தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது
என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில், தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
நான்கு மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அந்த அவகாசம் ஜனவரி 27 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைப்பதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தை நாடுவது தான் மனுதாரருக்கு சிறந்த தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிற போது, அதை மீறி உத்தரவைப் பிறப்பிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்றும், தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் வகுத்திருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், கொரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தலாம் என்றும் தீர்ப்பு வழங்கி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
Comments powered by CComment