நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் மத்திய அரசால் விவசாயிகளின் நலன் கருதி நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வட மாநில விவசாயிகள் ரெயில் மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வேளான் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக படையெடுத்தனர். கடந்த 26ஆம் திகதி தொடங்கப்பட்ட இப்பேரணியில் விவசாயிகள் பலர் டிராக்டரிலும்; குழுக்கலாக நடந்தும் புறப்பட்டு சென்றனர்.
டெல்லி போலீசார் அவர்களை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பான்களை தூக்கி எறிந்தும்; எதிர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. எனினும் தங்களது பேரணி போராட்டத்திலிருந்து விவசாயிகள் பின்வாங்காமல் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு வேளைகளில் சுங்க சாவடியருகேயும்; புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்திலும் விவசாயிகள் முகாமிட்டனர்.
பின்னர் இன்று ஐந்தாவது நாளாக எதிர்ப்பு பேரணி தொடர்வதால் டெல்லியில் போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சிலரால் இந்த பேரணிக்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுப்பபட்டது. ஆனால் அதனை மறுத்துப் பேசிய மத்திய உள்துரை மந்திரி அமித்ஷா விவசாயிகளின் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என கூறியது இல்லை. அப்படி ஒருபோதும் கூறவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் வருகிற டிசம்பர் 3ந்தேதி வேளாண் அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் பற்றி பேச அரசு தயார் என போராட்டக்காரர்களுக்கு அமித்ஷா உறுதி கூறினார். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய மந்திரி அமித்ஷாவின் பேச்சுவார்த்தை அழைப்பினை ஏற்க மறுப்பு தெரிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து டெல்லிக்குள் நுழைய முற்பட்டுவருவதோடு இன்று காலை டெல்லி-காஜியாபாத் எல்லையான காசிப்பூரில் கான்கிரீட் தடைகளை மீறி வரமுயற்றபோது போலிசாரால் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளைத் தவிர டெல்லியை இணைக்கும் அநேகமான அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்க விவசாயிகள் தயாராகிவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்