வியாழக்கிழமை பக்தாத் சந்தையில் மேற்கொள்ளப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ISIS இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
கடந்த 3 வருடங்களில் பக்தாத்தில் நிகழ்த்தப் பட்ட மோசமான தற்கொலைத் தாக்குதலான இதில் 32 பேர் பலியாகி இருந்தனர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக்கில் தாம் இன்னும் வலுவான நிலையில் தான் உள்ளோம் என்பதை இத்தாக்குதல் மூலம் ISIS அமைப்பு உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக 2018 ஆமாண்டு இதே சந்தையில் நடத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தான் குறைந்தது 27 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஈராக் தலைநகர் பக்தாத்தின் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் 100 மீட்டர் ஆழத்தில் கடந்த இரு வாரங்களாக சிக்கியிருப்பதாகக் கருதப் படும் 22 ஊழியர்களில் ஞாயிற்றுக்கிழமை வரை 11 பேர் வெற்றிகரமாக மீட்கப் பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலத்துக்கு அடியில் மிகப் பெரிய இயந்திரங்கள் மூலம் துளையிடப் பட்டு நடத்தப் பட்டு வரும் இந்தப் பாரிய மீட்புப் பணி இன்னும் தொடர்கின்றது. கீழே சிக்கியிருப்பவர்களில் 10 பேர் இன்னமும் மீட்புப் படையினருடன் தொடர்பில் இருக்கும் போதும் மிகவும் பலவீனமான உடல்நிலையுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஷடொங் மாகாணத்தில் உள்ள இந்த ஹுஷான் சுரங்கத்தில் ஜனவரி 10 ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பு ஒன்றின் காரணமாகவே இந்த 22 ஊழியர்களும் உள்ளே சிக்கிக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்