இந்தியப் பண்பாட்டிலும், இந்து ஆன்மீக மரபிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள பண்டிகைகளில் தீபாவளி முதன்மையானது. ஒவ்வோர் ஆண்டும் இல்லங்கள் தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு, இனிப்புகள் பரிமாறப்பட்டு, புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இத்திருநாள், வெறுமனே ஒரு கொண்டாட்ட நாளல்ல.
மனித வாழ்வின் இருளை அகற்றி, ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஆழமான ஆன்மீகத் தத்துவத்தைத் தன்னகத்தே கொண்ட ஒரு பண்பாட்டுத் திருவிழாவாகும்.
'தீபம்' என்பது விளக்கையும், 'ஆவளி' என்பது வரிசையையும் குறிக்கிறது. வீடுகளிலும் வீதிகளிலும் விளக்குகளை வரிசையாக ஏற்றி மகிழ்வதால் இப்பண்டிகை 'தீபாவளி' என அழைக்கப்படுகிறது. ஆனால், அதன் உண்மையான பொருள் வெளிப்புற இருளை அகற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை. மனித மனத்தில் படிந்திருக்கும் அறியாமை, அகங்காரம், பொறாமை, பேராசை, வெறுப்பு ஆகிய இருளை அகற்றி, அன்பு, அறம், அறிவு, கருணை, ஒற்றுமை ஆகிய ஒளியை ஏற்றுவதே தீபாவளியின் ஆழமான ஆன்மீகச் செய்தியாகும்.
புராணங்களும் தீபாவளியின் தோற்றமும்
தீபாவளியின் தோற்றம் குறித்து இந்து மரபில் பல்வேறு புராணக் கதைகள் காணப்படுகின்றன. அவற்றில் நரகாசுரன் வதம் மிகவும் பிரபலமானது.
புராணக் கதைகளின்படி, நரகாசுரன் என்ற அசுரன் தனது ஆணவத்தாலும் அதிகார மமதையாலும் மக்களுக்குப் பெரும் துன்பங்களை விளைவித்தான். அவனது கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக கிருஷ்ணர் அவனை அழித்ததாகக் கூறப்படுகிறது. நரகாசுரனின் அழிவுக்குப் பின்னர் மக்கள் மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி கொண்டாடிய நாளே தீபாவளியாகப் போற்றப்படுகிறது.
இந்தக் கதை வெறுமனே ஒரு அசுரனின் அழிவைக் குறிப்பிடவில்லை. மனிதனுக்குள் உருவாகும் தீய எண்ணங்களையும், அதிகார ஆணவத்தையும், அநீதியையும் அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
அதேபோன்று, இராமாயண மரபில் இராவணனை வென்று இராமர் அயோத்திக்குத் திரும்பியபோது மக்கள் விளக்கேற்றி வரவேற்றதாகவும் கூறப்படுகிறது. இதுவும் தீமையின் வீழ்ச்சியையும் நன்மையின் வெற்றியையும் குறிக்கும் ஒரு பண்பாட்டு அடையாளமாக விளங்குகிறது.
இவ்வாறு வெவ்வேறு மரபுகள் தீபாவளியை வெவ்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தினாலும், அவற்றின் அடிப்படைச் செய்தி ஒன்றுதான்; தீமை எவ்வளவு வலிமையானதாகத் தோன்றினாலும், இறுதியில் நன்மையும் அறமும் வெல்ல வேண்டும்.
இருளிலிருந்து ஒளியை நோக்கி…
தீபாவளியின் ஆன்மீகப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள உபநிடதங்களில் இடம்பெறும் ஒரு மகத்தான பிரார்த்தனையை நினைவுகூர்வது பொருத்தமானது.
“அசதோ மா சத் கமய; தமசோ மா ஜ்யோதிர் கமய; ம்ருத்யோர் மா அம்ருதம் கமய.”
இதன் பொருள்;
- பொய்மையிலிருந்து உண்மையை நோக்கி என்னை அழைத்துச் செல்.
- இருளிலிருந்து ஒளியை நோக்கி என்னை அழைத்துச் செல்.
- மரணத்திலிருந்து மரணமில்லாப் பேருண்மையை நோக்கி என்னை அழைத்துச் செல்.
இந்தப் பிரார்த்தனை மனித வாழ்வின் ஆன்மீகப் பயணத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது.
இங்கு இருள் என்பது இரவின் இருளை மட்டும் குறிக்கவில்லை. உண்மையை உணர முடியாத அறியாமையையும், பிறரது துயரத்தை உணர முடியாத மனநிலையையும், தவறான பாதையில் பயணிக்கச் செய்யும் அகங்காரத்தையும் குறிக்கிறது. அதேபோல் ஒளி என்பது அறிவு, ஞானம், அன்பு, உண்மை, மனிதநேயம் ஆகியவற்றின் குறியீடாக விளங்குகிறது.
ஒரு சிறிய அகல்விளக்கு தன்னைச் சுற்றியுள்ள இருளை அகற்றுவதுபோல், ஒருவரிடம் உருவாகும் நல்லெண்ணம் அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் ஒளிரச் செய்ய முடியும். அதுவே தீபாவளி நமக்கு உணர்த்தும் மிகப்பெரிய தத்துவமாகும்.
விளக்கேற்றுவதன் பின்னணியில் உள்ள தத்துவம்
தீபாவளியன்று வீடுகளின் வாசல்களிலும் பூஜையறைகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த விளக்கேற்றும் மரபு வெறும் சடங்காகப் பார்க்கப்பட வேண்டியதல்ல.அகல்விளக்கின் அடிப்பகுதி நிலத்தையும், எண்ணெய் வாழ்வின் ஆதாரத்தையும், திரி மனிதனின் மனத்தையும், சுடர் ஞானத்தையும் குறிக்கிறது என்று ஆன்மீக ரீதியாகப் பொருள் கொள்ளலாம்.
எண்ணெய் தீர்ந்தால் விளக்கு அணைந்துவிடும். அதுபோலவே மனித வாழ்விலும் நற்பண்புகளும் நல்லெண்ணங்களும் தொடர்ந்து பேணப்படாவிட்டால் ஆன்மீக ஒளி மங்கிவிடும்.
விளக்கு தன்னையே எரித்துக்கொண்டு பிறருக்கு வெளிச்சம் தருகிறது. இதுவும் மனித வாழ்வுக்கான ஓர் உயர்ந்த படிப்பினை. பிறருக்காக வாழ்வதும், தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதும், தன்னலத்தைக் குறைத்துக்கொள்வதும் மனிதனை உயர்த்தும் பண்புகளாகும். ஆகவே, தீபாவளியன்று ஏற்றப்படும் ஒவ்வொரு விளக்கும் நம்மிடம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும்; நமது வாழ்க்கை பிறருக்கு ஒளி தருகிறதா?
செல்வமும் ஆன்மீகமும்
தீபாவளிக் கொண்டாட்டத்தில் மகாலட்சுமி வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. செல்வம், வளம், நல்வாழ்வு ஆகியவற்றின் அடையாளமாக மகாலட்சுமி போற்றப்படுகிறார். ஆனால் செல்வம் என்பது பணத்தையும் பொருளாதார வளத்தையும் மட்டுமே குறிக்கிறதா?
உண்மையான செல்வம் என்பது ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், அன்பான குடும்பம், நல்ல உறவுகள், நேர்மையான உழைப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றையும் உள்ளடக்கியது. பொருளாதார வளம் இருந்தும் மன அமைதி இல்லாத வாழ்க்கை முழுமையானதல்ல. அதேபோல் பிறரது துயரத்தைப் பொருட்படுத்தாமல் சேர்க்கப்படும் செல்வமும் ஆன்மீக உயர்வைத் தருவதில்லை.
செல்வம் மனிதனை உயர்த்த வேண்டும்; பிறரைவிடத் தன்னை உயர்ந்தவன் என்று எண்ணச் செய்யக்கூடாது. செல்வத்தின் ஒரு பகுதி சமூக நலனுக்கும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பயன்படும்போதுதான் அதன் உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது.
கொண்டாட்டத்தில் மறக்கப்படும் மனிதநேயம்
இன்றைய நவீன வாழ்க்கையில் தீபாவளி பல இடங்களில் ஆடம்பரக் கொண்டாட்டமாக மாறிவருகிறது. புத்தாடைகள், பட்டாசுகள், விலையுயர்ந்த பரிசுகள், விருந்துகள் எனப் பண்டிகையின் வெளிப்புற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இவை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அவற்றுடன் மனிதநேயமும் இணைந்திருக்க வேண்டும்.
தனிமையில் வாழும் முதியவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் குடும்பங்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலர் பண்டிகை நாட்களிலும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர். அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதும், இயன்ற உதவிகளைச் செய்வதும், உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வதும் தீபாவளியின் உண்மையான ஆன்மீகப் பண்பாடாக அமைய வேண்டும்.
அதேவேளை, பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு, ஒலி மாசுபாடு, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். பிற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்வது நமது பொறுப்பாகும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தீபம் !
தீபாவளி ஆண்டுக்கு ஒருமுறை வரும் பண்டிகையாக இருக்கலாம். ஆனால் அதன் ஆன்மீகச் செய்தி ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையில் இடம்பெற வேண்டியதாகும்.
கோபத்தை அன்பால் வெல்வதும், வெறுப்பைக் கருணையால் அகற்றுவதும், அறியாமையை அறிவால் நீக்குவதும், அநீதிக்கு எதிராக உண்மையின் பக்கம் நிற்பதும் அன்றாட வாழ்வில் நாம் ஏற்ற வேண்டிய அகல்விளக்குகளாகும்.
வீட்டில் ஆயிரம் விளக்குகளை ஏற்றினாலும், மனத்தில் இருள் நிறைந்திருந்தால் அந்தக் கொண்டாட்டம் முழுமை பெறாது. மாறாக, ஒரு சிறிய விளக்கை ஏற்றினாலும், உள்ளத்தில் அன்பும் அமைதியும் பிறர்நலம் பேணும் எண்ணமும் நிறைந்திருந்தால் அதுவே உண்மையான தீபாவளியாகும்.
இந்தத் தீபத் திருநாளில் நமது இல்லங்களில் மட்டுமல்ல, உள்ளங்களிலும் ஒளி பிறக்கட்டும். குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகட்டும். சமூகத்தில் ஒற்றுமை வளரட்டும். மனிதர்களிடையே அன்பும் சகோதரத்துவமும் மலரட்டும். இருளை அகற்றும் விளக்காக மட்டுமல்லாமல், துயரத்தை அகற்றும் மனிதநேயமாகவும், அறியாமையை அகற்றும் அறிவாகவும், வெறுப்பை அகற்றும் அன்பாகவும் நமது வாழ்வு மாறட்டும். அதுவே தீபாவளி நமக்குத் தரும் உயர்ந்த ஆன்மீகப் பாடம் !
அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் !
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்