website analysis

“ஆல் இஸ் வெல்.. கான்பிடன்ட்-ஆ இருங்க..” - குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கிய முதல்-அமைச்சர் விஜய்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டையை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.

நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இந்த ஆண்டு, குழந்தைகள் தினத்தை யொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக ரூ.9.27 கோடியில் டெண்டர் விடப்பட்டது. பல்வேறு கேக் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் இதற்கான டெண்டரை பெற்றுள்ளன. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்கும் வகையில் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கான நிகழ்ச்சி, கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதன்படி இன்று காலை இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் கேக் வழங்கினார். மேலும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும் வழங்கிய அவர் அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து, தொகுதியில் நல உதவிகளையும் அவர் வழங்க இருக்கிறார். கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், தொகுதியில் நலத் திட்ட பணிகளை முதல்-அமைச்சரே தொடங்கி வைக்க இருக்கிறார். முதல்-அமைச்சர் விஜய் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கொளத்தூரில் தொடங்கி வைக்கப்படும் அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி சிறார்களுக்கு வழங்கிய வாழ்த்து அட்டையில், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என்றும், All is well என்றும் Confidenta இருங்க என்றும், பிரியமுடன் விஜய் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்