சென்னை உயர் நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையை திங்கள்கிழமை முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி முனீஸ்வரன் பண்டாரி நாத் தலைமையிலான அமர்வில் இன்று ஒரு வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை கேட்க முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டதாக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும்போது இணையதள தொடர்பு உள்ளிட்ட பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதாக சக நீதிபதிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
அதனால் வரும் திங்கள்கிழமை முதல் காணொலி காட்சி விசாரணை முறையை நிறுத்த இருப்பதாகவும், உண்மையில் காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் அதனை பயன்படுத்தி வாதிட அனுமதிக்கப்படுவர் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். இதுசம்பந்தமாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விளக்கமளிக்கவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதியின் இந்த கருத்தின் காரணமாக இரு ஆண்டுகளாக காணொலி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை முறை நிறுத்தப்பட்டு, நேரடி விசாரணை மட்டும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment