தொழில்நுட்பம்

ஸ்டீரிமிங் மீடியாவான ஓடிடி சேவை, சினிமா மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தையும், அதன் எதிர் கால போக்கை எவ்விதம் தீர்மானிக்கும் என்பதையும், இவற்றின் பின்னே உள்ள தொழில்நுட்ப அடிப்படைகளையும் அலசும், 4தமிழ்மீடியாவின் சுவாரஸ்யமான புதிய தொழில் நுட்பத் தொடர்.

பல்வேறு தொழிற்துதுறைகளின் புதிய சிந்தனைகளை தமிழில் அறிமுகம் செய்து, அவற்றின் விளைவுகளை ஆராய்ந்து சுவாரசியமாகவும், எளிமையாகவும், பதிவு செய்வதில் வல்லவர் பிரபல தொழில்நுட்பக் கட்டுரையாளர் "சைபர் சிம்மன்". எமது வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான அவர், மிக நீண்ட நாட்களின் பின் 4தமிழ்மீடியாவில் எழுதும் புதிய தொடர் இன்றிலிருந்து ஆரம்பமாகிறது. இனி புதன் கிழமைகளில் தொடரின் புதிய அத்தியாயங்களை வாசிக்கலாம். - 4Tamilmedia Team

1. ஓடிடி ஒரு அறிமுகம்

சினிமா எனும் தொழில்நுட்ப அற்புதம் அறிமுகமான காலம் முதல் ரசிகர்கள் தான் திரைப்படங்களை தேடிச்சென்றனர். திரையரங்குகளில் அவர்கள் கால் வலிக்க காத்திருந்திருக்கின்றனர். டிக்கெட் இல்லை என அடித்து விரட்டப்பாட்டாலும் கூட, அவர்கள் அடுத்த முறை ஆவலுடன் முன்னதாகவே வந்து வரிசையில் நின்றிருக்கின்றனர். ஆனால், இப்போது திரைப்படமும் ரசிகர்களை தேடி வரத்துவங்கியிருக்கிறது. அது மட்டும் அல்ல, ரசிகர்கள் விரும்பிய திரைப்படத்தை, விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் பார்ப்பதும் சாத்தியமாகி இருக்கிறது. அகண்ட திரை கொண்ட டிவியில் பார்ப்பதா அல்லது லேப்டாப்பில் பார்ப்பதா இல்லை, உள்ளங்கையில் வைத்திருக்கும் போனில் பார்ப்பதா என்பதை ரசிகர்கள் தீர்மானித்துக்கொள்ள முடிகிறது.

ரசிக பெருமக்களுக்கு இந்த எல்லையில்லா சுதந்திரத்தை வழங்கியிருக்கும் தொழில்நுட்பத்தை தான் சுருக்கமாக ஓடிடி என்கின்றனர். ’ஒவர் தி டாப்’ என்பதன் சுருக்கமான ஓடிடி, ரசிகர்களின் திரை அனுபவத்தை தலைகீழாக மாற்றி அமைத்திருப்பதோடு, திரையுலகையே மாற்றக்கூடியதாகவும் இருக்கிறது.

திரையுலகம் மட்டும் அல்ல, தொலைக்காட்சி சேனல்களும் மாற்றத்தை சந்தித்து வருகின்றன. ஓடிடி மூலம் எந்த சேனல் நிகழ்ச்சிகளை வேண்டுமானாலும் எளிதாக பார்க்கலாம் என்பதால் பலரும், கேபிள் சேனல் இணைப்புகளை ரத்து செய்து வருகின்றனர். இந்த போக்கு ’கார்ட் கட்டிங்’ எனும் புதிய போக்காக குறிப்பிடப்படுகிறது.

வீடியோ அல்லது ஆடியோ உள்ளடக்கத்தை, வழக்கமான விநியோக அமைப்பின் உதவி இல்லாமல் இணையம் வழியே நேரடியாக பயனாளிகள் தங்களிடம் உள்ள சாதனத்தில் பார்த்து ரசிக்கும் நுட்பத்தை தான், ஓவர் தி டாப் என குறிப்பிடுகின்றனர். இந்த முறையில் திரையரங்கிற்கு செல்லாமலே படம் பார்க்கலாம்: கேபிள் இணைப்பு இல்லாமலே டிவி நிகழ்ச்சிகளை பார்க்காலம்.

தொழில்நுட்பம் ஏற்படுத்தி தந்துள்ள இந்த வாய்ப்பு, நெட்பிளிக்ஸ் போன்ற புதிய ஜாம்பவான்களை உருவாக்கியிருக்கிறது. நெட்பிளிக்சின் வெற்றியை தொடர்ந்து உள்ளூரிலும், உலக அளவிலும் எண்ணற்ற ஓடிடி நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றன. ஓடிடி நிறுவனங்களின் வளர்ச்சி பாரம்பரிய திரைப்பட நிறுவனங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திரைப்பட நிறுவனங்கள் திரையுலக வசூலை தான் பெருமளவு நம்பியிருக்கின்றன. டிவிடி உரிமை, கேபிள் உரிமை மூலம் வரும் வருமானத்தை விட, திரையரங்குகளின் டிக்கெட் விற்பனையில் தான் அவை கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றன.

ஆனால், ஓடிடி நிறுவனங்கள் இந்த விநியோக முறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. ரசிகர்கள் திரையரங்கிற்கு வராமலே படம் பார்க்க முடியும் என்றால், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள் இரண்டுக்குமே பாதிப்பு தானே.

இந்த போட்டியில் இதுவரை புதிய படங்கள் தான் திரைப்பட துறைக்கான தற்காப்பாக இருந்து வருகின்றன. புதிய படங்களை வெளியிடும் உரிமை திரைப்பட நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் கைகளில் இருப்பதால், ரசிகர்கள் திரையரங்குகளில் மட்டுமே புதிய படங்களை காண முடியும். படம் வெளியாகி குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகே அவற்றை ஓடிடி மேடையில் பார்க்க முடியும் எனும் கட்டுப்பாடு தற்போது இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருக்கும் நிலை, ஓடிடி மேடையில் புதிய படங்கள் சில நேரடியாக வெளியாக வழி வகுத்துள்ளது. தமிழி பொன் மகள் வந்தாள், பென்குவின் உள்ளிட்ட படங்களும், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களும் ஓடிடியில் வெளியாகி இருக்கின்றன. ஓடிடி வெளியீட்டிற்கு காத்திருக்கும் படங்களின் பட்டியலும் நீள்கிறது.

இப்போது வேறு வழியில்லாமல் பல புதிய படங்கள் ஓடிடியில் வெளியாவதை புரிந்து கொள்ள முடிந்தாலும், கொரோனா பாதிப்பு நீங்கி உலகம் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகும், புதிய படங்கள் இந்த முறையில் வெளியாவது தொடருமா?, அவ்வாறு தொடர்ந்தால் திரையரங்குகளின் நிலை என்னாகும்?, திரையுலகின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.

இதனிடையே திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் ஓடிடி பக்கம் சாய்ந்திருப்பதால், தயாரிப்பாளர்கள்- திரையரங்க உரிமையாளர்கள் இடையே மோதலும் வெடித்திருக்கிறது. ஓடிடி வெளியீட்டை நாடும் தயாரிப்பாளர்களின் படங்களை புறக்கணிக்க நேரும் என திரையரங்க உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் பல சிக்கலான கேள்விகளை திரையுலகம் எதிர் நோக்கியிருக்கிறது.

ஆனால், இந்த மாற்றங்கள் திரையுலகம் தொடர்பானவை மட்டும் அல்ல: ஓடிடியின் அடிப்படையாக விளங்கும் ஸ்டிரீமிங் தொழில்நுட்பம் இசையுலகிலும் பெரும் தாக்கத்தை செலுத்தி வருகிறது. இசைத்தட்டுகள் வாயிலாகவும், பின்னர் எம்பி-3 வடிவிலும் பாடல்களை கேட்டு வந்த நிலையில், தற்போது இசை கோப்புகளையும் ஸ்டிரீமிங் முறையில் கேட்க முடிகிறது.

இசைத்துறையை பொறுத்தவரை, ஸ்டிரீமிங் வசதி, காப்புரிமை சிக்கலுக்கான தீர்வாக அமைந்து, இசைத்தட்டு நிறுவனங்கள், ரசிகர்கள் என இருத்தர்ப்பினருக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இசை உலகையே உலுக்கியெடுத்த கோப்பு பகிர்வு நுட்பமான நேப்ஸ்டர் மற்றும் அதை தொடர்ந்து அறிமுகமான டோரண்ட் ஆகிய நுட்பங்கள் ஏற்படுத்திய இசைத்திருட்டு பிரச்சனைகளை பெருமளவு ஸ்டிரீமிங் தீர்த்து வைத்துள்ளது.

இணையமும், டிஜிட்டல் நுட்பமும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்டிரீமிங் வசதி நாம் அறிந்த வகையில் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை அணுகுவதில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதே உண்மை.

எனினும் ஸ்டிரீமிங் நுட்பத்தை தனியே புரிந்து கொள்வதை விட, அதனுடன் தொடர்புடைய இணைய போக்குகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைத்துப்பார்ப்பதன் மூலமே சரியாக புரிந்து கொள்ள முடியும். புதிய ஊடகத்தின் எழுச்சி, அதன் முக்கிய அங்கமான, கவெர்ஜன்ஸ் என குறிப்பிடப்படும், இதுவரை தனித்திருந்த பல்வேறு ஊடகங்கள் ஒன்றிணைய துவங்கியிருப்பது, பயனாளிகள் பங்கேற்பை சாத்தியமாக்கும் வலை 2.0 தன்மை மற்றும் ரசிகர்களுக்காக அகல திறக்கப்பட்டுள்ள கதவுகள் உள்ளிட்டவை ஸ்டிரீமிங்குடன் இணைந்து தாக்கம் செலுத்துகின்றன.

வீடியோ தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இணைய வேகம் பல மடங்கு அதிகரித்திருப்பது, செல்போன் உள்ளிட்ட வன்பொருள் சாதனங்களின் வளர்ச்சி, அவற்றை இயக்கும் சிப்பின் திறன் பெருக்கம் ஆகியவையும் சேர்ந்தே தாக்கம் செலுத்துகின்றன.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கும் போதே, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் திரை சார்ந்து ஏற்பட்டு வரும் பெரும் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்த பயணத்தை, ஸ்டிரீமிங் வரலாற்றில் இருந்து துவங்குவோம்.

- 4தமிழ்மீடியாவிற்காக: சைபர் சிம்மன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.