டிசம்பர் 4ஆம் திகதி இரவு 8 மணி முதல் டிசம்பர் 5ஆம் திகதி இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என யாரும் அந்த சமயம் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். உயர் நீதிமன்ற பதிவாளர் தேவநாதன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இதை தெரிவித்துள்ளார்.ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறை இதுவாகும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இந்தக்கட்டடம் கலைநுட்பமாக கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் கட்டடத்திற்கு நீதித்துறையோ, சட்டத்துறையோ சொந்தம் கொண்டாடக் கூடாது எனவும், பழமையான இந்தக் கட்டடத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த சம்பிரதாய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் பூட்டப்படுகின்றன. அவற்றின் சாவிகள் உயர் நீதிமன்றத்தின் ஓவர்சீஸியர் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த நாளில் வெளியாட்கள், போலீசார் என யாரும் உள்ளே செல்ல முடியாது. அதே போல் ஏற்கெனவே பாதுகாப்பு பணியில் இருக்கும் சிஐஎஸ்எப் வீரர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
Comments powered by CComment