தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தார். அவர்களில் தமிழகத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட எழுத்தாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் நியமனத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.
இறையன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவர் கலெக்டராக இருந்தபோது மணல் கொள்ளையை அவர் தடுத்தார். எழுத்தாளர், பேச்சாளர் என பல சிறப்புகளைக் கொண்டவர் இறையன்பு. தற்போது தான் எழுதிய நூல்களை அரசு விழாக்களில் பரிசளிக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் இன்று அரசு செய்தியறிக்கையாக வெளியிட்டுள்ளதில்: தற்போது நான் வகித்துவரும் பொறுப்பின் காரணமாக பள்ளிக்கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமை செயலராக பணியாற்றும் வரை எந்த திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என உத்தரவிட்டேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.
அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை 2006ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.
இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தாலும், தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என வெ.இறையன்பு அதில் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த அறிக்கை நெட்டிசன்களால் பாராட்டப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
Comments powered by CComment