counter create hit நெடுமரங்களாய் வாழ்தல் - ஆழியாள் : ஒரு வாசிப்பு அனுபவம்

நெடுமரங்களாய் வாழ்தல் - ஆழியாள் : ஒரு வாசிப்பு அனுபவம்

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீண்ட நெடுமரம் ஒன்றில் இயற்கையாய் மொட்டவிழ்க்கும் குருத்திலைக்கற்றைகள் அலங்கரிக்கும் முன்னட்டை, அழகும் அர்த்தமும் பொதிந்த புகைப்படம்.

நெடுமரங்களாய் வாழ்தல் என்ற பெயரிடப்பட்ட ஆழியாளின் இருபத்தைந்து கவிதைகளடங்கிய தொகுப்பு அணங்குபெண்ணியப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இவரது முதலாவது கவிதைத்தொகுதி உரத்துப் பேசு 2000 ஆண்டு வெளிவந்திருந்தது.

அங்கலாய்ப்பில் ஆரம்பித்து அங்கலாய்ப்பிலேயே முடிவுபெறும் இத்தொகுப்பு காத்திரமானதும் கருத்தாழம்மிக்க கவிதைகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
உப்பு எனத் தலைப்பிட்ட முதற்கவிதை எல்லோருக்கும் நன்கு பரீட்சயமான கடலையும் அதனோடு கூடவே உறவாடும் அலைகளையும் கூறி நின்றாலும் இக்கவிதை இவ்வாறு முடிவுடைகிறது
எந்த தாய்
தன்குழந்தைகளைப்
போருக்காய் பெற்றெடுத்திருக்கிறாள்?
இந்த வரிகள் ஈழப்போராட்டத்திற்காய் தம் இன்னுயிர்களை காணிக்கையாக்கிய எமது உடன் பிறப்புக்களின் அம்மாக்களை மட்டும் சுட்டவில்லை, உலகின் மூலைகளில் எல்லாம் நாளுக்கு நாள் தம் குழந்தைகளைப் போர் எனும் பெரும்பூதத்திற்கு பலிகொடுக்கும் அம்மாக்கள் எல்லோரையுமே சுட்டி நிற்கிறது என்றே கொள்ள வேண்டும்.
எந்தக்கடற்கரை அழகற்றிருந்தது
எந்தக்கடல் அலைகளின்றித் தவழ்கிறது என மிகச் சாதாரணமான, விதிவிலக்கற்ற நிகழ்வுகளைச் கூறிச்செல்கிறது இதேகவிதை.
பின்னைய வாசிப்பு எனும் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது
எல்லா விதைகளின் பின்னாலும்
ஒரு மரம் இருக்கிறது.
...
ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்த்திய
பெருந்துரோகங்களின் பின்
சிகரெட்டைப் பிடித்தபடி ஆசுவாசமாய்த்
தன் தலையைக் கோதி நிற்கிறான்...
இக்கவிதையில் இவர் இருவரைப் பதிவு செய்கிறார். ஒருவர் நோபேட் சூசைப்பிள்ளை மற்றொருவர் ரஜனி திரணகம, மாற்றுக்கருத்தொன்றைக் கொண்டிருந்ததற்காகவே தம்உயிரை அகாலமாய் இழந்தவர்கள் இவர்கள். இதுவும் இதுபோன்ற கொலைகளின் சூத்திரதாரர்கள் ஐரோப்பிய தெருக்களில் ஆடம்பரமாய் நடைபோடலாம் அல்லது முள்ளிவாய்க்காலில் அவலமாய் உயிரைவிட்டிருக்கலாம். இக்கவிதை இலங்கையில் நிலவிய கொலைக்கலாச்சாரம் பற்றிப் பேசுகிறது. இக்கொலைக்கலாச்சாரத்தின் விளைவாகவும், ஏனைய சமூக அழுத்தங்களின் காரணமாகவும் ஒரு இளம் பெண்ணை, கவிஞரை ஈழத்து இலக்கியப்பரப்பு இழந்து நிற்கிறது. ஆம், சிவரமணி அகால மரணத்தை தழுவிய அவலத்தை கூறுகிறது நம்பிக்கை எனும் நீர்வர்ணக்கோட்டோவியம் என்ற இத்தொகுப்பின் இறுதிக் கவிதை.
கண்ணிமை மயிர்போல்
தடித்த இரட்டைப்பட்டு களைவிரிப்பை மீறி,
அதன் மேல் அடுக்குகளாய் கொட்டப்பட்ட
செம்மரச்சீவற்படுக்கையை மீறி,
மைனஸ் 8.7 எதிர்ப்பாகைகளையும் மீறி,
மிக மெதுவாக அசைகிறது
ஒருவித்திலைப் பிஞ்சுப் புல்
நீர்வர்ணக்கோட்டோவியம் போல்.

பிடுங்க முடியவில்லை

மனம் கசிகிறது
சிவரமணீ!!!
நீ இருந்திருக்கலாம்.

நெடுமரங்களாய் வாழ்தல்
என்ற தலைப்பிட்ட கவிதையில் இப்படி இரண்டு வரிகள் வருகின்றன

நீளவரிசையாய் நெடுமரங்கள் பார்த்திருக்கின்றன
நெடுங்காலமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

நெடுமரங்களாய் வாழ்தல் என்பது ஒரு உருவகஅணி என்று கூறலாம். மரங்களுக்கான பணிகள் பல, அவற்றில் வாழ்தலும் ஒன்று. நெடுமரங்கள் என்பது நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்ட மரங்களைக் குறிக்கும். மனிதமூளை வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து வைப்பது போல மரங்களும் தம் வாழ்நாள் பற்றிய நிகழ்வுகளை தனது உடலில் சேகரித்து வைக்கின்றன. வெட்டப்பட்ட மரமொன்றின் அடிப்பாகத்தின் குறுக்குவெட்டுமுகத்தோற்றத்தை பார்த்தோமானால் பல வளர்ச்சிவளையங்கள் வட்டவடிவில் அமைந்திருப்பதை நாம் காணலாம். ஒவ்வொரு வட்டவளையமும் அதன் குறிப்பிட்ட வளர்ச்சிப் பருவங்களையும் இவை எவ்வளவு காலம் உயிர்வாழ்ந்துள்ளன என்பதையும் குறிப்பாக கூறி நிற்கும் அதேவேளை, இவ்வளையங்களில் இருந்து அக்காலத்தில் நிலவிய வறட்சி, உணவுப்பற்றாக்குறை, மற்றும் காட்டுத்தீ போன்ற தகவல்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இதைப்போலவே குழந்தைகளை, பதின்மவயதிரை வருங்கால சந்ததியின் அழிவுக்கு சாட்சியமாகவும், இலங்கை அல்லாத ஒரு தீவிலோ, கண்டத்திலோ அதன் பெருந்தெருக்களிலும் அகதியாய், நாடற்றவராய் அலைந்த வரலாற்றைச் சுமந்திருப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் இதுவும் கூட நெடுமரமாய் வாழ்தல் தான். இவ்வாறான அவலமும் அவமதிப்பும் எந்தவொரு இனத்திற்கும் ஏற்படக்கூடாதவைகள். இந்த நெடுமரங்கள் பூப்பதும், காய்ப்பதும், கிளைப்பரப்புவதும் நிகழந்தாலும் கூட அவை தமது சொந்த மண்ணிலிருந்து பிடுங்கி நடப்பட்ட அவலத்தையும் அதனுடான துயரத்தையும் சுமந்தே வாழ்கின்றன என்பதை பதிவு செய்வதாகவும் இந்த தலைப்பை பார்க்கலாம்.

இயற்கையும் அதன் அழகும் என வெவ்வேறு உணர்வுகளைக் கூறி நிற்கும் இத்தொகுப்பில் உள்ளாறு என்ற கவிதை இப்படிக் கூறுகிறது
வற்றாத சிற்றருவியும்
வட்டமிடும் வெண்கழுகும்
வழிநெடுகத் தொடர்ந்தாலும்,
மீனை, மணலை,
ஊரிகளைத் தாளைகளை

கனிம நினைவுகளின்
படிகச் சுரங்கங்களை

அணைத்தள்ளிப் போகும்
ஆற்றின் பயணமோ
நெடியது நெடியது
கடிநெடிலடியிலும் நெடியது.

சிலவேளை வைகாசி அல்லாத வேறொரு காலப்பகுதியில் இத்தொகுப்பை வாசித்திருந்தால் வேறு கவிதைகள் கவனிப்பைப் பெற்றிருக்கலாம். அவற்றை வாசகர்களின் வாசிப்புக்கு விட்டு வைப்பதே முறையாகும்.


-4தமிழ்மீடியாவிற்காக: தங்கம்

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.