ஒளி என்பது வெறும் வெளிச்சத்தின் அடையாளம் மட்டுமல்ல; அது ஞானத்தின் குறியீடு, இறையுணர்வின் வெளிப்பாடு, அறத்தின் வழிகாட்டி. மனித மனத்தில் படிந்திருக்கும் அறியாமை என்னும் இருளை அகற்றி, ஆன்மிக ஞானம் என்னும் ஒளியை ஏற்றுவதையே கார்த்திகைத் தீபத் திருவிழா நமக்கு உணர்த்துகிறது.
தமிழர் பண்பாட்டிலும், இந்து சமய ஆன்மிக மரபிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் திருவிழாக்களில் கார்த்திகைத் தீபம் மிக முக்கியமானது. இல்லங்கள் தோறும் அகல் விளக்குகள் ஏற்றப்படுவதும், ஆலயங்கள் ஒளியால் அலங்கரிக்கப்படுவதும், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவதும் இத்திருவிழாவின் தனிச்சிறப்புகளாகும். இது ஒரு சமயச் சடங்காக மட்டுமன்றி, மனித வாழ்வின் உயரிய தத்துவங்களை எடுத்துரைக்கும் ஒளித் திருவிழாவாகவும் திகழ்கிறது.
கார்த்திகைத் தீபத்தின் புராணப் பின்னணி
கார்த்திகைத் தீபத்தின் சிறப்பை உணர்த்தும் புராணக் கதை சிவபெருமானின் அளப்பரிய பெருமையை விளக்குகிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அவர்களுடைய ஆணவத்தை அகற்றி, பரம்பொருளின் எல்லையற்ற தன்மையை உணர்த்துவதற்காக சிவபெருமான் முடிவும் முதலுமற்ற ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார்.
அந்த ஜோதியின் அடியையும் முடியையும் காண்பதற்கு பிரம்மாவும் திருமாலும் முயன்றனர். திருமால் வராக வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிச் சென்று அடியைக் காண முயன்றார். பிரம்மா அன்னப்பறவை வடிவம் கொண்டு உயரப் பறந்து முடியைக் காண முயன்றார். ஆனால் இருவராலும் சிவஜோதியின் எல்லையைக் கண்டறிய முடியவில்லை.
இதன் மூலம் இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் என்பதும், மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவன் என்பதும் உணர்த்தப்பட்டது.
இந்த ஜோதி வடிவத்தின் நினைவாகவே திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானை ஜோதி வடிவில் வழிபடும் இந்நிகழ்வு, சைவ சமயத்தின் மிக உயர்ந்த ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
கார்த்திகை நட்சத்திரமும் முருகப்பெருமானும்
கார்த்திகைத் திருநாளுக்கு முருகப்பெருமானுடனும் நெருங்கிய தொடர்பு உண்டு.சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப் பெண்கள் அறுவர் அந்தக் குழந்தைகளை அன்புடன் வளர்த்தனர். பின்னர் பார்வதி தேவி அவர்களை ஒன்றிணைத்து ஆறுமுகப் பெருமானாக அருள்பாலித்தார் என்பது கந்தபுராணம் கூறும் வரலாறு.
ஆறு கார்த்திகைப் பெண்களின் தாய்மையைப் போற்றும் வகையில் அவர்கள் கார்த்திகைப் பெண்களாக வணங்கப்படுகின்றனர். முருகப்பெருமானுக்குக் கார்த்திகேயன் என்ற திருநாமம் அமைந்ததற்கும் இதுவே காரணமாகும்.
எனவே, கார்த்திகை மாதமும் கார்த்திகை நட்சத்திரமும் சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும் உரிய சிறப்புமிக்க வழிபாட்டுக் காலங்களாக விளங்குகின்றன.
திருவண்ணாமலை மகாதீபம் – மலைமீது எழும் மகாஜோதி
கார்த்திகைத் தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வாகத் திகழ்வது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபமாகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பல நாட்கள் நடைபெறும் கார்த்திகைத் திருவிழாவின் நிறைவாக, கார்த்திகை மாதத் தீபத் திருநாளன்று மாலை வேளையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பெரிய கொப்பரையில் நெய் நிரப்பி, திரியிட்டு ஏற்றப்படும் அந்த மகாஜோதி பல மைல் தொலைவிலிருந்தும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறது. தீபம் ஏற்றப்படும் அந்தத் தருணத்தில் ஆலய மணிகளும், சங்க நாதங்களும் முழங்க, பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா!' என்று பக்திப் பரவசத்துடன் முழங்குகின்றனர்.அந்தக் கணத்தில் மலையே இறைவனாகவும், தீபமே இறைவனின் திருவுருவமாகவும் பக்தர்களின் மனத்தில் நிலைகொள்கிறது.
திருவண்ணாமலையைச் சிவனின் ஜோதி வடிவமாகக் கருதி வலம் வருவது கிரிவலம் எனப்படுகிறது. குறிப்பாகக் கார்த்திகைத் தீபத்தன்று கிரிவலம் செல்வது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.அருணாசலம் என்ற திருநாமமே நினைப்பவர்களின் அறியாமை இருளை அகற்றும் ஆன்மிகப் பொருளைக் கொண்டதாகப் போற்றப்படுகிறது.
இல்லங்களில் அகல் விளக்குகள் ஏற்றுவதன் தத்துவம்
கார்த்திகைத் தீபத்தன்று வீடுகளிலும் ஆலயங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றுவது தொன்றுதொட்டு நிலவிவரும் மரபாகும். வீட்டின் வாசல், முற்றம், மாடம், துளசி மாடம், பூஜையறை எனப் பல இடங்களிலும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. குறிப்பாக மாலை நேரத்தில் வரிசையாக ஏற்றப்படும் அகல் விளக்குகள் இல்லத்திற்குப் பொலிவையும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.
இந்த வழிபாட்டில் பொதிந்திருக்கும் தத்துவம் ஆழமானது.
- அகல் விளக்கு – மனித உடலைக் குறிக்கிறது.
- எண்ணெய் அல்லது நெய் – மனிதனின் மனத்திலுள்ள ஆசைகளையும் பற்றுதல்களையும் குறிக்கிறது.
- திரி – மனிதனின் உயிரையும் உள்ளத்தையும் குறிக்கிறது.
- சுடர் – ஞானத்தையும் இறையருளையும் குறிக்கிறது.
எண்ணெய் தீர்ந்து திரி எரிந்து முடிவதைப் போல, மனித வாழ்வும் நிலையற்றது என்பதை விளக்கு உணர்த்துகிறது. ஆனால் அந்தக் குறுகிய காலத்திலும் தன்னை எரித்துக்கொண்டு பிறருக்கு வெளிச்சம் தருவதே விளக்கின் உயரிய பண்பாகும்.
அதேபோல், மனிதனும் தனது வாழ்க்கையைப் பிறருக்குப் பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே கார்த்திகைத் தீபம் மறைமுகமாக உணர்த்துகிறது. திருக்கார்த்திகை நோன்பும் வழிபாட்டு மரபுகளும்
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள், கார்த்திகை நட்சத்திரம், பௌர்ணமி ஆகிய நாட்கள் சிவ வழிபாட்டிற்குச் சிறப்புடையனவாகக் கருதப்படுகின்றன.
கார்த்திகை மாதம் முழுவதும் மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபடுவோர் பலர் உள்ளனர். சிலர் கார்த்திகை விரதம் மேற்கொண்டு, உணவுக் கட்டுப்பாட்டுடன் இறைவனை வழிபடுகின்றனர். கார்த்திகைத் தீபத்தன்று அதிகாலையில் நீராடி, வீட்டையும் பூஜையறையையும் தூய்மைப்படுத்தி, இறைவனுக்குப் பூக்களால் அலங்காரம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபடுவது மரபாகும்.
சிவாலயங்களில் அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சில குடும்பங்களில் கார்த்திகைப் பொரி, பொரியுருண்டை, அப்பம் போன்ற பாரம்பரிய உணவுப் படையல்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் குடும்பப் பண்பாட்டின் அடையாளங்களாகும்.
ஒளி தரும் சமூகப் பாடம்
கார்த்திகைத் தீபம் நமக்கு வழங்கும் செய்தி ஆன்மிகத்தோடு நின்றுவிடுவதில்லை. அது சமூக வாழ்வுக்கும் பொருந்தக்கூடிய உயரிய அறநெறியைக் கொண்டுள்ளது. ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றுவதால் தனது ஒளியை இழப்பதில்லை. மாறாக, பல விளக்குகள் ஏற்றப்படும்போது இருள் மேலும் அகல்கிறது. இதுவே மனித உறவுகளுக்கும் பொருந்தும்.
ஒருவருடைய அறிவைப் பகிர்வதால் அவருடைய அறிவு குறைவதில்லை. ஒருவருக்குச் செய்யும் உதவி நமது மனிதநேயத்தை உயர்த்துகிறது. அன்பைப் பகிர்வதால் அன்பு குறைவதில்லை; அது மேலும் பெருகுகிறது. இன்றைய உலகில் பொறாமை, பகைமை, வன்முறை, சுயநலம், மதவெறி, பொருளாசை போன்ற இருள்கள் மனித மனங்களைச் சூழ்ந்துள்ளன. இவற்றை அகற்றுவதற்கு வெளியில் ஏற்றப்படும் விளக்குகளைவிட உள்ளத்தில் ஏற்றப்படும் அன்பு, அறம், இரக்கம், சகிப்புத்தன்மை ஆகிய விளக்குகளே அவசியமானவை.
அண்டை வீட்டாரின் துயரத்தில் பங்குகொள்வதும், ஆதரவற்றவர்களுக்கு உதவுவதும், முதியவர்களை மதிப்பதும், குழந்தைகளுக்கு நல்ல பண்புகளைப் புகட்டுவதும் உண்மையான கார்த்திகைத் தீப வழிபாட்டின் விரிவாக்கங்களாக அமைய வேண்டும்.
உள்ளத்தில் ஏற்றுவோம் ஞானத் தீபம் !
கார்த்திகைத் தீபம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை வந்து செல்லும் ஒரு விழா மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையில் ஒளி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும் ஆன்மிக விழிப்புணர்வு.
வீட்டில் ஏற்றும் அகல் விளக்கு நமது இல்லத்தை ஒளிரச் செய்யட்டும். உள்ளத்தில் ஏற்றும் ஞான விளக்கு நமது சிந்தனையைத் தூய்மைப்படுத்தட்டும். அன்பின் விளக்கு நமது குடும்ப உறவுகளை வலுப்படுத்தட்டும். அறத்தின் விளக்கு நமது சமூகத்தை உயர்த்தட்டும்.
அறியாமை என்னும் இருள் அகன்று, ஆன்மிக ஞானம் என்னும் ஒளி பெருகி, மனிதநேயம் என்னும் மகாதீபம் உலகெங்கும் பிரகாசிக்க வேண்டும்.
விளக்கேற்றுவது ஒரு வழிபாடு; ஒளியாக வாழ்வது ஒரு தவம் !
இந்தக் கார்த்திகைத் திருநாளில் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இறையுணர்வு என்னும் தீபம் ஏற்றப்படட்டும். உலகெங்கும் அன்பும் அமைதியும் அறமும் நிலைபெறட்டும். அண்ணாமலையாருக்கு அரோகரா! அருணாசல சிவா! அருணாசல சிவா!
- 4தமிழ்மீடியாவிற்காக : மாதுமை