website analysis

மைக்ரோசாஃப்ட் சேவை வழங்கிகளில் முடக்கம் !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவில்  மைக்ரோசாஃப்ட் சேவைகளின் (Outlook, Teams மற்றும் Copilot போன்றவை) முடக்கம், வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் தொடர்ந்ததாகத் தெரிய வருகிறது. இணைய வழங்கிகளில் ஏற்பட்ட கோளாறுகளே இந்த முடக்கத்திற்குக் காரணம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ள அதேவேளை, அதனைச் சீரமைக்கும் பணிகளிலும் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த முடக்கத்திற்குக் காரணம் ஏதேனும் தீங்கிழைக்கும் செயல்களா (malicious activity) என்பது குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்றும், அதுபோன்ற எந்தச் செயலும் கண்டறியப்படவில்லை என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சேவை முடக்கத்தால் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் உள்ள அரசு முகமைகள், அத்துடன் OpenAI மற்றும் Anthropic போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மைக்ரோசாஃப்ட் 365 சேவைகளில் ஏற்பட்டுள்ள இரண்டாவது முடக்கம் இதுவாகும். தொடர்ச்சியான இத்தகைய பாதிப்புகள், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து அதன் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பும் நிலையை உருவாக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

சமீபத்திய அறிவிப்பில், பாதிக்கப்பட்ட சர்வர்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதன் மூலம் முழுமையான மற்றும் நீடித்த சீரமைப்பு கிடைக்கவில்லை. மாற்றங்கள் செய்யப்பட்ட சில பிராந்தியங்களில் மட்டும் ஓரளவு மீட்சி காணப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்த உள்கட்டமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்த, மேலும் என்னென்ன கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அந்நிறுவனம் 'X' தளத்தில் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்