தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
பொதுத்தேர்வை எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சென்ற ஜனவரி மாதமும், 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பப்பரவரி மாதமும் வகுப்புக்கள் ஆரம்பமாகின. இவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். இதனால் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,46,914 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 138 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.