ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் இரட்டை சதமும் (200 ரன்), அலெக்ஸ் கேரி சதமும் (111 ரன்) அடித்தனர்.
ஸ்டீவன் சுமித் 85 ரன்னும், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் தலா 51 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணியில், கேப்டன் டீன் எல்கர் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய டி புருன் 3 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் வழங்கிய கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற வார்னர் கோட்டை விட்டார். தென்ஆப்பிரிக்க அணி7 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டி புருன் 6 ரன்னுடனும், சாரல் எர்வீ 7 ரன்னுடனும் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இன்றைய ஆட்டத்தில், தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இறுதியில் அந்த அணி 68.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. தனது 100வது போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய டேவிட் வார்னர் ஆட்டநாயகர் விருதை தட்டிச்சென்றார்.
இரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.
Comments powered by CComment