சென்னை:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் புதன்கிழமை ஒரு சிறுமியை நீரில் மூழ்கவிடாமல் மீட்பதற்கான முயற்சியில் அவளது நண்பிகள், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் நீரில் மூழ்கி இறந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கரும்புகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்திற்கு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நர்மதா என்ற 12 வயது சிறுமி குளத்தின் ஆழத்தில் மூழ்கியதால் அவரை காப்பாற்ற முயன்றவர்கள், ஒருவர் பின் ஒருவராகக் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
"இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் இன்று (14-7-2021) காலை 10-45 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, நர்மதா (வயது 12) என்ற சிறுமி திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றதால், அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காக சுமதி (வயது 35), ஜோதி (வயது 35), அஸ்விதா (வயது 14), ஜீவிதா (வயது 14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்குச் சென்றபோது, மேற்படி 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்." என குறிப்பிட்டுள்ளார்.
Comments powered by CComment