நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை அமைச்சு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமையை சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, கிராம சேவகர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருவது இதுவே முதல் முறை என்றும், 25 மாவட்டங்களுக்கும் பாதுகாப்பை மேற்பார்வையிட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையும் அவர் கூறியுள்ளார்.
தலதா அத்துகோரல மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எதிர்காலத்தில் இராணுவ அதிகாரிகள் கிராம சேவகர் பிரிவுகளுக்கும் அமைச்சின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
கொரோனா தொற்றினால் 1.1 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளும் 20 ஆயிரம் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ள உக்ரேனில் இருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது பாரிய அச்சுறுத்தலாகும். அவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நிதி பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையினால் தங்கள் சொந்த பாரம்பரிய இடங்களை பார்வையிட நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.