தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் கட்டிப் போடும் திறன் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த ஆண்டு மனதில் புதிய சிறப்பான விஷயங்கள் தோன்றும், உங்கள் விவேகம் கூடும். சில நேரங்களில் நீங்கள் தீர்க்கதரிசி என்று பாராட்டப்படும் வகையில் உங்கள் மதிநுட்பம் வெளிப்படும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல பேச்சில் வசீகரமும் முகத்தில் பொலிவுடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள்களாகத் தள்ளி வைத்திருந்த வெளிநாட்டுப் பயணமும் கைகூடும். உங்கள் காரியங்களைத் தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவைகள் நீங்கப் பெறுவார்கள். பெற்றோர் வழியிலும் மருத்துவச் செலவுகள் என்று பெரிதாக எதுவும் ஏற்படாது. குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதர சகோதரிகளுக்கு நன்மைகளும் நலன்களும் உண்டாகும். அவர்களாலும் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும்.பூர்வீகச் சொத்துகளிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். வருமானம் எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே கிடைக்கும். இதனால் சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். அசையும் அசையாச் சொத்துக்களையும் வாங்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
இந்த ஆண்டு ஏப்ரலுக்கு பின் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் பெறுவீர்கள். உங்கள் சிறிய முயற்சிகள் உங்களுக்கு பலமடங்கு வெற்றியைத் தேடித்தரும். ஆக்கபூர்வமாகச் சிந்தித்து சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். உங்கள் நன்னடத்தைகளினால் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தர்மகாரியங்களிலும் ஆலய திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் செயல்திறன் கண்டு பாராட்டி மேலும் சில முக்கிய பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். சிலர் அலுவலகத்தில் முக்கிய பயணங்களைச் செய்து புதிய பயிற்சிகளைக் கற்று பயனடைவர்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களோடு நட்புடன் பழகுவார்கள். சிறிய முதலீடுகளில் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும் மற்ற நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகள் செய்து பாராட்டைப் பெறுவார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்கள் சிந்தனையில் தெளிவுடன் இருப்பதால் செயல்களில் வெளிப்படையாக ஈடுபடுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டையும் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் நல்ல முன்னேற்றங்களைக் காண்பர். புதிய ஒப்பந்தங்களை நல்ல முறையில் முடித்துக் கொடுப்பீர்கள். சக கலைஞர்களின் உதவியையும் பாராட்டையும் பெற வாய்ப்புகள் உண்டாகும்.
பெண்மணிகள் கடமை உணர்வுடன் விளங்கி குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்திச் செல்வர். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடப்பதில் இருந்த தடைகள் விலகும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மன அமைதியைக் குறைக்கும்.
மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு சாதனைகள் படைப்பீர்கள். பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் உற்சாகம் கிடைக்கும்.
மூலம்:
இந்த ஆண்டு உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
பூராடம்:
இந்த ஆண்டு வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும்.
உத்திராடம்:
இந்த ஆண்டு புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும். நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.
பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். வியாழக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் நன்மை தரும். செவ்வாய் - குரு ஆகிய ஹோரைகள் நன்மை தரும்.
4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான புத்தாண்டுப் பலன்கள், தொடர்ச்சியாக அடுத்து பிரசுரமாகும். உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Comments powered by CComment