website analysis

2027 இலங்கை வரவு செலவுத் திட்டம் - பொருளாதார மீட்சியா?  புதிய சோதனையா?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டம் என்பது வெறுமனே அரசாங்கத்தின் வருமானத்தையும் செலவினங்களையும் பட்டியலிடும் நிதி ஆவணம் மட்டுமல்ல. அது அந்த நாட்டின் எதிர்காலப் பொருளாதாரப் பயணத்தைத் தீர்மானிக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் வெளிப்பாடாகும். குறிப்பாக, பொருளாதார வீழ்ச்சி, கடன் நெருக்கடி, விலைவாசி உயர்வு, மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பு எனப் பல நெருக்கடிகளைக் கடந்து வரும் இலங்கைக்கு, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், பொருளாதார உறுதிப்பாட்டிலிருந்து உற்பத்தி மற்றும் முதலீட்டு அடிப்படையிலான பொருளாதார மாற்றத்தை நோக்கி நகர்வதாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தை வெறுமனே அதன் அறிவிப்புகள், ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகளின் அடிப்படையில் மதிப்பிட முடியாது. பொருளாதார நெருக்கடியின் சுமையை இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்தப்போகும் மாற்றங்களே அதன் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கும்.

பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளும் நிதி யதார்த்தங்களும் !

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்த அரச செலவினம் சுமார் 7.93 இலட்சம் கோடி ரூபாவாக (ரூ.7.93 டிரில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மீண்டெழும் செலவினங்களுக்காக 5.8 இலட்சம் கோடி ரூபாவும், மூலதனச் செலவினங்களுக்காக 2 இலட்சம் கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் வருமானம் மற்றும் மானியங்கள் 6.18 இலட்சம் கோடி ரூபாவாக எதிர்பார்க்கப்படுவதுடன், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசாங்கத்தின் முதன்மை நிதி உபரி 2.3 சதவீதமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் 3.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி, பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் செலவிடத் தயாராக இருக்கின்ற நிலையில், அதற்கான வருமானத்தை எவ்வாறு திரட்டப்போகின்றது என்பதாகும்.

அரசாங்கத்தின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 16 சதவீதமாகப் பேணுவதே அதன் நடுத்தரகால இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2027ஆம் ஆண்டுக்கான மதிப்பீடு 15.8 சதவீதமாகவே காணப்படுகிறது.அதாவது, அரசாங்கம் நிர்ணயித்துள்ள வருமான இலக்கையே அதன் வரவு செலவுத் திட்டம் எட்டவில்லை. இந்த முரண்பாடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மறுபுறம், சுமார் 3.8 இலட்சம் கோடி ரூபா மொத்தக் கடன்களைப் பெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கடன்களைச் செலுத்துவதற்காக மாத்திரம் 862 பில்லியன் ரூபா வட்டிச் செலவினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகள் அவசியமானவை என்றாலும், அவற்றுக்கான நிதி எங்கிருந்து கிடைக்கும் என்பதற்கும், எதிர்காலத் தலைமுறைகளின் மீது புதிய கடன் சுமைகள் ஏற்றப்படுமா என்பதற்கும் அரசாங்கம் தெளிவான பதிலளிக்க வேண்டும். 

மக்களுக்கான நிவாரணமா? வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் திட்டமா ?

இந்த வரவு செலவுத் திட்டத்தின் சாதகமான அம்சங்களில் ஒன்று, தனிநபர் வருமான வரி நிவாரணத்தை அதிகரிப்பதாகும். மாதாந்த வருமானத்தில் வரி விலக்குப் பெறுவதற்கான உச்சவரம்பு 150,000 ரூபாவிலிருந்து 162,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கக்கூடும்.

அதேபோன்று, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளை 2,500 ரூபாவால் அதிகரித்து 12,500 ரூபாவாக வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்புகள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இன்றைய இலங்கையில் ஒரு குடும்பத்தின் அடிப்படை வாழ்க்கைச் செலவுகள் எவ்வளவு உயர்ந்துள்ளன? உணவு, மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் மற்றும் வீட்டுவசதி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் செலவிடும் தொகை எவ்வளவு? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வரி நிவாரணம் கிடைப்பது ஒரு நன்மை. ஆனால், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நேரடியான வாழ்வாதாரப் பாதுகாப்பு கிடைப்பதே இன்னும் முக்கியமானது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொண்டுள்ள சேமிப்பு இழப்பு, கடன் சுமை மற்றும் வாழ்க்கைத் தர வீழ்ச்சிக்கான தீர்வுகள் போதுமான அளவில் முன்வைக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகின்றது.

சமூக நலத்திட்டங்கள் என்பது அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கருவியாக அல்லாமல், வறுமையைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தாமல் தடுக்கும் நீண்டகாலப் பொருளாதார முதலீடாக அமைய வேண்டும்.

உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வு !

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உற்பத்தித் துறையின் வளர்ச்சி அத்தியாவசியமானது. இதனை அரசாங்கம் தனது 2027 வரவு செலவுத் திட்டத்தில் ஓரளவு கவனத்தில் எடுத்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்காக 67,687 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வங்கிகளின் ஊடாக சுமார் 174 பில்லியன் ரூபா சலுகைக் கடன்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, ஏற்றுமதி உற்பத்தி மற்றும் கிராமிய தொழில் முயற்சிகளுக்கு நிதி வசதிகளை ஏற்படுத்துவது பொருளாதாரத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப உதவும்.

குறிப்பாக, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான குறைந்த வட்டிக் கடன் திட்டங்கள், கிராமிய தொழில் முயற்சிகளுக்கான நிதி உதவிகள் போன்றவை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், சமூகப் பொருளாதார மாற்றத்திற்கு வித்திடக்கூடும். ஆனால், கடன் வழங்குவதுடன் அரசாங்கத்தின் பொறுப்பு முடிவடைந்துவிடுவதில்லை.

உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதிக்கான வசதிகள், தொழில்நுட்பப் பயிற்சிகள், விலை நிர்ணயப் பாதுகாப்பு மற்றும் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான பொருளாதாரச் சூழல் ஆகியனவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதாக அறிவிக்கப்படும் கடன் திட்டங்களே எதிர்காலத்தில் அவர்களுக்குப் புதிய கடன் சுமைகளாக மாறிவிடலாம்.

கல்வி, சுகாதாரம்: எதிர்காலத்திற்கான முதலீடுகள்

கல்வித்துறைக்கு 278 பில்லியன் ரூபாவும், சுகாதாரத்துறைக்கு 439 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. கல்வித்துறையில் டிஜிட்டல் மாற்றம், மாணவர்களுக்கான இணைய வசதிகள், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

750,000 தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டுக்கான வவுச்சர்களை வழங்குவதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை எதிர்காலத் தொழில்நுட்பப் பொருளாதாரத்திற்கு அவசியமானவை. அதேபோன்று, சுகாதாரத்துறையில் புதிய பணியாளர்களை நியமித்தல், மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றுக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இலங்கையின் அரச மருத்துவமனைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் வெளிநாட்டுப் புலம்பெயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியமாகும்.ஒதுக்கப்படும் நிதியின் அளவைவிட, அதன் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் சேவையின் தரமே முக்கியமானது.

உட்கட்டமைப்பு அபிவிருத்தியா? மீண்டும் கடன் சார்ந்த வளர்ச்சியா ?

நெடுஞ்சாலைகள், தொடருந்துப் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு இந்த வரவு செலவுத் திட்டம் குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக, தொடருந்துப் பாதைகளின் மின்மயமாக்கலுக்கு 80 பில்லியன் ரூபாவும், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திக்காகப் பல்வேறு ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிப்பது பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு உதவக்கூடும். ஆனால், இலங்கையின் கடந்தகால அபிவிருத்தி அனுபவங்கள் சில முக்கியமான பாடங்களை வழங்கியுள்ளன.

பொருளாதாரப் பயன்களைக் கணக்கிடாமல் முன்னெடுக்கப்பட்ட பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள், நாட்டின் கடன் சுமையை அதிகரித்ததுடன், எதிர்பார்த்த வருமானத்தையும் உருவாக்கவில்லை.எனவே, புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஒவ்வொன்றும் அதன் பொருளாதாரப் பயன், வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீட்டுத் திரும்பப்பெறல் மற்றும் நீண்டகாலப் பராமரிப்புச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். அபிவிருத்தி என்பது கட்டடங்களையும் வீதிகளையும் நிர்மாணிப்பது மட்டுமல்ல. அவை மக்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்றனவா என்பதே அதன் அளவுகோலாக இருக்க வேண்டும்.

டிட்வா பேரிடரும் வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளும் !

இலங்கையைப் பாதித்த டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைப்பதற்காக மேலதிகமாக 260 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும்.

ஆனால், இந்த நிதி ஒதுக்கீடுகள் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைகின்றனவா? வீடுகள், விவசாய நிலங்கள், சிறு தொழில்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புவதில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்படுகின்றது? என்பவை வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நீண்டகாலமாகப் போரின் பாதிப்புகளைச் சுமந்துவரும் மக்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு, விவசாய அபிவிருத்தி, மீன்பிடித் தொழில், உள்ளூர் தொழில் முயற்சிகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அவசியமானவை.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்பது வெறுமனே பிராந்திய ஒதுக்கீடுகளின் விடயமல்ல. தேசிய பொருளாதாரத்தில் அனைத்துப் பிராந்திய மக்களும் சமமான பங்காளிகளாக மாறுவதற்கான அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாடாகும். அரசாங்கம் முன்வைக்கும் தேசிய பொருளாதார மாற்றம், பிராந்தியங்களுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் குறைக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கத்தின் எதிர்காலப் பாதையும் !

இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் பொருளாதார மறுசீரமைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பின்னரும் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றொரு திட்டத்தில் இணைவது பொருத்தமானதா என்பதை ஆராய்வதற்கு அரசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது. இது முக்கியமான தீர்மானமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கையின் கடன் நம்பகத்தன்மை, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளுடனான உறவுகளுக்கு உதவக்கூடும்.

ஆனால், பொருளாதார மறுசீரமைப்புகள் அனைத்தும் வரி அதிகரிப்பு, மானியக் குறைப்பு மற்றும் அரச செலவினக் கட்டுப்பாடு போன்றவற்றின் வழியாகவே முன்னெடுக்கப்பட முடியாது.உற்பத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி விரிவாக்கம் மற்றும் வருமானப் பகிர்வில் சமத்துவம் ஆகியவற்றுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

பொருளாதார உறுதிப்பாட்டை அடைவது அவசியம். ஆனால், அந்த உறுதிப்பாட்டின் விலையைத் தொடர்ந்து சாதாரண மக்களே செலுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.

ஊழல் ஒழிப்பும் அரச நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலும் !

இந்த வரவு செலவுத் திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் அரச நிர்வாகத்தின் நேர்மையும் வெளிப்படைத்தன்மையுமாகும். ஊழலற்ற ஆட்சியையும் அரச வளங்களின் முறையான பயன்பாட்டையும் வலியுறுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தனது ஒவ்வொரு நிதி ஒதுக்கீட்டின் பயன்பாட்டையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

அரச சொத்துக்களை நிர்வகிப்பதற்கான புதிய சட்ட ஏற்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல், வரி நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், சட்டங்களை இயற்றுவதும் புதிய குழுக்களை அமைப்பதும் மட்டுமே ஊழலை ஒழித்துவிடாது.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அரச கொள்முதல், ஒப்பந்தங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் செலவினங்கள் பொதுமக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, அரசாங்கம் அறிவித்துள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் பொறுப்பான நிறுவனங்கள், செயற்பாட்டு இலக்குகள், நிதிப் பயன்பாடு மற்றும் முன்னேற்ற அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் சொந்த உறுதிமொழியாகவும் அமைந்துள்ளது. அந்த உறுதிமொழி நடைமுறையில் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றது என்பதே மக்களின் மதிப்பீட்டிற்கு உட்பட வேண்டும்.

அறிவிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமா? மாற்றத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டமா ?

2027ஆம் ஆண்டுக்கான இலங்கை வரவு செலவுத் திட்டத்தில் பல சாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன. உற்பத்திப் பொருளாதாரம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் மயமாக்கல், உட்கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. கடன் சுமை, வெளிநாட்டு நிதித் தேவைகள், வருமானப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் போன்ற சவால்கள் தொடர்கின்றன.

அத்துடன், அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி இலக்குகள் நடைமுறையில் எவ்வளவு சாத்தியமானவை என்பதையும் பொறுத்திருந்தே மதிப்பிட வேண்டும். முக்கியமாக, இந்த வரவு செலவுத் திட்டம் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் நம்பகத்தன்மைக்கும் ஒரு முக்கியமான சோதனையாக அமையப்போகின்றது.

முந்தைய அரசாங்கங்களின் பொருளாதாரத் தவறுகளை விமர்சித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களது ஆட்சியில் வேறுபட்ட பொருளாதார அணுகுமுறையை நடைமுறையில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதற்காக, வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் காலவரையறையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். அதன் பயன்கள் அரசியல் ஆதரவாளர்களுக்கோ குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கோ மட்டுப்படுத்தப்படாமல் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.

இலங்கைக்கு இப்போது தேவைப்படுவது வெறுமனே பொருளாதார வளர்ச்சி என்ற புள்ளிவிபரமல்ல. மக்களின் வருமானம் உயர வேண்டும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும்; விவசாயிகளும் தொழில்முயற்சியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்; ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்; வெளிநாட்டுக் கடன்களில் தங்கியிருக்கும் பொருளாதார நிலை படிப்படியாக மாற்றப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது ஓர் அரசாங்கத்தின் சாதனையாக இருக்கலாம். ஆனால், அந்த மீட்சியின் பயனை மக்களின் வாழ்க்கையில் உணரச் செய்வதே நல்லாட்சியின் உண்மையான அடையாளமாகும். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அந்த மாற்றத்திற்கான பாதையைத் திறக்குமா? அல்லது நல்ல எதிர்பார்ப்புகளையும் புதிய வாக்குறுதிகளையும் கொண்ட இன்னுமொரு நிதி ஆவணமாகவே முடிவடையுமா? அதற்கான பதிலை நாடாளுமன்ற உரைகள் தீர்மானிக்கப் போவதில்லை. அரசாங்கத்தின் நடைமுறைச் செயற்பாடுகளும், மக்களின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றங்களுமே தீர்மானிக்கப் போகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்