தொன்மம், இன்னமும் இவர்கள் பாடல்களில் தொக்கி நிற்பதனாற்தான், நம்முள் ஊடுருவி, உவகைப்படுத்துகிறது.

 

தொலைக்காட்சிகளில் இப்பாடல்களைப் பாடு முன்னரே இவர்கள் சமூக அக்கறை கொண்ட கிராமியக் கலைஞர்கள் என்பதும், கிராமிய வாழ்வினூடு உருவான, வெள்ளந்தி மனமும், வேடிக்கைப் பேச்சும் கொண்ட சுயம்புவான கலைஞர்கள் என்பது தெரிந்ததுதான். நெடுவாசல் போராட்டத்தில் நிறைமாதக் கர்ப்பிணியாகக் கலந்து கொண்டு, போராட்டத்தின் நியாயத்தைப் பாடலாக வெளிப்படுத்திய போதும், அச் சம்பவம் குறித்து செந்தில் பிறிதொரு செவ்வியில் பேசும்போது, கருவிலிருக்கும் எங்கள் குழந்தைக்கும் சமூகத்தின் மீதான பிணைப்பினை ஏற்படுத்தும் கண்ணமாகவே போராட்டத்தில் கலந்து கொண்டோம் எனக் குறிப்பிடுகையிலும், மண்ணின் மீதான, மக்களின் மீதான இத் தம்பதிகளின் நேசிப்புப் புரிகிறது.

கிடைத்திருக்கும் பிரபலமும், அறிமுகமும், இவர்களது பாடல்களின், கிராமிய மணத்தினையும், முகத்தினையும், மாற்றிவிடாதிருக்க வேண்டும் எனக் கவலை கொள்ளத்  தோன்றுகிறது. ஏனெனில், தற்போதுள்ள தமிழ் ஊடகச் சினிமா வெளி மீதான கவனிப்பினூடே இந்த அச்சம் கொள்ளவேண்டிய அவசியமிருக்கிறது. செந்தில் - ராஜலட்சுமி, நீங்கள் எப்போதும் மண்ணின் கலைஞர்களாக, மக்கள் பாடகர்களாவே இணைந்திருங்கள். எந்த நிலையிலும் உங்கள் கிராமிய முகங்களைத் தொலைத்து விடாதீர்கள், ஏனெனில் அது உண்மையின் முகம்.

பிரபலமான பின்னாலான ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் பாடும் இந்தப் பாட்டும், பணியும், நோக்கும், தரும் நம்பிக்கையில். தமிழ் சமூகத்திற்குக் கிடைத்திருக்கும், இந்த கிராமிய முகங்களைக் கொண்டாடி மகிழலாம் எனும் எண்ணந் தருகிறது.

 

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்.

இந்த பதிவுகளையும் தவற விடாதீர்கள்

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.