free website hit counter

‘ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னாள் போராளிகளை நோக்கி கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புக்களினாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் “...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை?; தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி ஓடினீர்கள்?...” என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

அண்மையில் கூட தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கூட அது தொடர்பிலான விவாதங்களின் போது, முன்னாள் போராளிகளை நோக்கி, “நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை; குப்பி கடிக்காத நீங்கள் எல்லாம் முன்னாள் போராளிகள் என்று சொல்லிக் கொள்ளும் அருகதை ஆற்றவர்கள்..” என்பது மாதிரியான வாதங்களை முன்வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘ஏன் குப்பி கடிக்கவில்லை’ என்ற கேள்விகளை காணும் போதெல்லாம், ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்டளவான தரப்புக்களிடம் ‘குற்றவுணர்ச்சி’ என்கிற மனிதனின் பகுத்தறிவு சார் அடிப்படை உணர்வு இல்லை என்ற உண்மை முகத்தில் அறையும். அடக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் சமூகத்துக்குள் இவ்வாறான தரப்புக்கள் இருப்பது என்பது தமிழ்ச் சமூகத்தின் பெரும் சாபக்கேடு. ஏனெனில், குற்றவுணர்ச்சிதான் மனிதனை விலங்குக் கூட்டத்திலேயே மேன்மையான இடத்தில் வைப்பதற்கான காரணங்களில் முக்கியமானது. காடுகளில் இருந்து நீர் கரைகளின் வழியாக மனித நாகரீகம் வளர்ந்து வந்த போது, சமூகங்களாக வாழ்வதற்கான உந்துதல்களில் குற்றவுணர்ச்சி என்கிற உணர்வும் முக்கிய இடத்தினை வகித்தது. குற்றவுணர்ச்சி இல்லையென்றால் மனித இனம் எப்போதோ தங்களுக்குள் அடித்துக் கொண்டு முழுவதுமாக அழிந்து போயிருக்கும். குற்றவுணர்ச்சியே, மனிதனை இன்றைய ஓரளவான நாகரீக ஒழுங்குக்குள் கொண்டு வந்து சேர்த்தது.

முள்ளிவாய்க்கால் முடிவு, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பின்னடைவு. அதிலிருந்து மீண்டெழுவது என்பது எவ்வளவு சிரத்தையெடுத்து செயற்பட்டாலும் இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் விடயம். அதனை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் உணர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவு விட்டுச் சென்ற முன்னாள் போராளிகள் எனும் அடையாளம் கொண்ட இன விடுதலை வீரர்களை, தீண்டத்தாகாதவர்களாக தமிழ்ச் சமூகம் நோக்கி வருகின்றது. ஆயுதப் போராட்டங்களின் வீழ்ச்சி போர்க்கைதிகளை, முன்னாள் போராளிகளை உலகம் பூராவும் பல சந்தர்ப்பங்களில் உருவாக்கியிருக்கின்றது. போராடிய அனைவரும் போர்க்களத்தில் மாண்டு வீழ்வதில்லை. அது நிகழவும் வாய்ப்பில்லை. அதுபோல, போராடச் சென்றவர்கள் போராட்டம் தோல்வியடைந்தால் உயிருடன் திரும்பக் கூடாது என்பது நினைப்பதெல்லாம் மிருகத்தனமான உணர்வு. அதுதான் குற்றவுணர்ச்சி அற்ற நிலை. அதனால்தான், முன்னாள் போராளிகளை நோக்கி அரச உளவாளிகள் என்கிற அடையாளமும், ஏன் குப்பி கடிக்கவில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுவதற்கு காரணமாகும்.

அதிக தருணங்களில் முன்னாள் போராளிகளை நோக்கி இவ்வாறான கேள்விகளை முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதில் எந்தவித பங்களிப்பும் செய்யாமல் பவ்வியமாக பாடசாலைக்கும் தனியார் வகுப்புக்களுக்கும் சென்று தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை இட்டவர்கள். அல்லது, யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ பெற்றோரோடு பாதுகாப்பாக இருந்து கொண்டு புலம்பெயரும் கனவைச் சுமந்தவர்கள். பாடசாலைகளிலோ, தனியார் வகுப்புக்களிலோ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பு கூட்டங்களை கேட்கக்கூட தயங்கியவர்கள். அந்தச் சந்தர்ப்பங்களில் மதில், வேலிகள் பாய்ந்து ஒழுங்கைகளுக்குள்ளால் வீடுகளுக்கு ஓடியவர்கள். இவர்களை ஒத்தவர்கள் போராட்டக்களத்தில் இருக்கின்ற போது, இவர்கள் பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொண்டிருந்தார்கள் அல்லது புலம்பெயரும் முயற்சிக்காக கொழும்பில் நின்றவர்கள். இவர்களோ, இவர்களின் பெற்றோரோ ஆயுதப் போராட்டத்தையோ, அதனை இறுதி வரை நடத்திய விடுதலைப் புலிகளையோ மனதுக்குள் நாள் தோறும் திட்டிக் கொண்டிருந்தவர்கள்.

ஆனால், புலிகளின் வீழ்ச்சி, போராட்டக்காலங்களில் ஒளித்து ஓடியவர்களையெல்லாம் திடீர் தமிழ்த் தேசியப் போராளிகள் ஆக்கிவிட்டது. அவர்களில் அதிகமானவர்கள் தான், முன்னாள் போராளிகளை நோக்கி துரோகிகள், காட்டிக்கொடுப்பாளர்கள் என்கிற அடையாளங்களைச் சூட்டுகிறார்கள். வாழ்வை வளமாக்க வேண்டிய வயதில் போராட்டத்துக்காக முழுவதுமாக தங்களை அர்ப்பணித்து தெய்வாதீனமாக உயிர் மீண்டிருக்கின்ற முன்னாள் போராளிகள், இன்றைக்கு வாழ்வதற்தே வழியில்லால் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முடிவின் பின் 13 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அவர்களை தமிழ்ச் சமூகம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவர்களின் வாழ்வாதாரம், குடும்பம் பற்றி எந்த உரையாடலும் தமிழ்ச் சூழலில் எந்தவொரு தரப்பினாலும் முன்னெடுக்கப்படவில்லை. குற்றவுணர்ச்சியுள்ள சமூகமாக இருந்திருந்தால், அதுவெல்லாம் நிகழ்ந்திருக்கும். இந்தப் பத்தியாளரும் ஆயுதப் போராட்டம் நீடித்த காலத்தில் போராடும் வயதை அண்மித்துவிட்ட ஒருவர், ஆனால், எதிர்கால வாழ்வு பற்றிய பயத்தினால் ஆயுதப் போராட்டத்தின் திசைப் பக்கமே திரும்பவில்லை. எனினும் குற்றவுணர்ச்சி என்கிற விடயம் முன்னாள் போராளிகள் பற்றிய எண்ணங்களின் போது, பிடரியில் தட்டுவதுண்டு. அதுதான், அவர்களை நோக்கி எந்தவொரு தருணத்திலும் தகுதியற்ற வார்த்தைகளை உதிர்ப்பதை தடுக்கின்றது.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடம் முழுவதுமாக சென்று சேர்ந்துவிட்டது. கட்சிகளிடம் போராடும் இனமொன்றின் அரசியல் முழுவதுமாக சென்று சேர்ந்தால் அது ஆபத்தான கட்டங்களை திறந்துவிடும். அதுவும் அதிகார ஆசையோடும் பதவி வெறியோடும் இருக்கின்ற கட்சிகளிடம் ஓர் இனத்தின் அரசியல் சென்று சேர்ந்தால், அது அதிக தருணங்களில் அபத்தமான கட்டங்களையே கொண்டுவந்து சேர்க்கும். இன்று தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இயங்கிக் கொண்டு இருக்கின்ற கட்சிகள் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அது புரிந்துவிடும். ஆயுதப் போராட்ட காலத்தில் புலிகளுக்குப் பயந்து பணிந்து இயங்கிய கட்சிகள் எல்லாம், புலிகளின் வீழ்ச்சிக்கு காத்திருந்தது போலவே இப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது, புலிகள் மீதான போலி விசுவாசத்தினை வெளியில் காட்டிக் கொண்டு, தங்களின் கட்சி அரசியலை வளர்ப்பதற்கான கட்டங்களை மாத்திரமே முன்னின்று நடத்தி வருகின்றன. அதற்காக, புலிகளின் மாவீரர் தினம், தியாகி திலீபன் நினைவு நாட்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான், ஜீரணிக்க முடியாத விடயம்.

தேர்தல் அரசியலை நோக்கி முன்னாள் போராளிகளில் சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகையை எந்தவொரு தருணத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ரசிக்கவில்லை. வேண்டுமென்றால் அவர்களைக் காட்டி தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்கே தயாராக இருக்கின்றன. ஆனால், தேர்தல் அரசியலை நோக்கி வந்த முன்னாள் போராளிகள், அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதையோ, நினைவேந்தல்களை கட்சிகள் அமைப்புக்கள் கைப்பற்ற முயற்சிப்பதையோ கேள்விக்குள்ளாக்கினால், சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான், அவர்களை நோக்கி குப்பி கடிக்காதவர்கள் இனத் துரோகிகள், அவர்களுக்கு தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இடமில்லை என்ற விடயம் பேசப்படுகின்றது. தேர்தல் அரசியலை நோக்கி வந்த முன்னாள் போராளிகளும் கூட தமிழ் மக்களின் பொது நிலைவேந்தல்களாக கொள்ளப்படக் கூடிய எதனையும் தனித்து தமக்கானது என்று உரிமை கோரத் தேவையில்லை. அது ஏற்புடையதும் இல்லை. அவ்வாறான சிந்தனையுடையவர்கள் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.

முன்னாள் போராளிகளை நோக்கி, ஏன் குப்பி கடிக்கவில்லை என்ற கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் பெரும் அவமானச் சின்னங்கள். ஏனெனில், அவர்களிடம் குற்றவுணர்ச்சி என்ற மனிதனுக்கு அவசியமான உணர்வு இருக்க வாய்ப்பில்லை. குற்றவுணர்ச்சியும் அதுசார் மனித இயக்கமும் இல்லாத யாரும் போராடும் சமூகங்களில் இருக்க முடியாது. நீதிக்கான கோரிக்கைதான் போராட்டங்களில் அடிப்படை. அதனை உணர்ந்து கொள்வதற்கு குற்றவுணர்ச்சி மிகவும் அவசியமானது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction