counter create hit தமிழிலிருந்து ஜேர்மன் மொழிக்கு....!

தமிழிலிருந்து ஜேர்மன் மொழிக்கு....!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழிலிருந்து ஜேர்மன் மொழிக்கு ஒரு அழகான இலக்கியப் பயணம் செய்திருக்கிறார் எமது நண்பர். புலம் பெயர் தேசத் தமிழர்களில் பலரும், தாம் வாழும் நாட்டின் வரலாறு, அரசியல், கலாச்சாரம், சூழலியல், என எதையும் அறிந்து கொள்வதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை என்பது ஒரு பொதுமையான குற்றச்சாட்டு.

அதில் உண்மை இல்லாமலும் இல்லை. பிறமொழிப் பரிச்சயக் குறைவு அதற்கான முதற்காரணம் என்றால், புறச் சூழலில் தமிழராகவே தம்மை நிலை நிறுத்திவிடும் பிரயத்தனமும், கலாச்சாரப் பிறழ்வுநிலை அச்சமும் மற்றுமொரு காரணமெனலாம். இந்த இரு நிலைகள் குறித்தும் கவலைப்படாதவர்கள், புலம் பெயர் சமூகச் சூழலில் தம்மை இயல்பாக இணைத்துக் கொள்கின்றார்கள். அதேவேளை தங்கள் தனித்துவத்தையும் அவர்களே காப்பாற்றியும் கொள்கிறார்கள். அவ்வாறானவர்களில் ஒருவராகவே நண்பர் ஏ.ஜீ.யோகராஜாவை நான் கண்டுகொள்கின்றேன்.

ஆழ்வார் காசிநாதர் யோகராஜா என்னும் பெயர் சுவிஸ் பிரஜைகளுக்குப் பரிச்சயமாயினும் கூட, புலம் பெயர் தமிழ்மக்கள் மத்தியில் " யோகா மாஸ்டர்" என்பதும், அவரது சொந்த ஊரான வடமாராச்சி அல்வாய் மக்களிடத்தில் ' சைவம்' என்பதுமே அறிந்த பெயர். மிக நீண்டகால அவதானிப்பின் பின் எமக்கு நெருக்கமான நண்பர். பொதுவுடமை சித்தாந்தத்தை புத்தகப்பூச்சியாகக் கற்றுக் கொள்ளாதவர். அதனால் இன்றும் ஆழமான அரசியலையும், ஆன்மீகத்தையும் சமமாக உரையாட அவரால் முடிகிறது.80 களில் புலம்பெயர்ந்த அவர் இந்த நாட்டிற்கு வந்த போது, ஆரம்பத்தில் வந்த எம்மவர்கள் பட்ட அத்தனை அவஸ்தைகளும், துன்பங்களும், அவருக்கும் புது அனுபவங்களாகக் கிடைத்தன. அவற்றினூடு அவர் தன்னை மெல்ல மெல்ல மீளுருவாக்கம் செய்து கொண்டார். தமிழாசிரியரான அவர், தன் மொழி ஆர்வத்தையும், சமூக அக்கறையையும், எழுத்துருவாக்கிய வண்ணமிருந்தார்.

எழுத்தையும், வாசிப்பையும், சுவாசிப்பாகக் கொண்டிருந்த அவரது இயங்குதலில், ஏராளமான கட்டுரைகளும், புத்தகங்களும் பிரசவமாகின. அரங்காற்றுகையில் அவர் கொண்டிருந்த பற்றும், ஆளுமையும், அவர் எழுதிய நூல்களில் முக்கியமானதாக "புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்" எனும் அவரது நாடகப் பிரதிகளின் தொகுப்பினைத் தந்தது. "எழுவோம், நிமிர்வோம், திரள்வோம்" எனும் சாதியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல் அவரது அரசியற் தெளிவுக்கான அத்தாட்சி எனலாம்.

சினிமா மீதான விருப்பத்தில் அவர் எழுதிய நாடகப் பிரதியொன்றை, அவரது தம்பி ஞானதாசுடன் இணைந்து திரைப்பிரதியாக மாற்றி, பன்னிரெண்டு ஆண்டுகளின் முன்னதாக சுவிற்சர்லாந்தில் உருவான முதலாவது தமிழ்ச்சினிமாகவும், ஜேர்மன், தமிழ், என இருமொழிப்படமாகவும் பூப்பெய்தும் காலம் (Die Blute Der Jugenp) ! உருவாக்கினார். இவையெல்லாவற்றையம் புலம்பெயர் தேசத்தில் நம் அனைவருக்கும் இருக்கக் கூடிய அத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியிலேயே நிகழ்த்திக் காட்டினார். அதற்கான அவருடைய அசாத்தியமான பேருழைப்பும், அர்ப்பணிப்பும், இன்று அவரை சுவிற்சர்லாந்தின் முக்கியமான இலக்கியத் தளத்திற்கு அழைத்து வந்திருக்கிறது.

அவருடைய மற்றுமொரு நண்பர் ராஜனுடன் இனைந்து, எழுதிய கதையொன்றினை ஜேர்மன் மொழியில் வெளியிடவும் வாசிக்கவுமான வாய்ப்பினை அவருக்கு அளித்திருக்கிறது " சொலத்தூன் இலக்கிய விழா" ("Solothurn Literature Festival").

சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்று Solothurn சொலோத்தூன் . இந்த நகரத்தில் நடைபெறும் இரு முக்கியமான பெருவிழாக்கள், (The Solothurn Film Festival) சொலோத்தூன் திரைப்பட விழா, மற்றையது (Solothurn Literature Festival) "சொலோத்தூன் இலக்கிய விழா". இந்த விழாவில் கலந்து கொண்டு, தமது ஆக்கங்களை பார்வையாளருக்கு அளிக்கை செய்வது இலக்கியப் படைப்பாளிகளுக்கான உயர் கௌரவம்.

இந்த ஆண்டு 43 வது (Solothurn Literature Festival ) சொலோத்தூன் இலக்கிய விழா, 2021, மே 14 - 16 வரை இணையவெளி நிகழ்வாக நடாத்தப்படுகிறது. இது தொடர்பாக வெளிவந்திருக்கும் "Wobei" சஞ்சிகை மலரின் அட்டைபடத்திலும், உள்ளகக் கட்டுரையிலும், புலம்பெயர் தமிழர்களின் தனித்துவ அடையாளமாக, மானுடம் நேசிக்கும் மனிதனாக இடம்பெற்றிருக்கின்றார்  "யோகா மாஸ்டர்" எனும் ஏ.ஜீ. யோகராஜா.

ஜேர்மன் மொழியில் வாசிக்கப்பெற்ற சிறுகதை: ராக்சி ட்றைவரும் முள் வேலியும் !

ஜேர்மன் மற்றும் தமிழமொழியில் உருவான படம்: பூப்பெய்தும் காலம் (Die Blute Der Jugenp) !


-மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.