சாதனைகளுக்கு உடல் வலிமை மட்டுமே அடிப்படையல்ல; தளராத மனவுறுதியும், விடாமுயற்சியும், இலட்சியத்தை நோக்கிய பயணமும் இருந்தால் எத்தகைய தடைகளையும் கடந்து செல்ல முடியும் என்பதற்கு இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் தருஷா கவ்மிந்தி ஹேவபதிரணவின் வாழ்க்கைப் பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் அண்மைய பட்டமளிப்பு விழாவில் அவர் பெற்றுக்கொண்ட பட்டமும், அந்தப் பட்டத்தை வழங்குவதற்காகப் பல்கலைக்கழக வேந்தர் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவரைக் கௌரவித்த சம்பவமும் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
27 வயதான தருஷா, உடல் ரீதியான பல்வேறு சவால்களையும் கடந்து, ருஹுணு பல்கலைக்கழகத்தின் மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞானப் பீடத்தில் தனது கல்வியை நிறைவு செய்து, சமூகவியல் துறையில் கலைமாணி சிறப்புப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பட்டமளிப்பு விழா !
பொதுவாகப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில், மாணவர்களுக்குப் பட்டச் சான்றிதழ்களை வழங்கும்போது வேந்தர் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதே வழக்கமான நடைமுறை. ஆனால், தருஷா மேடைக்கு வந்தபோது அந்த நடைமுறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
பல்கலைக்கழக வேந்தரான அக்குரட்டியே நந்த தேரர், தருஷாவுக்குப் பட்டச் சான்றிதழை வழங்குவதற்காகத் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றார். ஏனைய மாணவர்களுக்கு அமர்ந்த நிலையில் பட்டங்களை வழங்கிய அவர், தருஷாவுக்கு மட்டும் எழுந்து நின்று கௌரவம் அளித்தமை அங்கிருந்த கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பாராட்டையும் கைதட்டலையும் பெற்றது.
இது வெறுமனே ஒரு பட்டமளிப்பு நிகழ்வின் நெகிழ்ச்சியான தருணம் மட்டுமல்ல. உடல் குறைபாடுகளைக் கொண்ட ஒருவரின் கல்வி முயற்சிக்கும், அதற்காக அவர் எதிர்கொண்ட போராட்டங்களுக்கும் வழங்கப்பட்ட ஒரு மனிதநேய அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.
பிறப்பிலிருந்தே சவால்களை எதிர்கொண்ட வாழ்க்கை !
மாத்தறை மாவட்டத்தின் தெனிபிட்டிய, வட்டியதுவ பிரதேசத்தைச் சேர்ந்த தருஷாவின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே பல சவால்களைக் கொண்டிருந்தது.
தனது மகள் பிறந்தபோது மருத்துவப் பணியாளர்களின் கவனக்குறைவு காரணமாகவே அவருக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சிறுவயதில் நடப்பதற்குக்கூடப் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட அவர், படிப்படியாகப் பயிற்சியின் மூலம் நடக்கக் கற்றுக்கொண்டார். இருப்பினும், நரம்பு மற்றும் கை, கால்கள் தொடர்பான பாதிப்புகள் காரணமாக இன்றும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை அவருக்கு உள்ளது.
பேசுவதிலும், கைகளால் எழுதுவதிலும் சிரமங்கள் இருந்தபோதிலும், கல்வி கற்பதற்கான தனது ஆர்வத்தையும் இலட்சியத்தையும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை.
கல்விக்காக அவர் மேற்கொண்ட போராட்டம் !
தருஷா தனது ஆரம்பக் கல்வியை நிதங்கல கனிஷ்ட வித்தியாலயத்திலும், பின்னர் உயர்தரக் கல்வியை வெலிகம ஸ்ரீ சுமங்கல மகளிர் கல்லூரியிலும் தொடர்ந்தார்.
கைகளால் இயல்பாக எழுத முடியாத நிலையில், பரீட்சைகளில் எவ்வாறு பங்கேற்பது என்பது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதற்கும் ஒரு வழி உருவாக்கப்பட்டது.
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அனுமதியுடன், அவர் வாய்மொழியாகப் பதிலளிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர் கூறும் பதில்களைப் பரீட்சை மேற்பார்வை அதிகாரி ஒருவர் எழுத்து வடிவில் பதிவு செய்வார். இந்தப் பரீட்சை நடவடிக்கைகள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டன.
பேச்சைத் தெளிவாக வெளிப்படுத்துவதிலும் சிரமங்கள் இருந்தபோதிலும், பாடங்களைக் கற்றுத் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
ஒரு மாணவருக்கு இயல்பாகக் கிடைக்கக்கூடிய கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கே பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்த தருஷா, பல்கலைக்கழகக் கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது அவரது விடாமுயற்சிக்குச் சான்றாகும்.
வெற்றிக்குப் பின்னால் நின்ற குடும்பத்தின் அர்ப்பணிப்பு !
ஒருவருடைய சாதனையை அவருடைய தனிப்பட்ட வெற்றியாக மட்டும் பார்க்க முடியாது. அதன் பின்னால் பலரது தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் மறைந்திருக்கும். தருஷாவின் வாழ்க்கையும் அதற்கு விதிவிலக்கல்ல.
அவரது தந்தையான 62 வயதுடைய பந்துல ஹேவபதிரண ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகராவார். மகளைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்வதற்கும், மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கும் தனது நேரத்தை ஒதுக்க வேண்டியிருந்ததால், அவர் வழக்கமான ஓய்வுபெறும் காலத்திற்கு ஓராண்டுக்கு முன்னரே பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
அதேபோன்று, அவரது தாயார் எச்.கே.கே. பத்மினியும் ஓய்வுபெற்ற ஆசிரியை. குடும்பத்தின் மற்றொரு முக்கியமான ஆதரவாகத் தருஷாவின் சிறிய தாயார் சந்திராணி ஹேவபதிரண செயற்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் தோழிகளான பியுமி, தாரிகா உள்ளிட்ட சக மாணவிகளும் முக்கிய பங்காற்றியுள்ளனர். உணவு உட்கொள்வது உள்ளிட்ட அன்றாடத் தேவைகளிலும் அவர்கள் அவருக்குத் துணையாக இருந்துள்ளனர்.
இவ்வாறு ஒரு குடும்பத்தின் அர்ப்பணிப்பும், நண்பர்களின் அன்பும், கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்பும் இணைந்தபோதுதான் தருஷாவின் இலட்சியம் நனவாகியுள்ளது.
பட்டத்துடன் முடிவடையாத இலட்சியப் பயணம் !
பட்டம் பெற்றதுடன் தனது கல்விப் பயணத்தை நிறுத்திக்கொள்ள தருஷா விரும்பவில்லை. எதிர்காலத்தில் உளவியல் ஆலோசகராகப் பணியாற்றி, சமூகத்திற்குச் சேவையாற்ற வேண்டும் என்பதே அவரது அடுத்த இலட்சியமாகும்.
இதற்காக அவர் ஏற்கனவே உளவியல் தொடர்பான டிப்ளோமா கற்கைநெறியொன்றையும் தொடர்ந்து வருகின்றார். மேலும், நேர்மறைச் சிந்தனை தொடர்பான விழிப்புணர்வுகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களையும் அனுபவங்களையும் மற்றவர்களுக்கான நம்பிக்கையாக மாற்ற வேண்டும் என்பதே அவரது இந்த முயற்சிகளின் அடிப்படை நோக்கமாகத் தெரிகிறது.
சமூகத்திற்குச் சொல்லும் செய்தி !
தருஷா கவ்மிந்தியின் சாதனை, சிறப்புத் தேவையுடையவர்கள் தொடர்பான சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது.
உடல் ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்ற அணுகுமுறையைவிட, அவர்களிடம் உள்ள திறமைகளையும் ஆற்றல்களையும் அடையாளம் கண்டு, அவற்றை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே ஒரு முன்னேறிய சமூகத்தின் கடமையாகும்.
கல்வி நிறுவனங்கள், அரசாங்கம், குடும்பங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயற்பட்டால், சிறப்புத் தேவையுடைய பல இளைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்க முடியும்.
தருஷாவுக்காகப் பட்டமளிப்பு மேடையில் வேந்தர் எழுந்து நின்ற அந்தத் தருணம், அவருக்கான தனிப்பட்ட மரியாதை என்பதைக் கடந்த ஒரு சமூகச் செய்தியையும் வழங்குகின்றது. ஒருவரின் உடல் நிலையைக் கொண்டு அவரது திறமையையோ, அறிவையோ, சாதனைக்கான ஆற்றலையோ மதிப்பிடக்கூடாது என்பதே அந்தச் செய்தி.
தருஷா கவ்மிந்தி இன்று பெற்றிருப்பது ஒரு பல்கலைக்கழகப் பட்டம் மட்டுமல்ல; தன்னம்பிக்கையால் தடைகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கைக்கான அடையாளமும் ஆகும்.
உடல் சவால்கள் அவரது பயணத்தை மெதுவாக்கியிருக்கலாம். ஆனால், அவரது இலட்சியத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த வகையில், தருஷாவின் வெற்றி அவருக்கு மட்டுமல்ல; வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான சிறப்புத் தேவையுடைய இளைஞர்களுக்கும் நம்பிக்கையூட்டும் ஒரு புதிய வெளிச்சமாகும்.
தடைகள் வாழ்க்கையின் முடிவல்ல; அவற்றைக் கடந்து செல்லும் மனவுறுதியே வெற்றியின் தொடக்கம் என்பதைத் தருஷாவின் பயணம் உலகிற்கு உணர்த்துகின்றது.